தொடர்கள்
தொடர்கள்
 சென்னை மாதம்  -   120-ஆர் . ரங்கராஜ்

20240129201312331.jpg

திருமங்கையாழ்வாரருளிய திருநெடுந்தாண்டகம் பாடல் திருநீர்மலையை குறிக்கிறது;

திருநெடுந்தாண்டகம் என்பது வைணவ சமயத்தின் பனிரெண்டு கவிஞர்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரருளிய நூலாகும். இது தாண்டகம் என்ற செய்யுள் வகையைச் சார்ந்து இயற்றப்பட்டதாகும். திருநெடுந்தாண்டகம் பாடல் 18 திருநீர்மலையை குறிக்கிறது.

பெயர்க்காரணம்

பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம். ஒவ்வொரு அடியிலும் எட்டு சீர்கள் வந்தால் அது நெடுந்தாண்டகம் என்றுரைப்பர். திருநெடுந்தாண்டகம் என்பது வைணவக்கடவுளைப் பற்றிய செய்யுளாதலால் 'திரு' என்று பெயர் தொடங்குகிறது.

நாலாயிரத்திவ்ய பிரபந்தத்திரட்டில் பங்கு

இது நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் 2052 முதல் 2081 வரையிலான பாடல்கள் இரண்டாவது ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் 30 பாடல்கள் உண்டு.


திருநெடுந்தாண்டகம். பாடல் 18 (2069)

கார்வண்ணந்திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமு மடியிணையும் கமலவண்ணம்
பார்வண்ண மடமங்கை பத்தர் பித்தர்
பனிமலர்மேல் பாவைக்கும் பாவம் செய்தேன்
ஏர்வண்ண வென்பேதை யென் சொற் கேளாள்
எம்பெருமான் திருவரங்க மெங்கே யென்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவே னென்னும்
இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே. (18)


எம்பிரான் கரிய வண்ணமுடைய திருமேனி உடையவன்; செந்தாமரை மலரை யொத்த திருக்கண்கள், செவ்வாய். திருக்கரங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளவன்; பூமிக்கு அதிதேவதையான மடப்பமுடைய பூதேவியின் விருப்பங்களை நிறைவேற்றுபவன்; குளிர்ச்சி ததும்பும் செந்தாமரை மலரில் குடிகொண்டுள்ள ஸ்ரீதேவியிடம் அளவற்ற அன்பு செலுத்துபவன். இதுபோல் கட்டுக்குள் அடங்காத அளவற்ற பெருமைகளை உடைய எம்பிரான் மீது என் மகள் அதிக ஈடுபாடு கொண்டுள்ளாள். என் வயிற்றில் பிறந்த என் மகள் பெருமாள் மீதுள்ள அன்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் எனது சொற்களுக்குச் செவி சாய்க்க மறுக்கிறாள். தன்மீது ஆழ்ந்த ஈடுபாட்டை உண்டாக்கிய கார்வண்ணன் உறையும் திருவரங்கம் "எங்கே உள்ளது" எனப் பிதற்றுகிறாள். "கடல்நீர் போல் குளிர்ச்சியான தன்மையை உடையவனும் நீர்போன்ற திருமேனியை உடையவனுமான பரமன் குடி கொண்டுள்ள திருநீர்மலைக்குச் செல்வேன்" என உறுதி படக் கூறுகிறாள். பெண்ணுக்குரிய நாணத்தையுடைய வர்கள் செய்யும் செயல் இதுவா?

(உனது செயல் நம்குலத்திற்கு ஏற்றதன்று எனத் தாயார் அறிவுரை கூறியும் தலைவி மனம் மாறவில்லை. இவளது உறுதியை மாற்ற இயலாது என உணர்ந்த தாய் "உனது விருப்பம்தான் என்ன?" என இறுதியாக வினவினாள். "இனி நான் இங்கிருந்து பரமனை அழைக்கமாட்டேன். அவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்கு நேராகவே செல்வேன்" எனத் தலைவி விளம்பினாள். அங்கு தன்னை விசாரிக்க வந்தவர்களிடம் "எனது மகள் தனது பெண்மைக்குரிய குணங்களை விட்டுவிட்டுத் திருமாலிடம் அன்பு பூண்ட அடியார் களைப் போல் அவரையே நேரில் கண்டு செல்லுகிறாளே" என முறையிடுகிறாள்.

சிறிய திருமடல்

திருமால் உறையும் திருத்தலங்களுக்கு மடலூர்ந்து செல்வதாகத் தலைவி கூறுகிறாள். இத்தலங்களுள் திருநீர்மலையின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை"

(2673 - வரி 73)

பெரிய திருமடல்

2674
நென்னலை யின்றினை நாளைனய - நீர்மலைமேல் வரி மன்னும் மறை நான்கும் ஆனானை 130

(காலத்தைக் கணித்து அறியக் கூடியவனாகக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் நிர்ணயம் செய்பவனாகத் திருநீர் மலையில் அழியாப்புகழுடைய நான்கு வேதங்களால் போற்றப்படும் எம்பிரான் எழுந்தருளியுள்ளார்.)

திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டு திருப்பதி அந்தாதி

திருமலை நாயக்கர் (கி.பி. 1623 1659) ஆட்சிக் காலத்தில் வைணவ அந்தண குலத்தைச் சார்ந்த அழகிய மணவாளதாசர் எனப்படும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வாழ்ந்து வந்தார். இவர் தமிழ் மொழியிலும் வைணவ சமயத்திலும் தீவிர ஈடுபாடு உடையவர். சிலகாலம் அரசரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

(தொடரும்)