தொடர்கள்
தொடர்கள்
சந்திப்போம் பிரிவோம்- 5-பொன் ஐஸ்வர்யா

அமெரிக்க அனுபவங்கள்

20240318163816305.jpg
நாசாவின் சந்திரமண்டலத்து நினைவலைகளோடு விசிட்டர் காப்ளக்ஸ்
வரும் வழியில் 491 ஏக்கரில் பரவி கிடக்கும் 2,50,000 சோலார் பேனல்கள்,
சூரியஒளி மூலம் 74 மெகாவாட் சுயசார்பு மின்சார உற்பத்தி. வலது புறத்தில்,
தனியார் விண்வெளி பயணங்களில் முன்னோடி எலன் மஸ்க் ஸ்பெஸ்-X
போன்ற நிறுவனங்கள்.
ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு முறையும் விண்வெளிக்கு பயணிக்கும்
போது புதிய புதிய ராக்கெட்டுகளை வடிவமைத்து அவை ஒவ்வொரு
ஸ்டேஜாக உயரச் சென்று புவியீர்ப்பிலிருந்து வெளியேறி விண்ணில்
விண்கலங்களை நிலை நிறுத்தியதும், சுமந்து சென்ற ராக்கெட்டுகளின் ஆயுசு
முடிந்து போய் அவை அங்கேயே மடிந்து போயின.
விண்ணிலிந்து பூமி திரும்பும் வீரர்கள், இரண்டாயிரம் டிகிரி வெப்பத்தைத்
தாக்குப் பிடிக்கும் கேப்சூல்களில் தங்களை அடைத்துக் கொண்டு, பூமியின்
ஈர்ப்பு விசைக்குள் நுழைந்து பாராசூட்டுகள் மூலம் வேகத்தை மட்டுப்படுத்தி,
கடற்பரப்பிலோ பாலைவனத்திலோ கவனமாக விழுந்து எழுவது வழக்கம்.
இந்த முறையில் பாதுகாப்பு குறைவு, செலவும் கட்டுபிடியாக வில்லையாம்.
எனவே விண்வெளிப் பயணத்தை விமானப் பயணம் போல அமைக்கலாமா
என்ற யோசனையில் உதித்தது ஸ்பேஸ் ஷட்டில் என்கிற மறுசுழற்சி
ராக்கெட்டுகள். பூமியிலிருந்து ராக்கெட்டாய் விண்ணிற்குப் போய்
விண்ணிலிருந்து விமானமாய் பூமிக்கு வந்து சேரும் வித்தை கற்ற
ஷட்டில்கள் இவை .
1983 முதல் 2011 வரை சேலன்ஜர், என்டர்பிரைஸ், டிஸ்கவரி, எண்டேவர்,
கொலம்பியா, அட்லாண்டிஸ் என்று ஆறு ஷட்டில்களை நாசா உருவாக்கியது.

மொத்தம் 135 பயணங்கள், 355 வீரர்கள் என்று மண்ணுக்கும்
விண்ணுக்குமாய் நடந்தேறின. துரதிஷ்டவசமாக 1986ல் சேலன்ஜர் ஏழு
பேரொடு புறப்பட்ட எழுபத்துமூன்று நொடிகளில் வெடித்துச் சிதறியது. 2003ல்
கொலம்பியா ஷட்டிலும் விண்ணிலிருந்து திரும்பும் வழியில் வெடித்து
விழுந்தது.கொலம்பியா ஷட்டிலில் பயணித்த இந்திய வம்சாவளி விண்வெளி
வீராங்கணை கல்பனா சாவ்லா உள்ளிட்ட எழுவர் பலியாகினர்.
2011ல் ஷட்டில் பயணங்கள் முழுமையாக நிறுத்தப்பட, எஞ்சிய நான்கு
ஷட்டில்களில் அட்லாண்டிஸ் நாசாவில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
ஸ்பேஸ் ஷட்டிலின் உட்புற அமைப்பு, காக்பிட் மற்றும் ஆயிரத்து எழுநூறு
டிகிரி செண்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கக்கூடிய செதில் செதிலான
வெப்பம்தாங்கி (heat tiles) ஓடுகள் எல்லாம் அருகில் சென்று பார்க்க முடிகிறது.
கல்பனா சாவ்லாவின் கொலம்பியா இது போன்ற ஒரு ஓடு
பழுதானதால்தான் விபத்துக்குள்ளானது என்று பேசப்பட்டது
நினைவிருக்கலாம். ஷட்டிலில் பயணித்த பழைய விண்வெளி வீரர்களை
வரவழைத்து பார்வையாளர்களோடு உரையாட வைப்பது இங்கு சிறப்பம்சம்.
ஒரு விண்வெளி வீரர் , சீருடையில் அமர்ந்து பார்வையாளர்களுக்கு
ஆட்டோகிராஃப் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
1998ல் நிலைநிறுத்தப்பட்டு விண்ணில் நானூறு கிலோமீட்டர் உயரத்தில்
ஒன்றரை மணிக்கு ஒரு முறை பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச
விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) ஷட்டில்கள்தான்
முதுகெலும்பாக செயல்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு வரை ஸ்பேஸ்
ஷட்டில்கள்தான் நிறைய மனிதர்களையும், பொருட்களையும் சர்வதேச
விண்வெளி நிலையத்திற்கு சுமந்துள்ளன. சர்வதேச விண்வெளி நிலையம்
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட உலகின் பதினாறு நாடுகளின்
கூட்டமைப்பில் இயங்கி வருகிறது. இங்கு பன்னாட்டு விஞ்ஞானிகள்
வானியல், வானியல் இயற்பியல் அறிவியல், பொருள் அறிவியல், வானிலை,
விண்வெளி மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள்
நடைபெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் சிறிய அளவிலான
மாதிரி ஒன்றில் குழந்தைகள் சென்று வர அனுமதிக்கப் படுகிறனர்.

புகழ்மிக்க நாசா விண்வெளி மையத்தைப்
பார்த்து விட்டு திரும்பும் வழியில், தற்போதைய ஹீரோ எலென் மஸ்க்
பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. 1995ல் அமெரிக்க மண்ணில்
தனது இருபத்தி நாலாவது வயதில் கால் பதித்த எலன் மஸ்க், இன்றைய
தேதியில் டிரைவர் இல்லாமல் தானாய் இயங்கும் டெஸ்லா கார்கள்,
ஸ்பேஸ்-X தனியார் ராக்கெட்டுகள், மனித மூளையை சிலிக்கான்
சில்லுலோடு இணைக்கும் நியூரோலின்க் முயற்சிகள், சோலார் சிட்டி,
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆராய்ச்சி, தரைக்கடியில் விமானவேக
ரயில் போக்குவரத்து என அனைத்துத் தளங்களிலும் புரட்சி செய்து வருகிற
மாமனிதர். உலகின் மிகப்பெரிய பணக்காரரான இவர் “மாற்றி யோசி,
பெரிசாய் யோசி” என்கிற சொற்றொடரின் ஒருமித்த உருவம். 2011க்கு பிறகு
தானே தயாரித்த ரீயூசபல் ராக்கெட்டுகளை ஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்
சேவைகளில் பயன்படுத்தி வெற்றியடைந்த உலகின் முன்னேடி தனியார்
நிறுவனம் ஸ்பேஸ்-X.
நாசா விஞ்ஞானிகளையும், விண்ணிற்கும் நிலவிற்கும் பயணித்த விண்வெளி
வீரர்களையும், விண்ணூர்திகளை வாடகைக்கு ஓட்டும் எலன் மஸ்க்கையும்
வழிநெடுக வியக்காமல் இருக்க முடியவில்லை!
அமெரிக்க வாழ்க்கையின் சிறப்பம்சங்களை அடுத்த வாரம் பார்ப்போம்…