தொடர்கள்
ஆன்மீகம்
பாவ வினைகள் போக்கும் பூம்பாறை முருகன் கோயில் !! - ஆரூர் சுந்தரசேகர்.

Poomparai Murugan temple where sins are removed!!

திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் மேல்மலைப் பகுதியான பூம்பாறை கிராமத்தில் மூன்று ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முருகன் குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.

“பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு
பூம் கதலி கோடி – திகழ் சோலை

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு
பூம்பறையில் மேவும் – பெருமாளே.” (திருப்புகழ்)


சித்தர் போகரின் நவபாஷாண முருகர்:
இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால்உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன,
அவை 1, பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை. பழநி முருகனும், பூம்பாறை முருகனும் உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும்.

Poomparai Murugan temple where sins are removed!!


சுமார் 10 அல்லது 12ம் நூற்றாண்டில் சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பழனி மற்றும் பூம்பாறை (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, போகர் தான் கற்று வந்த கலைகளைச் சோதிக்க அதற்கான மூலிகைகள், ரசாயனப் பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்தச் சிலையைப் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்குத் தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு மறுபடியும் சீன நாட்டிற்குச் சென்று பஞ்சபூத சக்திகளைப் பெற்று யானைமுட்டி குகைக்கு வந்து மேலும் ஒரு நவபாஷாண சிலையை அமைத்தார். அந்தச் சிலையே இப்போதுள்ள பூம்பாறைமலை கோவிலில் மூலவராக உள்ளார்.
பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாசத்தின்போது பூம்பாறைக்கு வந்து இங்குப் போகரால்பிரதிஷ்டைசெய்யப்பட்ட நவபாசன முருகனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சேர மன்னன் இந்த முருகன் சிலையைச் சுற்றி ஒரு மண்டபத்தை எழுப்பினார்.

ஸ்தல வரலாறு:
ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனைத் தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் அசதியில், கோயில் மண்டபத்திலேயே நன்கு அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது அரக்கி ஒருத்தி அருணகிரிநாதரைக் கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாள். மறுநாள் நடந்த சம்பவத்தைத் தனது ஞான திருஷ்டியால் கண்ட அருணகிரிநாதர் முருகனை மனமுருக வழிபட்டார். குழந்தை வடிவில் வந்து தன் உயிரைக் காப்பாற்றியதால் முருகரைக் குழந்தை வேலர் என்று அழைத்தார். இப்போதும் குழந்தையாக இருந்து வேலப்பராக அருள்பாலித்து வருகிறார். இதனை நினைவுபடுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் அருணகிரிநாதருக்குச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்தல அமைப்பு:

Poomparai Murugan temple where sins are removed!!


இக்கோயிலுக்கு இராஜகோபுரம் என்று எதுவுமில்லை. அதற்கு இணையாகக் கருங்கல்லால் கட்டப்பட்ட மூலஸ்தானத்தின் மேல் உள்ள கோபுரம் சுதையால் ஒற்றை நிலை விமானம் நாற்கர வடிவிலான சிகரத்துடன் உச்சியில் உலோக கவசத்துடன் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முகமண்டபம், மகாமண்டபம், இடைநாழிகை, கருவறை ஆகியவைகளைக் கொண்டுள்ளது. கோயில் கருவறைக்கு எதிரில் பிரகாரத்தில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத் தூண் போன்றவை அமைந்துள்ளன. கருவறையில் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணத்தால் அமைக்கப்பட்ட குழந்தை வேலப்பர் மேற்கு திசையை நோக்கி அருள் பாலிக்கிறார். இங்குள்ள குழந்தை வேலப்பரின் உருவமானது பழனி தண்டாயுதபாணியைப் போன்ற ஒத்த உருவத்தில் உள்ளார். இரு கைகளுடன் உள்ள அவர் வலக் கையில் தண்டத்தையும், இடக் கையைத் தொடையின் முன்புறம் வைத்த வரத முத்திரையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இந்தக் குழந்தைவேலப்பர் சமபாத நிலையிலும் பழனி தண்டாயுதபாணி திரிபங்க நிலையிலும் காணப்படுகிறார். கருவறையின் வடக்கில் கிழக்கு நோக்கிச் சிவனுக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், பைரவர், நவகிரகங்கள், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன்புறம் இடைநாழிகையின் வெளிப்புறச் சுவரில் சிவகாமி உடனுறை நடராசர், பிரம்மன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன.
கோயிலின் ஸ்தல விருக்ஷம் குறிஞ்சி.

Poomparai Murugan temple where sins are removed!!

ஸ்தல சிறப்பு:
இக்கோயிலானது பழனி முருகன் கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இக்கோயிலில் தேர் வீதி உலா சிறப்பாக நடைபெறும். தேரின் முன்புறம், மற்றும் பின்புறம் வடம் பிடித்துத் தேர் இயக்கப்படுகிறது. இப்படி இருவடத்தேர் இயங்குவதை இங்குக் காணலாம், அத்துடன் முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது சுமார் 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளாக் காட்சியாகும். இத்தல முருகப் பெருமானின் அருள் இருந்தால் மட்டுமே அவரை இங்கு வந்த தரிசிக்க முடியும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்:
பூம்பாறை முருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை ஷஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஸ்கந்த ஷஷ்டி, திருக் கார்த்திகை தீபம், தைப் பொங்கல், தைப்பூசம், தைக்கிருத்திகைபங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை அல்லது மாசி மாதத்தில் பத்துநாள் உற்சவமும், தேர்த் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

Poomparai Murugan temple where sins are removed!!

பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டிப் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறப் பல்வேறுவிதமான நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர். மேலும், குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதேபோல, பூம்பாறை கிராம மக்கள் தங்களது கைகளில் தேங்காய் வைத்து, தரையில் உருண்டு கோயிலைச் சுற்றி நேர்த்திக் கடன் செலுத்துவர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குப்பட்டது.

கோயிலுக்குச் செல்லும் வழி:
பூம்பாறையில் அமைந்துள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயிலுக்குக் கொடைக்கானல் பேருந்து நிலையம், சுமார் 20 கி.மீ. தொலைவிலும், மதுரை விமான நிலையம், சுமார் 153 கி.மீ.தொலைவிலும், பழனி ரயில் நிலையம், சுமார் 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பூம்பாறைக்கு அரசுப் பேருந்துகள், மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாவ வினைகள் போக்கும் பூம்பாறை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!

https://youtu.be/4l65d6WW4aU?si=9SAf29lExSx5IuJa