அன்று மாலை
என் பிள்ளை நெட்ஃபிளிக்ஸில் துப்பறியும் கதை சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகிலே என் பேரனும் கதையோட்டத்தைப் புரிந்து கொண்டு, அதைத் தகப்பனோடு உரையாடியபடி இருந்தான்.
பேரன் பேச்சில் என் கவனமும், திரையில் ஒரு கண்ணுமாய் சோபாவில் பள்ளி கொண்டிருந்தேன்.
கையில் பாஞ்சஜன்யமாக ஐபோன்.
கால்மாட்டில் இருக்கவேண்டிய லட்சுமிதேவி மாதுங்காவுக்கு ஷாப்பிங் போயிருந்தாள்.
திரையில் ஹீரோவும் அவன் காதலியும் நெருக்கமாய் இருந்த சீன் வந்தது.
என் பிள்ளை அமுங்கிய குரலில் குழந்தையிடம் சொன்னான் .... "ஆரியன்! கண்ணைப் பொத்திக்கோ".
ஆர்யன் இரண்டு கைகளாலும் கண்ணைப் பொத்திக் கொண்டான். ‘ம்யூட்’ அமலுக்கு வந்தது. சில நொடிகளில் திரையில் காட்சி மாறிவிட்டது.
"கண்ணைத் திறக்கவா?" என அனுமதி கேட்டு பேரன் கண்ணைத் திறந்தான்.
"ஆர்யன் அருகில் இருக்கும் போது இதையெல்லாம் பார்க்காதே" என பிள்ளையைக் கடிந்து கொண்டேன். அவனும் ஏதோ சமாதானம் சொன்னான்.
மறுநாள் வாக்கிங் போகும்போது யோசித்தேன்.
எல்லா அப்பன்களும் பிள்ளைகளும் தலைமுறை தப்பாமல் ஆடும் ஆட்டம் தானோ இது?!
இன்று சீரியல் பார்த்த அப்பனான என் மகன், இரண்டரை வயசுக் குழந்தையாயிருந்த காலம்.
1985ஆம் வருடம். கல்கத்தாவில் இருந்தோம். வீட்டுக்கு அருகே இருந்த திரையரங்கில் அன்றே வெளியிடப்பட்ட 'ராம் தேரி கங்கா மெய்லி' என்ற ஹிந்திபடத்துக்கு குழந்தையுடன் போயிருந்தோம்.
அது ராஜ்கபூரின் கடைசிப் பிள்ளை ராஜிவ் கபூர், மந்தாகினி நடித்த படம்.
படத் தயாரிப்பு செலவு அதிகமானதால் மந்தாகினிக்கு அளவு குறைந்த உடைகளே வாங்கியிருந்தார்கள்.
வெய்யிலுக்கு காற்றோட்டமாய் இருப்பதால், தாராளமாக மந்தாகினியும் அதை அணிந்து நடித்திருந்தார்கள்.
ஒரு பாடல் காட்சியில், ஒற்றைத்துணி சுற்றி அருவியில் சுழன்று சுழன்று மந்தாகினி குளிக்க, மடியிலிருந்த நம்மாளு சுறுசுறுப்பாகி, திரையை நோக்கி கையை நீட்டி ஏதோ கத்த ஆரம்பித்தான். ரொம்பவே டென்ஷனாகி விட்டேன். இதென்ன 'கருவிலேயே திரு'வா?!
என் அதட்டலுக்கு செவிமடுக்காதவன் குரலெடுத்து மழலையில் 'பிரிட்ஜ்...பிரிட்ஜ் ' என்று மீண்டும் கத்தினான். பாடல்காட்சியில் கண்ட பாலம் தான் அவனுடைய கவனத்தில் இருந்திருக்கிறது! அக்கம்பக்கம் காட்சியில் லயித்து, விறைப்பாய் அமர்ந்திருந்தவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். திரையில் கிறுக்குப் பாடம் நடக்கையில் இடையிலே குறுக்குப் பாலமா! .
அவன் ரைம்ஸ் புத்தகத்தில் இருந்த பிரிட்ஜ் படத்தை நினைவு கூர்ந்திருக்கிறான்.
நான் தான் தப்பா நினைச்சிகிட்……… ச்ச்சே…..
அருகிலமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம்,
"சீ... பிரிட்ஜ்ஜை தான் பார்த்திருக்கான்'' என்றேன்.
"யாருக்கு என்ன தேவையோ அதையே பார்க்கிறார்கள்" என்று பதில் சொன்னாள் ஷேக்ஷ்பியரின் பேத்தி ஆங்கிலத்தில்....
'யாரைச் சொன்னா இவ?' என்ற கேள்வி இப்போதும் என் மண்டையைக் குடைகிறது நாப்பாத்து நாலு வருஷமா.
Leave a comment
Upload