விக்னேஷ் ஈஸ்வர் கச்சேரி: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா 10-04-2024; எச் கே வெங்கட்ராம் வயலின்; திரு உமையாள்புரம் சிவராமன் ம்ரிதங்கம்; குருபிரசன்னா கஞ்சிரா.
மேடையில் மற்றவர்க்கு மரியாதை தரும் விக்னேஷ் ஈஸ்வர்
அன்று அரங்கத்தில் ஒரே சூடு , அதிக அளவில் ஈரப்பதம் மின்விசிறிகள் இல்லை. ஆனால் இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்! ஏனென்றால் சில பந்தல்களில் பிரம்மாண்டமான மின்விசிறிகளை போட்டு விடுகிறார்கள். அவை பாட வந்திருக்கும் கலைஞர்களோடு போட்டி போட்டுக்கொண்டு பாடத்தொடங்கி விடுகின்றன. ஆனால் பத்து நிமிடங்களுக்குள் தெப்பநிலையால் வந்த இக்கட்டுகள் எல்லாம் மறந்து ஒரு அழகான இசை மழையில் நினையத்தொடங்கினோம்.
விக்னேஷிடம் மிக நல்ல குணம் ஒன்று நான் கவனித்திருக்கிறேன். தன்னுடைய கச்சேரிகளில் எல்லாம் அவர் தனது பக்கவாத்தியக்காரர்களுடன் சரிசமமாக மேடையில் உட்காருகிறார். இன்றும் அப்படித்தான்: பெங்களூரின் நம்பர் ஒன் பிடில் வித்துவானான எச் கே வெங்கட்ராம் அவர்களும் விக்னேஷும் சமநிலையில் மேடையில் உட்கார்ந்து இருந்தார்கள். பிரபல கஞ்சிரா நிபுணர் குருபிரசன்னா, ஸ்ரீ உமையாள்புரம் சிவராமன் அவர்களுக்கு நேர் எதிராக உக்கார்ந்திருந்தார்.
"சலமேல" என்று தொடங்கும் நாட்டக்குறிஞ்சி பதவர்ணத்துடன் விக்னேஷ் கச்சேரியை தொடங்கினார். தொடர்ந்து கல்யாணியில் "பிரான-ப்ரொவ இதே" என்கிற மிக அழகான பஞ்சநாத ஐயர் அவர்களின் பாட்டை பாடினார். அடுத்து "ராமாபி ராமா" என்கிற தியாகராஜர் பாட்டு பாடும் பொழுது விக்னேஷ் ஏன் இவ்வளவு மதிப்பு தக்க இடத்தை ஏற்கனவே அடைந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. அந்த தர்பார் ராக ஆலாபனா மிகவும் நிதானமாகவும் இதமாகவும் இருந்தது. ராகலட்ஷணங்கள் எல்லாம் மிகவும் தெளிவாக வெளிக்கொண்டுவரப்பட்டன. அதைத் தொடந்து "ஸ்ரீ ராமம் ரவிகுலாப்த ஸோமம்". நாராயணகௌளா எனப்படும் ஒரு அபூர்வ ராகத்தில் அமைந்த இந்தப் பாட்டை அடிக்கடி கேட்கக்கிடைப்பதில்லை. அந்த காலத்தில் ஏசுதாஸ் பாடி நான் கேட்டிருக்கிறேன். இந்த பாட்டை எப்பவுமே நிதானமாக சவுக்க காலத்தில் தான் பாட வேண்டும். விக்னேஷ் இதை அந்த மாதிரி நிதானமாக, கர்நாடக சங்கீதத்தின் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் மிகவும் அழகாக பாடி முடித்தார்.
அடுத்ததாக சாளகபைரவி ராகத்தில் தியாகராஜரின் "பதவிநீ" என்கிற பாட்டு. அந்த பாட்டு ரசிகப்பெருமக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்று பலத்த கைத்தட்டலில் தெரிந்தது. திரு உமையாள்புரம் சிவராமனுக்கும் இது மிகவும் பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் செம்மங்குடி சீனிவாச ஐயருடன் சேர்ந்து இதை பல நூற்றுக்கணக்கான முறை வாசித்திருக்கிறார் தன்னுடைய இளமை பிராயத்தில்.
காம்போஜியில் மெய்ம்மறந்து….
அன்றைய தினம் மெயின் ரகம் காம்போஜி. அதில் "ஓ ரங்கசாயி" என்கிற தியாகராஜரின் மிகவும் அழகான பாட்டை எடுத்துக் கொண்டார் விக்னேஷ். காம்போஜி ராகத்திற்கு தன் வகையாக ஒரு ஸ்பெஷல் ஸ்டாம்ப் கொடுக்க விரும்புகிறார் என்பது அவர் காம்போஜியை கையாளுவதில் இருந்து தெரிகிறது. ஒரு ம்ரிதுவான தென்றல் காற்று வரும் சமயத்தில் வெளியில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கால்களை நீட்டிக்கொண்டு நிம்மதியாக உலகிலேயே வேறு ஒரு கவலையும் இல்லாதது போல் மெய்ம்மறந்து அதை என்ஜாய் பண்ணுவது போல ஒரு நிலையை உண்டாக்கிவிட்டார் விக்னேஷ். அந்த தென்றல், சூடு, ஈரப்பதம் இரண்டும் கலந்த அன்றைய சாயங்கால வேளையில் மிகவும் இதமாக இருந்தது. விக்னேஷ் தன்னுடைய கச்சேரியை இரண்டு துக்கடாக்கள் பாடி முடித்துக் கொண்டார். மாண்டு ராகத்தில் புரந்தர தாஸரின் "பாண்டுரங்க பாரோ" என்ற பாட்டு, அதுக்கடுத்தார்போல் சுருட்டி ராதத்தில் ஊத்தக்காடு மகாகவியின் தில்லானா. கடைசியில் மங்களம் பாடி முடித்துக் கொண்டார்
தனிஆவர்த்தனம்.
கச்சேரி ஆரம்பம் ஆவதற்கு முன்னால் சிவராமனுடைய சிஷ்யர் கார்த்திக் தன் குருவை கைபிடித்து மெதுவாக சில படிகள் ஏறி கச்சேரி மேடையில் உட்கார வைத்தார். அவருடைய கால்கள் 88 வருடங்களாக வேலை செய்து கொண்டு வருகிறது என்பதை அவர் நிலையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த கால்களுக்கும் அவர் கைகளுக்கும் ஒரு விதமான சம்பந்தமும் இல்லை! அந்த கைகளில் ஒருவிதமான மந்திரம் ஏதோ கலந்தார்ப்போல் அவர் வாசித்துக் கொண்டிருந்தார்! நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கடவுளுக்கு மனதார நன்றி வணக்கம் தெரிவித்துக்கொண்டேன், இந்த மாதிரி ஒரு நல்ல பாக்கியத்தை கொடுத்ததற்காக.
குருபிரசன்னாவும் ஒரு பெரிய மகானுடன் கூட இணைக்கொடுத்து வாசிப்பது அந்த இளைஞரின் தன்னம்பிக்கையை காட்டியது. பலத்த கரகோஷத்துடன் ரசிகர்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்தனர்
மங்களம் பாட்டில் மட்டும் அல்ல எல்லார் மனதிலும் நிறைந்தது.
நாளைய ம்ரிதாங்க விதுஷி* *?
Leave a comment
Upload