தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 66 "காளமேகப் புலவரின் திறமை"- பரணீதரன்

இந்த வாரம் காளமேகப் புலவரின் மிகச்சிறந்த பாடல்களில் ஒரு சில பாடல்களை பார்ப்போம் என்று பரணீ ஆரம்பிக்கிறார்.

காளமேகப்புலவர் இவ்வாறு மற்ற புலவர்களை ஏளனமாக பேசியதை கேட்ட அதிமதுரக் கவிராயரும் மற்ற புலவர்களும், அவருடைய ஆசுகவி திறனை சோதனையிட முடிவு செய்தனர். அதனால் அவர் அரிகண்ட போட்டிக்கு தயாரா என்று கேட்கிறார்.

20240326202744337.jpg

அரிகண்டம் என்பது போட்டியில் புலவர் தோற்றால் அவருடைய கழுத்து வெட்டப்படும். அதற்குப் புலவர் அரிகண்டம் எதற்கு நாம் எமகண்ட போட்டியில் ஈடுபடுவோம் என்று கூறுகிறார்.

20240326202831795.jpg

எமகண்ட போட்டி என்பது அரிகண்டத்தை விடவும் மிகவும் கொடூரமானது. மேலே உள்ள படங்களில் அரிகண்டமும் எமகண்டத்தின் ஒரு பகுதியும் உள்ளது. இவைகளின் விவரம் மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதால் இவற்றை முழுவதுமாக நான் விளக்கவில்லை. போட்டி ஆரம்பமாகிறது. காளமேகப்புலவரை பார்த்து ஒவ்வொரு புலவராக கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

முதலாவதாக அவரை செருப்பு என்று ஆரம்பித்து விளக்கமாறு என்று முடியும் படி பாடச் சொன்னர். பொதுவாக செருப்பு மற்றும் விளக்கமாறு ஆகிய பொருட்களை ஏளனமாகவே நாம் பார்ப்போம். அவற்றை வைத்து பாடல் பாடுவது என்பது அனைவருக்கும் இயலாத காரியம். ஆனால் நமது புலவரோ,

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்

தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்குமாறே என்று பாடுகிறார்.

இதற்கு பொருள் போருக்கு செல்லும் வீரர்களை கொன்று அழிக்கும் வேலனாகிய மலைகளின் (குறிஞ்சி) நாயகனாகிய முருகப்பெருமானை அனைத்துக் கொள்வதற்கு என்ன வழி என்பதை வாசனை மிக்க குளிர்ந்த தாமரை மலர் மேல் உட்கார்ந்திருக்கும் வண்டே நீ விளக்குவாயாக என்று பாடுகிறார். இதைக் கேட்டு அனைவரும் மிகவும் அதிசயப்பட்டு போனார்கள்.

அடுத்ததாக ஒரு புலவர் குடத்திலே கங்கை அடங்கும் என்று பொருள் வருமாறு பாடச் சொல்கிறார். அதாவது கடல் போல ஆர்ப்பரிக்கின்ற கங்கை ஆறு ஒரு குடத்திற்குள் அடங்கிவிடும் என்பது போல பாட வேண்டும். நமது புலவரும்,

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை

இடத்திலே வைத்த இறைவர்

சடாம குடத்திலே கங்கை யடங்கும் என்று பாடுகிறார்.

இதற்கு பொருள்,

விண்ணுலகிற்கும் அடங்காமல், மலைகளுக்கும் அடங்காமல், பூமிக்கும் அடங்காமல் கங்கை நதி வந்தாலும், உமா தேவியை இடபாகத்தில் வைத்திருக்கின்ற சிவபெருமானின் ஜடா மகுடத்திற்குள் (சடை முடி)கங்கை அடங்கும் என்ற பகிரதன் தவ புராண வரலாற்றை பாடுகிறார்.

இதைக் கேட்ட அனைவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

அடுத்ததாக, ஒரு புலவர் கடவுளற்கு மாறு தலை உள்ளது என்பது போல ஒரு பாடலை பாடுமாறு கூறினார். மாறுதலை என்பது அவர்களின் தலை இல்லாமல் வேறு ஒருவரின் தலை இருப்பதாக அர்த்தம். நமது இதிகாச புராணங்களில் இவ்வாறு இருப்பது பிள்ளையார் மட்டுமே. இதை எப்படி இவர் பாடப் போகிறார் என்று அனைவரும் பார்க்கும் பொழுது நமது புலவரும் பாடலை பாடுகிறார்.

சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை

ஐங்கரற்கு மாறுதலை யானதோ-சங்கைப்

பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்

படித்தோர்க்கு மாறுதலை பார்

அதாவது சங்கரனாகிய சிவபெருமானுக்கு கங்கை ஆறு தலைக்கு மேலே உள்ளது. அதனால் அவருக்கு ஆறு தலை. சண்முகனாகிய முருகப்பெருமானுக்கு ஆறு(6) தலை உள்ளது. நான்கு கைகளும் ஒரு தும்பிக்கையும் உடைய ஐந்து கரத்தனாகிய பிள்ளையாருக்கு மனிதத் தலை இல்லாமல் யானை தலையாக மாறி உள்ளது (மாறுதலை). சங்கை பிடித்த பெருமாள் ஆகிய மகாவிஷ்ணுவிற்கும் தசாவதாரங்களில் பல்வேறு விதமான தலைகள் இருந்திருக்கிறது. வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரத்தில் அவருடைய தலை பன்றி உருவத்திலும் சிங்க உருவத்திலும் இருந்திருக்கிறது. அதனால் அவருக்கும் மாறுதலை. பித்தன் ஆகிய சிவபெருமானே உங்களுடைய பாதத்தை போற்றி பணியும் பக்தர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று கூறுகிறார். இந்தப் பாடலும் மிகவும் நன்றாக உள்ளதாக புலவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்ததாக ஒரு புலவர் முக்கண்ணனுக்கு அரை கண்ணே உள்ளது என்று பாட சொல்லி கேட்கிறார். பொதுவாக சிவபெருமானுக்கு மூன்று கண்கள் உள்ளது. அவருக்கு அரை கண் தான் உள்ளது என்பது போல இவர் பாட வேண்டும். இதை எப்படியும் இவர் பாட மாட்டார் என்று புலவர்கள் மிதப்பில் மிதந்து கொண்டிருந்தார்கள். நமது புலவரும் பாட ஆரம்பித்தார்,

முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர்

அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே – மிக்க

உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்

றமையுமித னாலென் றறி

அதாவது, பெரியவர்கள் அரனை (சிவபெருமானை) முக்கண்ணன் என்று பொதுவாக அழைப்பார்கள். அவருக்கு அரை கண் தான் உள்ளது. எப்படி எனில், சிவபெருமானின் ஒரு பாகமாக உமாதேவி இருக்கிறார். நாள் உமாதேவிக்கு ஒன்றரை கண் சொந்தமாகிறது. கண்ணப்ப நாயனார் தன்னுடைய ஒரு கண்ணை சிவபெருமானுக்கு கொடுத்திருக்கிறார். அதனால் அவருடையது அரை கண் மட்டுமே என்று பாடுகிறார். இதனைக் கேட்ட புலவர்கள் இன்னும் கடினமான கேள்விகளை கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

அடுத்ததாக ஒரு புலவர் கரி என்று ஆரம்பித்து உமி என்று முடிக்க சொல்கிறார். பொதுவாக உமி தான் கரியாகும். ஆனால் இங்கே அவர் மாற்றி பாடச் சொல்கிறார். அதைக் கேட்டு நம் புலவரோ அந்த பாடலை பாட ஆரம்பிக்கிறார்,

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக் காண் சீச்சி உமி

அதாவது கரி என்றால் யானை என்று பொருள். யானைக்கு இன்னொரு பெயர் அத்தி. அத்திக்காயை பொரித்தாள் என்று பொருள் கொள்ள வேண்டும். வாழை மரத்தை நாம் பொதுவாக கன்னி என்று கூறுவோம். அதற்கு காரணம் வாழை மரங்கள் விதையில் இருந்து வருவதில்லை. வாழை மரத்தின் தண்டில் இருந்தே இவைகள் வருகிறது. அதனால் கன்னிக்காய் என்பது வாழைக் காயாகும். வாழைக்காயை நன்றாக வறுவல் ஆக்கினாள் என்று பொருள். பரி என்றால் குதிரை என்று பொருள். அதே நேரத்தில் பரி என்பதற்கு மா என்றும் பொருள் உள்ளது. மாங்காய் பச்சடி செய்தாள் என்று கூறுகிறார். பை என்றால் பாம்பு என்ற பொருள். பாம்பை போன்ற படத்தினை உடைய கத்திரிக்காய் என்பதே அப்பைக்காய் என்று கூறுகிறார். கத்திரிக்காயை நெய் துவட்டல் செய்தாள் என்று கூறுகிறார். இவ்வளவையும் செய்த அத்தை மகள் உப்பை அதிகமாக போட்டதால் அவற்றை சாப்பிட முடியாமல் சீச்சி என்று துப்பிவிட்டேன் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட புலவர்களும் சிற்றின்ப நெடி இல்லாமல் பேரின்பத்திலேயே பாடல்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது பெண்களைப் பற்றி பாடாமல் கடவுளை வைத்து கரி மற்றும் உமி வருமாறு பாடச் சொல்கிறார்கள். அதற்கும் நமது புலவர் பாடுகிறார். அந்த பாடலை நாம் வரும் வாரம் பார்ப்போம் என்று விடை பெற்றார்.