அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
-பழமொழி.
இது பழமொழியாக இருந்தாலும் யாரேனும் ஒருவர் சொன்னதாகத்தானே இருக்கமுடியும். ஆம், பிரெஞ்சு எழுத்தாளர் ‘வோல்டேர்’தான் (Voltaire) கேன்டைட் – Candide (ஆண்டு 1759)என்னும் தன்னுடைய நாவலில் முதன்முதலில் இந்தச் சொல்லாட்சியை 'His face is the index of his mind' என்று பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்று ஐயன் வள்ளுவன் (குறள்:706) கூறியிருக்கிறான். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்போது, அந்த முகத்தின் அழகை நன்முறையில் காட்டுவதுதான் ஒப்பனை (Make-up) அல்லவா!.
பன்னெடுங்காலந்தொட்டே ஒப்பனை செய்துகொள்வது என்பது இருந்தே வந்துள்ளது. இந்தத் தனிமனித ஒப்பனையின் மிகக் குறைந்தபட்சத் தேவை 'முகம்பார்க்கும் கண்ணாடி' என்றால் மிகையாகாது. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் முதன்முதலில் மக்கள் தெளிந்த தண்ணீரையே முகம்பார்க்கும் கண்ணாடியாகப் பயன்படுத்தினர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 'தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே' என்னும் கவிஞர் பொன்னடியான் அவர்களின் கவித்துவமான வரிகளை நோக்கும்போது முதன்முதலில் நீரில் முகம் பார்த்தது வானம்தான் என்று கொள்ளலாம். பின்னர்க் கற்காலம், செம்புக்காலம் போன்ற காலங்களில் எரிமலைக் கற்களையும், உலோகங்களையும் பளபளப்பாக்கி அவற்றை முகம்பார்க்கும் கண்ணாடியாக மக்கள் பயன்படுத்தினர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். மேலும், இவற்றை முகம் பார்க்கப் பயன்படுத்தியிருந்தாலும் அவற்றின் பிற பயன்களாக வாழிடத்தின் வெளிச்சத்தைக் கூட்டுதல், சமிக்ஞைக்காகப் (Signaling) பயன்படுத்துதல், வழிபாட்டு நம்பிக்கைகளில் பயன்படுத்துதல் போன்றவற்றிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களின் கருத்துகளாக உள்ளன.
இவ்வகையில் தற்போதிருக்கும் நவீன முகம்பார்க்கும் கண்ணாடியானது அதன் பரப்பில் மெல்லிய வெள்ளிப்பூச்சுப் பூசப்பட்டு முகம் பார்க்கும் கண்ணாடியாகவும், பின்காட்டும் கண்ணாடியாகவும் (Rear view mirror), பாதுகாப்புக் கண்ணாடியாகவும் (Safety glass) மற்றும் பல பயன்பாடுகளாகவும் பரவியுள்ளது.
இந்த முகம்பார்க்கும் கண்ணாடிக்குச் சங்க இலக்கியங்களில் ஆடிப்பாவை (குறுந்தொகை), நிழல்காண் மண்டிலம் (பரிபாடல்), வயங்குமணி (அகநானூறு) போன்ற பெயர்கள் இருந்தாலும் பின்வரும் பரிபாடலின் பாட்டு உற்றுநோக்கத் தக்கது.
...வாச நறுநெய் ஆடி வான்துகள்
மாசறக் கண்ணடி வயக்கி, வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி…
- பரிபாடல் - வையை (12) - வரிகள்: 19-21
'வந்து மதுரை மதில் பொரூஉம்' எனத் தொடங்கும் இப்பாடலில் வைகை ஆற்றில் புதுவெள்ளம் வந்ததை அறிந்த மதுரை நகர் பெண்கள் எப்படியெல்லாம் தம்மை அலங்கரித்துக்கொண்டு அந்தப் புதுவெள்ளத்தைக் காணச் சென்றனர் என்று கூறுகிறார் புலவர் நல்வழுதியார். அப்படி அலங்கரித்துக்கொண்டவர்கள் கண்ணாடியில் படிந்த தூசிகளை நீக்கித் தம் அழகான உருவை அதில் கண்டனர் என்று கூறுவதே மேற்சொன்ன வரிகள். அதில், கண்ணாடி என்ற சொல்லே ‘கண்ணடி’ என்று கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நிலைக் கண்ணாடியில் பார்த்துத் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர் என்பதையும், அதைக் கிட்டத்தட்ட கண்ணாடி என்றே அழைத்ததையும் நமக்கு அறியத் தந்துள்ள புலவர் நல்வழுதியார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.
அவர்க்கும், நமக்கும், படிப்போர் அனைவர்க்கும் அழகூட்டும் நம் தமிழுக்கு இஃது ஆறாவது முத்தம்.
முத்தங்கள் தொடரும்.
-பித்தன் வெங்கட்ராஜ் ✍️
Leave a comment
Upload