தொடர்கள்
தொடர்கள்
சோழரின் காப்பிய காலம்- I - மரியா சிவானந்தம்

20250701213644292.jpg

புலிக்கொடி விண் முட்ட பறக்க , மண் அதிர படை நடத்தி , குடிகள் காத்து செங்கோல் ஆட்சி நடத்தியது சோழர் பரம்பரை.

"வான் பொய்யினும் தான் பொய்யா காவிரி" நதிப்படுகையில் சோழப் பேரரசு செழித்து வளர்ந்தது.

வீரமும்,ஈரமும் கொண்ட சோழ மன்னர்கள் கலை, இலக்கியத்தை வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர். புலவர்களின் புரவலர்களாக இருந்து தமிழை வளர்க்க பாடுபட்டனர்.

பேரிலக்கியங்கள் , சிற்றிலக்கியங்கள்,பக்தி இலக்கியங்கள் மட்டுமல்ல பரணி,பிள்ளைத்தமிழ்,உலா போன்ற சிற்றிலக்கியங்கள் பல இவர் காலத்தில் எழுந்தன .

சோழர்களின் பொற்காலம் , தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நற்காலமாக அமைந்தது. தமிழின் "காப்பிய காலம்",பக்தி இலக்கியங்களின் காலம்' ,சிற்றிலக்கியங்கள் காலம்” என்றெல்லாம் குறிக்கப்படுகிறது,

அவர் காலத்தில் தமிழில் மிகப்பெரிய இலக்கியங்கள் எழுந்தன. ஐம்பெரு காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை முற்கால சோழர்கள் காலத்தில் தோன்றியது.

பிற்காலச் சோழர் காலத்தில் திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணியும் , வளையாபதி, குண்டலகேசி ஆகிய பிற மூன்று காப்பியங்களும் இயற்றப்பட்டன. சீவக சிந்தாமணி சமண முனிவரால் எழுதப்பட்ட காதல் காவியம் .அதன் மொழியும், காதல் வர்ணனைகளும் காணும் போது அது எழுதியவர் துறவி தானா என்ற ஐயம் நமக்குள் எழுகிறது.

சோழர் காலத்தில்தான் ஐஞ்சிறு காப்பியங்களும் தோன்றின .

உதயகுமார காவியம் ,யசோதர காவியம், சூளாமணி ,நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐஞ்சிறு காப்பியங்களும் சோழர் காலத்தில் எழுந்தன.

பெருவுடையார் கோயில் கட்டிய பரம்பரையின் ஆட்சியில் சமயங்கள் தழைத்தன. பக்தி இலக்கியங்கள் பல எழுதப்பட்டன.

சைவ வைணவ இலக்கியங்கள் பிறந்தன. ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நமக்கு ஆன்மிக வாழ்வின் வழிகாட்டிகளாக இருந்து, இறை அனுபவத்தைத் தரும் தேவாரம் , திருவாசகம் , நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பெரும்பகுதி இக்காலத்தில் தொகுக்கப்பட்டவை. நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகளைத் தொகுத்ததும் இவர் காலத்தில் தான்.

20250701213856324.jpg

சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதல் அமைச்சர். நாயன்மார்களின் சரித்திரத்தை எழுத அரசன் இட்ட ஆணையின்படி தில்லைக்குச் சென்றார் சேக்கிழார்.அங்கு இறைவன் "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுக்க " உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என தொடங்கியதாக நம்பப்படுகிறது. இப்படி பிறந்ததே பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம்.

கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மற்றொரு மகத்தான நூல் கந்தபுராணம் .

"கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல்லை" என்பது வழக்கு . சங்கர சங்கிதை என்னும் வடமொழி புராணத்தை தமிழில் தந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனின் வரலாற்றை முழுமையாக கூறும் இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டது.

20250701213939296.jpg

தமிழின் மிகச் சிறந்த இலக்கண நூல்கள் சோழர் காலத்து நூல்களே.

தொல்காப்பியம் இயற்றப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் இன்று நமக்குக் கிடைத்த அரிய இலக்கண நூல்.

20250701214026646.jpg

நன்னூல் தவிர யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், வச்சணத்தி மாலை போன்ற தமிழின் தலை சிறந்த இலக்கண நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன.

"கல்லாடம் கற்றவனோடு மல்லாடதே' என்ற சொற்றொடர் தமிழில் வழங்கி வருகிறது.

அந்த சிறப்பு மிக்க கல்லாடம் என்னும் நூலை வழங்கினார் கல்லாடனார். ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்நூல் சிவனையும் ,முருகனையும் போற்றும் நூல் .

பரணி என்னும் இலக்கியவகையை முதல் முதலாக அறிமுகப்படுத்திய நூல் கலிங்கத்துப் பரணி.

20250701214117198.jpg

முதல் குலோத்துங்க சோழன் நிகழ்த்திய போரைப்பற்றி, போர் வியூகங்கள் பற்றி எழுந்த நூல் செயங்கொண்டாரின் "கலிங்கத்துப் பரணி". அரசனின் போர்த்திறம் அவரது தளபதியான கருணாகரத் தொண்டைமானின் சிறப்பையும் கலிங்கத்துப்பரணி விவரிக்கிறது.

"ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்னும் சொல்வடைக்குச் உரியவரான ஒட்டக்கூத்தர் மூன்று சோழ மன்னர்களுக்கு அமைச்சராக அவைப்புலவராக இருந்தவர். விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் உலா (மூவருலா), அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டியெழுபது, காங்கேயன் நாலாயிரக்கோவை, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி . என்று பல நூல்களைத் தமிழுக்குக் கொடையாக தந்தவர்.

ஒட்டக்கூத்தர் காலத்தில் சமகால புலவர்களாக இருந்தவர்கள் கம்பரும், புகழேந்திப் புலவரும் !

மேலும் பேசுவோம்

தொடரும்