(ஏ.ஐ. வரைந்த படம்)
துரோணர்
பாரத்வாஜ முனிவரின் மகனாக பாஞ்சால நாட்டில் பிறந்து அக்னி வேஷ்யாவிடம் பயின்று, பின் பரசுராமரிடம் பயிற்சி பெற்று தனுர் வேதத்தில் கரை கண்டவரான துரோணர் கிருபாச்சாரியாரின் சகோதரியை மணந்தார்.
தன் மைந்தன் அஸ்வத்தாமன் மேல் அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். அவன் குழந்தையாக இருந்த போது, கஷ்ட ஜீவனம் காரணமாக பால்ய நண்பன் துருபதனை அணுக, துருபதன் உதவி கிட்டாமல் பாஞ்சால நாட்டை விட்டு துரோணர் ஹஸ்தினாபுரம் சென்றார். பீஷ்மரால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சி கொடுக்க ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
வேட்டுவ குலத்தில் பிறந்த ஏகலைவன் துரோணனை பற்றி கேட்டு மகிழ்ந்து அவரை தன் இலட்சிய குருவாக எண்ணி அவரிடம் வில்வித்தை கற்பிக்க வேண்டினான். துரோணர் மறுத்ததால் அவரைப் போன்ற சிலையை செய்து குருவாக பாவித்து பயிற்சி மேற்கொண்டு வில்வித்தை கற்றான். ஏகலைவன் புகழ் துரோணரையும் எட்டியது. வனம் சென்று ஏகலைவனை கண்டு பூரித்ததோடு குருதட்சணையும் கேட்டார். உயரிய பண்பும் தியாக உணர்வும் கொண்ட ஏகலைவன், ஒரு கணமும் தயங்காமல் கட்டை விரலை அறுத்து துரோணாச்சாரியாரின் திருவடிகளில் வைத்து வணங்கி வணங்கினான். அவன் உயர்ந்த உள்ளம் அறிந்தபின் அவனை பாராட்டி வாழ்த்தினார்.
இமயமலை சாரலில் தவம் செய்த அர்ஜுனனை சிவன் சோதித்தார். "அப்போது எங்கள் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கட்டைவிரலை இழக்க காரணமாக இருந்த துரோணரின் சீடனா நீ? " என்று ஆத்திரத்தோடு வில்லை வளைத்து அர்ஜுனனிடம் போரிட்டார்; பின் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தை கொடுத்தார்.
பாண்டவர்களின் நற்குணங்களாலும் அர்ஜுனனின் திறமையாளும் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் நல்லெண்ணம் கொண்டிருந்தார். ஆயினும் மகாபாரத யுத்தத்தில் கௌரவ அணியில் இருந்து பீஷ்மருடனும் கர்ணன் கிருபர் அஸ்வத்தாமன் ஆகியோருடனும் இணைந்து துரியோதனுக்காக போராடினார். 10 நாட்கள் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் வீழ்ந்தபின் கௌரவ சேனைக்கு தலைமையேற்று 5 நாட்கள் வழி நடத்தினார்; அப்போது கர்ணனும் இணைந்து கொண்டான். பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் எதிர் அணியில். பீஷ்மர் தலைமையில் போரிட்ட நாட்களில் துரியோதனிடம் பாண்டவர்களின் வெற்றி குறித்து எடுத்துரைத்து இயன்றவரை போரிட்டார். "துரோணரை யுத்தத்தில் வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை" என்பது கண்ணனின் கூற்று.
13ஆம் நாள் யுத்தத்தில் யுத்த நெறிகளுக்கு புறம்பாக துரோணர் அபிமன்யுவின் கவசத்தை பின்னாலிருந்து உடைக்கவில்லை. கர்ணன் அவ்வாறு உடைத்ததும் அபிமன்யுவின் தேர் குதிரைகளை வெட்டி சாய்த்தார்.
14ஆம் நாள் யுத்தத்தில் துரோணரை தாண்டி(பைபாஸ் செய்து) "உம்மை யுத்தத்தில் தோற்கடிக்க கூடியவர் உலகில் இல்லை" என நைட்சியமாக கூறி துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பார்த்தன் இலகுவாக கடந்து விட்டான். தன்னை கடிந்த துரியோதனனிடம் மந்திர சக்தி வாய்ந்த கவசத்தை கொடுத்து அனுப்பினார். அன்றைய தினம் சபதப்படி ஜெயத்ரதனை அர்ஜுனன் வதம் செய்தான். அன்றிரவு நடந்த போரில் கடோத்கஜனை கொன்று கர்ணன் (அர்ஜுனுக்காகவே இருந்த) சக்தி ஆயுதத்தை இழந்தான்.
15 ஆம் நாள் யுத்த களத்தில் துரோணர் தேருக்கு முன் தோன்றிய மரீசி முனிவரும் அகத்திய முனிவரும் "நீ ஓர் அந்தணன். சாந்த குணத்தினால் சத்திய செயல்களை செய்து, உண்மையின் வழியில் வெற்றியை பெற வேண்டியது உன் குலதருமம். நாசக்கருவிகளான ஆயுதங்களை விட்டு, விட்டொழித்து சத்திய சிந்தனையில் இறங்க வேண்டும்" என நினைவூட்டி வாழ்த்தி சென்றனர்.
பின் யுத்தத்தில் அன்றைய திட்டப்படி பீமன் அஸ்வத்தாமன் என்ற புகழ்மிக்க யானையை கொன்றான்; அதை துரோணர் காது படக் கூறினான். அவரோ ஐயத்துடன் தருமரை கேட்க (பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின் என்ற பொருள்பட கூறிய கண்ணனின் அறிவுரை கேட்ட) தருமர் ஆமோதிக்கும் தொனியில் பதில் கூறினார்; தருமரின் தேர் நாலு அங்குலம் கீழ இறங்கி மண்ணை தொட்டது.
போர்க்கள நிகழ்வை சரியாக புரிந்து கொள்ளாத (எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை மறந்த) துரோணரிடம் பீமனும் "பிராமணர்கள் தன் தொழிலை விட்டு சத்திரியர்களுடைய தொழில் புகுந்ததால் அரசர்களுக்கு ஆபத்து வந்தது. கொல்லா விரதமே மேலான அறம் என்றும் அந்த அறத்திற்கு பிராமண குலமே வேர் என்றும் அறிந்த நீர் வெட்கமின்றி கொலை தொழில் செய்து வருகிறீர்” என நிந்தித்தான்.
துரோணர் ஆயுதங்களை கீழே வைத்து விடவே (துரோணரால் பயிற்சி அளிக்கப்பட்ட) திருஷ்டத்யும்னன் பழிவாங்க தருணம் கிட்டியது .
குறளும் பொருளும்
எல்லா உயிர்களும் பிறப்பில் ஒன்றே; பிற்பாடு செய்யும் தொழில்கள்தான் அவர்களை வேறுபடுத்துகின்றன.
பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் 972
உரிமைகளை நீக்கி விடாத நட்பே பழைய நட்பு என்பது.
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு 801
கிட்டேயும் போகாமல், தூரத்திலும் இல்லாமல், நெருப்பில் குளிர் காய்பவர்களைப் போல (துரோணர்) மன்னரிடம் பழக வேண்டும்..
அகலாது அணுகாது தீக்காய்வர் போல
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார். 691
தீங்கு செய்தால் பொறுத்துக் கொள்வது நல்லது; மறந்துவிடுவது அதைவிட நல்லது.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று 152
தனக்கு துன்பம் தரும் என்று உணர்ந்த செயல்களை பிறருக்கு செய்யக்கூடாது.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல் 316
புகழ் இல்லாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல; பழி இல்லாமல் வாழ்வதே வாழ்க்கை (ஏகலைவன் போல)
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் 240
Leave a comment
Upload