நரேந்திர சோழன்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் சிற்பங்கள் பிரசித்தி பெற்றவை.
சிற்பங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கான சுற்றுலா தலம் அது.
பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்து அதற்கு மேலும் பெருமை சேர்த்து விட்டார்.
நீங்கள் ரோமில் இருந்தால் ரோம் நாட்டை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு.
மற்ற மாநிலங்களுக்கு மற்ற நாடுகளுக்கு செல்லும்போது பிரதமர் எப்படி இருக்கிறார் என்ற விஷயம் எப்படியோ ஆனால் அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது தன்னை ஒரு தமிழனாகவே அடையாளப் படுத்திக் கொள்கிறார்.
தமிழக பாரம்பரியம் படி நடந்து கொண்டு தமிழையும் தமிழர்களையும் கௌரவப்படுத்துகிறார்.
விமர்சனம் செய்பவர்கள் இதை அரசியல் என்று சொன்னாலும் அதையெல்லாம் பெரிதும் கண்டு கொள்ளாமல் இன்னும் சொல்லப்போனால் விமர்சனங்களை மோடி புறக்கணிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவிலும் பிரதமர் மோடி அப்படிதான் நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியும் அப்படித்தான் இருந்தது.
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ஆடி திருவாதிரை விழா, முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டத் துவங்கிய 1000-வது விழா தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் படையெடுத்து சென்ற 1000-மாவது ஆண்டு நிறைவு முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய பிரதமர் "மாலத்தீவில் இருந்து நேற்று முன்தினம் திரும்பினேன் . நேராக தமிழகம் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிவனை வழிபாடு செய்வோர் சிவபெருமானிடம் கலந்து விடுவர். அவரைப் போன்று அழிவற்றவராகி விடுவர்.
நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே சிவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த சோழர்களின் பாரம்பரியமும் அமரத்துவம் பெற்றுள்ளது.
சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் பாரதத்தின் அடையாளங்கள்.
சோழ சாம்ராஜ்ய கால கட்டடம் பாரதத்தின் பொற்காலமாக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்களாட்சி என்று சொன்னால் பிரிட்டன் குறித்து சிலர் பேசத் துவங்குவர்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னாரே சோழர்கள் ஆட்சியில் குடவோலை முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது.
மற்ற இடங்களில் தங்கம், வெள்ளி கால்நடைகளை கவர்ந்து வந்த மன்னர்களை குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.
ராஜேந்திர சோழன் அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்தது.
ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கை ஏரியில் நிரப்பினான்.
காவிரி பெருகிப் பாயும் இந்த பூமியில் கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவது சோழ சாம்ராஜ்யத்தின் நற்கொடையாகும்.
சோழ சாம்ராஜ்யம் புதிய பாரதத்தின், பழமையான வழிகாட்டியாக உள்ளது.
வருங்காலத்தில் தமிழகத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்டமான உருவச் சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த சிலைகள் நம் வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடி மரங்கள் ஆகும் என்று சோழர் பெருமைகளை பேசினார் பிரதமர் மோடி.
ஓம் நமச்சிவாயா என்று சொல்லி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கு சென்று கோவில் மூலவரை தீபாராதனை காட்டி வழிபட்டார்.
அதற்கு முன்னதாக பிரகதீஸ்வரருக்கு புனித கங்கை நீரால் அபிஷேகம் செய்தார் பிரதமர்
ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் வெளியிட்டு இளையராஜாவின் ஹர ஹர மகாதேவா, நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க போன்ற பாடல்களை ரசித்தவர் நிகழ்ச்சி முடிவில் எழுந்து நின்று இளையராஜாவை பாராட்டினார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதில் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். தூத்துக்குடி நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரதமர் விமானத்திலேயே தங்கம் தென்னரசு, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ஆகியோர் திருச்சிக்கு பயணம் செய்தார்கள்.
கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்றார்.
தொகுதி எம் பி என்ற முறையில் அவர் பங்கேற்றார் என்று அவர் கட்சி விளக்கம் வேறு சொன்னது.
மோடியின் சிறப்பு எழுதி வைத்து படிக்காமல், கொஞ்சம் உச்சரிப்பு நவீன கால டிவி தொகுப்பாளர்கள் போல் இருந்தாலும், தைரியமாக தமிழில் பேசுவது தான். நம் தாய்மொழியை அதை தெரியாதவர்கள் பேசும் போது வரும் கிக்கே தனி.
சோழர்களை இது வரை எந்த பிரதமரும் இந்த அளவு புகழ்ந்ததில்லை. அதனால் தான் 'நரேந்திர சோழன் ?" என்ற தலைப்பு. விகடகவி தான் அவரை முதன் முதலில் நரேந்திர பாஹுபலி என்று அழைத்தையும் இங்கு நினைவு கூற வேண்டியிருக்கிறது.
பிரதமர் மெல்ல தமிழரின் அடையாளமாக மாறுகிறாரோ என்னவோ ?
யார் கண்டார்கள்.
Leave a comment
Upload