கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒரு வரப்பிரசாதமாக வந்து நீண்ட நாள் தாகத்தை தீர்த்தது. டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்று ட்ரைலர் போன்று நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கிடையே, ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெற்ற நான்கு போட்டிகள் ஒவ்வொன்றும், மெகா ஹிட் திரைப்படம் போன்றும் அமைந்திருந்தது. கடந்த வாரம் நடந்து முடிந்த நான்காவது போட்டி, திரில்லர் படம் போன்று பல திருப்பங்களுடன், சுவாரஸ்யமான சம்பவங்களுடன், இறுதிக் கட்டமாக பென் ஸ்டோக்ஸ்,இங்கிலாந்து அணியினர், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் உரையாடலுடன் விறுவிறுவென்று நடந்து முடிந்தது. இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி ட்ராவில் முடிவடைந்தாலும், இந்திய அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவே இது கருதப்படுகிறது. இரண்டாவது இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை வென்று, மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற அடிப்படையில் இத்தொடரை வென்று விடலாம் என்று எண்ணிய இங்கிலாந்து அணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி, இந்த போட்டியை இந்திய அணியின் இளம் வீரர்கள் சமன் செய்துள்ளனர்.
மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற இந்த போட்டி,பல தருணங்களில் இங்கிலாந்திற்கு சாதகமாக முடிவடைந்து விட்டது என்று நினைத்தபோதெல்லாம், அந்த எண்ணத்தை முறியடிக்கும் விதத்தில் இந்திய அணியினர் தொடர்ந்து ஓய்வின்றி விளையாடியுள்ளனர். டெஸ்ட் போட்டியில் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல,விளையாடும் அணியின் பலம், தன்னம்பிக்கை, போராடும் குணம் இவைகளே பரிசோதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த ஒரு போட்டி ஒன்றே போதும். ரிஷப் பந்த் தன் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவோடு விளையாடியது, அதுவும் அரை சதம் அடித்தது இந்த ஒட்டுமொத்த குணங்களின் வெளிப்பாடு . கவுதம் கம்பீர், போட்டி முடிந்து தன் அணியினரிடம் நடந்த சந்திப்பில், "பொதுவாக நான் ஒருவரை குறிப்பிட்டு பாராட்டுவதில்லை, ஆனால் உன்னுடைய செயல் ஒட்டு மொத்த அணியினருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இந்திய அணிக்கு நீ பெருமை தேடி தந்ததோடு, உன்னால் இந்திய அணி பெருமை அடைந்துள்ளது" என்று ரிஷப் பந்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்திய அணியில் மூன்று வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து, முதல் முறையாக புதிய சாதனை படைத்துள்ளனர். வாஷிங்டன் சுந்தர் இந்த டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார். குறைந்த பந்துகளில்(போஸ்ட் லஞ்ச் செஷன்) சதம் அடித்ததோடு , இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர், ராகுல் டிராவிட்டை தொடர்ந்து மூன்றாவது பாட்ஸ்மானாக விளையாடி சதம் அடித்தவர், அதிக பௌண்டரிகளோடு அதிக ரன்கள் ஒரே டெஸ்ட் மேட்சில் அடித்த வீரர் என பல சாதனைகளை ஷுப்மன் கில் படைத்துள்ளார். இவர்களோடு ஜடேஜாவின் சதம், ராகுலின் நிதானமான அனுபவம் மிக்க ஆட்டம் இந்திய அணி இந்த தொடரை சமன் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது .
டெஸ்ட் போட்டி விதிகளின் படி, போட்டி ட்ராவை நோக்கி நகருமானால், போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரு அணித்தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு கைகுலுக்கினால், போட்டி ட்ரா என்று அறிவிக்கப்பட்டு எஞ்சிய பதினைந்து ஓவர்கள் போடமாலே நிறைவுக்கு வரும். இந்த டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பென் ஸ்டோக்ஸ், அப்பொழுது பாட்ஸ்மானாக ஆடிக்கொண்டிருந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரிடம் சென்று கை குலுக்க வலுக்கட்டாயமாக அழைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஜடேஜா 89 ரங்களுடனும், வாஷிங்டன் 80 ரங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கையில் கேலியோடு, "நீங்கள் ப்ரூக்ஸ்ஸுக்கு எதிராக சதம் எடுக்க வேண்டுமா" எனக் கூறியதிற்கு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இது இங்கிலாந்து அணியினர் சோர்ந்துள்ள நிலையில் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று சப்பை கட்டு காட்டினாலும், விளையாட்டு என்று வரும் பொழுது,விளையாட்டு விதிகளின்படி விளையாடுவது தான் முறை.
இந்தப் போட்டியில் என்னை சிந்திக்கத் தூண்டிய ஒரு நிகழ்வு, ஜோ ரூட் தவறவிட்ட ஜடேஜாவின் கேட்ச். ஜடேஜாவின் அந்த கேட்சை ஜோ ரூட் பிடித்திருந்தால், ஜடேஜா ரன் எடுக்காமல் அவுட் ஆவதோடு, அடுத்தடுத்து வரும் வீரர்கள் எந்த ஒரு தைரியத்தோடு நிற்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. அப்படிப்பட்ட அந்த ஒரு சம்பவத்தை இங்கிலாந்து அணியும் சரி,ஊடகங்களும் சரி பெரிது படுத்தாமல் அது ஒரு கடினமான கேட்ச், ஜோ ரூட் தன்னால் முடிந்த வரை முயற்சித்தார் என்று பெருந்தத்தன்மையாக அச்சம்பவத்தை பற்றி கூறியுள்ளனர்.
இதே போல ஒரு சம்பவம் நம் இந்திய அணியில் நிகழ்ந்திருந்தால் ஊடகங்கள் சும்மா விட்டுருக்குமா ?? சேனல் சேலாக உலவும் ஆய்வாளர்களும் அந்த விளையாட்டு வீரரை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.
இன்று இந்திய அணி வலுப்பெற்று சிறந்த முறையில் விளையாடும் பொழுது பாராட்டுவது பெரிதல்ல, அவர்கள் சோர்ந்து இருக்கும் நேரத்தில் நம் ஆதரவை தெரிவிப்பதிலேயே ஒரு உண்மையான ரசிகன் உருவாகிறான். அதுவும் கிரிக்கெட், "ஒரு ஜென்டில்மேன் கேம்", சிறந்த கிரிக்கெட் ரசிகர்களாகவும் கூட உலக அரங்கில் இந்தியர்கள் விளங்க வேண்டும்!
சிந்திப்போம் !!
Leave a comment
Upload