தொடர்கள்
வரலாறு
கடாரங்கொண்டான் -தில்லைக்கரசிசம்பத்

இந்திய வரலாற்றில் “கடல் கடந்த போர்களில் வெற்றி கண்ட ஒரே மன்னன்” என்ற புகழ், சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ராஜேந்திர சோழனுக்கே(கி.பி. 1014–1044) உண்டு.

ராஜராஜ சோழன் மகனாகப் பிறந்த ராஜேந்திரன், தன் தந்தையின் கனவை இதன்மூலம் நிறைவேற்றினார்.

கங்கை வரை சென்று இந்திய மன்னர்களை வெற்றி கொண்ட பின்னர் ராஜேந்திரன் தனது பார்வையை இந்திய பெருங்கடல் பக்கம் திருப்பினார். அதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.

சோழர்களின் கப்பல் கட்டும் திறமை உலகப்புகழ்ப்பெற்றது.

அக்கப்பல்கள் மூலம் சோழவணிகக்குழுக்கள் தெற்காசிய நாடுகளிலிருந்து சீனா வரை சென்றுவந்தன.

திருப்புறம்பியத்தின் ஐநூற்றுவ வளஞ்சியர் , ஆதித்தபுரியின்மணி கிராமம், சிரவல்லியின் நானாதேசியர் போன்ற பல வணிகக்குழுக்கள்இவ்வாறு கடற்பயணம் செல்லும்போது ஸ்ரீவிஜயபேரரசு தனது துறைமுகங்களில் சுங்கக்கட்டணம் வசூலித்தது.

ஸ்ரீவிஜயபேரரசு (சுமத்ரா, மலேசியதீபகற்பம், மேற்குஜாவா) என்பது பல துறைமுகங்களையும் பரந்த நிலபரப்பையும் கொண்ட நாடு.

20250701172502135.jpeg

சோழவணிகர்களின் வியாபாரம் செழிக்க ஆரம்பித்ததைக்கண்டு பேராசைக்கொண்ட ஸ்ரீ விஜய பேரரசு சுங்கவரி கட்டணத்தை தற்காலத்தில் ட்ரம்ப் இந்தியாவுக்கு வரிப்போடுவது போல் தன்னிஷ்டத்திற்கு அநியாயமாக வசூலித்தது.

சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்த சோழப் பேரரசை “தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறுநாடு” என சீனாவிற்குப் பொய்யான ஒரு செய்தியைப் பரப்பி வந்தது.

இதையறிந்த ராஜேந்திர சோழன் கடும்கோபமடைந்து கி.பி. 1025-ல் சுமார் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் கொண்ட படையின் மூலம் தென் கிழக்காசியாவின் மஹாவணிக பேரரசான ஸ்ரீவிஜயபேரரசை தாக்கினார்.

கடாரம் (இன்றைய மலேசியா), மலையூர், மாயுருடிங்கம்(இன்றைய மலேயாவின் நடுப்பகுதி), பண்ணை(இன்றைய சுமத்திரா, இந்தோனேசியா, தாய்லாந்து பகுதிகள்) போன்ற நாடுகளை கிபி 1028ல் சோழ தேசம் வென்றது.

யானைகள், குதிரைகள் காலாட்படைகள் , போராயுதங்கள் நீர்,உணவு ஏற்றி, நீண்டதூர கடற்பயணத்திற்கு செல்ல “சோழாந்தியம்” கப்பல்கள், யானைகளை தரையிறக்க “திருசடைக்” கப்பல்கள் மற்றும் “கட்டுப்படகுகள்” என அன்னிய நாடுகளை நடுநடுங்க வைக்கும் பிரமாண்டமான போர் கப்பல்களை கொண்டது சோழசாம்ராஜ்ஜியம்.

சோழற்கடற்படை அந்தமான்-நிக்கோபார் தீவுகளை தளமாக கொண்டு அங்கிருந்து ஸ்ரீவிஜய நாட்டிற்கு சென்று எதிர்பாராநேரத்தில் தாக்கி அந்நாட்டின் மன்னன் சங்கராம விஜயதுங்கவர்மனை சிறைப்பிடித்து ஸ்ரீவிஜயபேரரசின் செல்வங்களை கைப்பற்றியது.

20250701172845982.jpeg

ஸ்ரீவிஜயபேரரசின் வீழ்ச்சியின் மூலம் இந்திய சமுத்திரத்தில் தமிழ்நாட்டின் ஆதிக்கம் , கடல்கடந்த நாடுகளில் உலகளாவிய தமிழ்மொழியின் பெருமை, தமிழர் கட்டுமானக்கலை, கோயில்கட்டிடபாணி, தமிழர் மரபுகள் போன்றவற்வை நிலைநாட்டியது.

20250701173150648.jpeg

கம்போடியாவின் அங்கோர்வாட் கோயில், மன்னர் ராஜேந்திரன் காலத்திற்கு 100 வருடங்கள் கழித்து கெமர் பேரரசின் இரண்டாம் சூரிய வர்மனால் (ஆட்சி 1113–கி.பி. 1150) கட்டப்பட்டது என்றாலும் அதன் கட்டிடபாணி தமிழக கோயில்களை ஒத்திருப்பதை காணலாம்.

ஸ்ரீவிஜயப்பேரரசை வீழ்த்தியப்பின்னர் துறைமுகங்களான பண்ணை, கடாரம், தம்பிரலிங்கம் போன்ற பல துறைமுகங்களை வணிகச் சுங்கங்களாக்கி சோழப்பேரரசு தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து அந்தந்த பகுதிகளுக்கு சோழநாட்டின் தளபதிகளை நியமித்தது.

சோழர் வணிககுழுக்கள் தான், தாங்கள் வியாபாரம் செய்த நாடுகளின் நிலைமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற அத்தனை தகவல்களையும் சோழ அரசுக்கு தந்துதவியவர்கள்.

இந்த யுத்தத்தின் வெற்றியால் கடல்வழி வணிகத்தடங்களை கட்டுப்படுத்துதல் (சீன, இந்தோனேசிய, அரபு நாடுகளிடையே மசாலா, தங்கம், முத்து, கந்தகம், கயிறு, போன்ற வர்த்தகங்கள்), சோழவணிக்குழுக்களுக்கு

இடைஞ்சல்களை கொடுத்த கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தியது என பல நன்மைகள் விளைந்தன.

பழங்காலத்தில் கடற்பயணம் என்றாலே கொடூர கடற்க்கொள்ளையர்கள் , பழங்கால திசைமானிகள் வெறும் மரத்தாலான கப்பல்களும் (அதில் யானைகள் குதிரைகள் வேறு ), பயங்கர சுழல்களும், புரட்டிப்போடும் புயல்களும் கொண்டு கொந்தளிக்கும் பெருங்கடலும் என உயிரோடு திரும்பி வர உத்திரவாதம் இல்லாத சூழ்நிலை. இ‌ந்‌‌த நிலையில் படைக்கொண்டு, புது நாடுகளில் இறங்கி போர் புரிந்து அந்த நாடுகளை கைப்பற்றுவது என்பது இமாலய சாதனை.

சோழ மன்னர்களின் சாதனை கீழடிப்போன்ற தமிழகத்திலிருந்த பல நகரங்களின் நாகரீகத்தின் தொடர்ச்சியே!

தமிழர் நாகரீகத்தின் ஆரம்பம் , உலகிற்கே முதன்முதலாய் தோன்றிய தமிழகத்தின் இரும்பு காலத்தின் தொடர்ச்சியே!

கற்களை ஏர்முனையில்ப்பூட்டி உழுததும்,

கல் ஆயுதங்களை போராயுதங்களாக வைத்திருந்ததும்,

இரும்புக்கு மாறியதில் விவசாயத்தில் பசுமைப்புரட்சி,

அதன் மூலம் உணவுப்பொருட்கள் அதிகம் உற்பத்தி,

அதனால் மக்கள்தொகைப் பெருக்கம்,

உணவு பற்றிய கவலையில்லாததால் மற்ற தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள், பலமான நாடானதால், அண்டை நாடுகளை கைப்பற்றுதல் என வரிசையாக முன்னேற்றமும் அடைந்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பான ராஜேந்திர சோழனின் தெற்காசிய நாடுகளின் மீதான படையெடுப்புகளின் வெற்றி.

பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு”

என்பதற்கேற்ப தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வெற்றிமுரசாக இன்றும் ஒலிக்கிறது .