பாண்டவ தரும புத்திரன் மகாபாரத யுத்தம் ஜெயித்து அசுவ மேத யாகம் நடத்தி முடித்தான்.
ஏராளமான நிலங்களும் கோடிக்கணக்கான பொற்காசுகளும் தானமாக மக்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டது.இப்படியும் கூட தர்மம் செய்ய முடியுமா என்று எல்லோரும் பேசும் போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது.
ஏரிந்து முடிந்து சாம்பலுடன் இருந்த யாகத்தின் ஹோம குண்டத்துக்குள் குதித்தது அந்தக் கீரி.
பாம்புடன் சண்டை போட்டு ஜெயிக்கும் என்பார்களே! அதுவே தான்!
ஆனால்,சாதாரணக் கீரி இல்லை இது. அதன் உடலின் ஒரு சரி பாதி மட்டும் தங்கமாக இருந்தது.
காலத்தைத் தாண்டிப் பயணம் செய்ய முடிந்த,வயசுக் கணக்கே இல்லாத அதிசயக்கீரி அது.
மேலும் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்..,
இது மனிதன் போல் பேசும் கீரி.
ஹோம குண்டத்தில் குதித்து சாம்பலில் சிறிது நேரம் புரண்ட பின், வெளியே வந்த கீரி மிகுந்த சோகத்துடன் நின்றது.
, "சீ போ " என்று அதை விரட்ட வந்த அர்ஜுனனே அதிர்ச்சி அடையும் வண்ணம் தர்மனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தது.
"தர்ம புத்திரனே,! நான் ஏமாற்றம் அடைந்தேன். நீ செய்த யாகத்தின் பலன்கள், நீ பெருமைப்படும் அளவுக்கு ஒன்றும் அவ்வளவு பெரிசு இல்லை.
அவற்றால் என் உடலின் மறுபாதியைத் தங்கம் ஆக்க முடியவில்லை. " என்றது.
கோபத்துடன் முன்வந்த பீமனை அடக்கி தர்மன் கேட்டான்.
"கீரியே!நீ கூற வந்ததைக் கூறு. "என்றான்.
கீரி பேச ஆரம்பித்தது.
"யுதிஷ்டிரனே! மிக நெடுங்காலம் முன் நம் தேசத்தில் மோசமான பஞ்சம் நிலவியது. ஒரு ஏழை தினமும் உண்ண உணவில்லாமல் குடும்பத்துடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தான்.
காட்டில் கிடைக்கும் சிறு தானியங்களை அவனும் குடும்பத்தினரும் சேகரித்து பின் அதை உரலில் இட்டு மாவாக்கி உண்டு வாழ்ந்தனர்.
ஒரு சமயத்தில் அவர்களுக்கு பல நாட்களாக சுத்தமாக உணவே இல்லை. இன்னும் ஒன்று இரண்டு தினங்களுக்கு மேல் உணவின்றி அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
அன்று அவர்கள் எல்லோரும் மிக்க முயற்சி செய்து கொஞ்சம் தானியம் சேர்த்து இடித்து மாவாக்கிய பின் அந்த ஏழை,அவன் மனைவி, மகன்,மருமகள், நால்வரும் ஆளுக்கு ஒரு கை அளவு மாவு என்று உண்ணப் பிரித்துக் கொண்டனர்.
உண்ண முயன்ற போது ஒரு வயதான மனிதர் அந்த ஏழை வீட்டுக்கு வந்தார்.
"பசிக்கிறது" என்றார்
ஏழை அவரைக் குடிசைக்குள் அமர வைத்து, தன் கையில் இருந்த மாவை ஒரு இலையில் வைத்துக் கொடுத்தான்.
முதியவருக்கோ யானைப் பசி. கொடுத்த மாவை ஒரு நொடியில் விழுங்கி "ஐயோ பசி " என்றார் மீண்டும்.
ஏழையின் மனைவி கணவரிடம் "உங்கள் வழி என் வழி " என்று கூறித் தன் பங்கு மாவையும் முதியவருக்கு அளித்தாள்.
அதன் பின்னர் மகன், அப்புறம் மருமகள் என்று எல்லோரும் தங்கள் நலன் மறந்து அந்த வயோதிகருக்கு தங்களின் பங்கான உணவை அளித்தனர்.
முதியவர் வேடம் கலைத்து தர்ம தேவதையாக நின்றார்.
அந்த ஏழை மனிதனின் குடும்பத்தை, அவர்கள் தியாகத்தைப் போற்றி பேரும் புகழும் ஏராளமான செல்வமும் அளித்தார்.
இதை வேடிக்கை பார்க்க நேர்ந்த நான் முதியவர் இலையில் மிச்சம் இருந்த மாவில் விழுந்து புரண்டேன். என் உடலில் ஒரு பாதி தங்கம் ஆனது. மறு பாதியை தங்கமாக்க மாவு மீதி இல்லை. ஆனால் என்னால் பேச முடிந்தது. காலம் தாண்டிப் பயணிக்க, வாழ முடிந்தது.
எவ்வளவோ யாகங்களுக்கு சென்று பார்த்தாச்சு.யாகத்தில் புனிதமாக மதிக்கும் ஹோம குண்ட சாம்பலைப் பூசிப் பாத்தாச்சு. தங்கமா இல்லாத என் மறு பாதி உடலில் ஒரு குந்து மணி அளவு கூட தங்கம் ஆகல. ரொம்ப வெறுத்து போய் இங்க வந்தேன்.
தர்ம தேவதையின் பிள்ளையின் யாகமாச்சே என்று தான்! மன்னிக்கணும் தர்மா! உன் யாகத்தால் ஏற்பட்ட புண்ணியம் அந்த ஏழைகளின் மகத்தான தியாகத்துக்கு துளிக் கூட ஈடானது இல்லை., "
இவ்வாறு சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுக் கீரி அகன்றது.
காலம் மாறியது. ஏன்? யுகமே மாறிவிட்டது.
பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தை அடைந்தது நம் கீரி. நாடு முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். மன்னரைப் பற்றிய பேச்சை விட அவரது மருமகன் பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம் இருந்தது.
மருமகனின் வீரம் பற்றி, அழகு பற்றி,நிதானம், அறிவு, விவேகம், மனிதாபிமானம், பற்றி,...எல்லாத்துக்கும் மேல் அவருடைய ஸ்ரீராமனை ஒத்த தியாக சிந்தனை பற்றி.
இப்படி எல்லா விவரங்களையும் மக்கள் பேசும் போது நிதானமாக நின்று கேட்டு அறிந்து கொண்டது நம் கீரி.
"இந்தப் புகழ்பெற்ற மனிதனை நேரில் சந்திக்க வேண்டுமே! " யோசனை செய்த கீரி தலைநகரான தஞ்சாவூரை அடைந்தது.
அரண்மனைக்குள் மாலை வேளையில் யார் கண்ணிலும் மாட்டாமல் நுழைந்தது.
பொன்னியின் செல்வன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவரும்...
அரசர் மதுராந்தக சோழரின் புகழ்பெற்ற மருமகனும்...
பிற்காலத்தில் ராஜராஜன் என்று உலகமே புகழ்ந்த மாமன்னனும்......
தஞ்சை பெரிய கோவில் கட்டிய உடையார் என்று அறியப்பட்ட சிவ பக்தனும்....
ஆன இளைஞரான அருள்மொழிவர்மன் அரண்மனை நந்தவனத்தில் தன் அருமைத் தோழனான வல்லவரையன் வந்திய தேவனுடன் நடந்து கொண்டிருந்தார்.
ராமனுக்கு லட்சுமணன் போல அருள் மொழிக்கு வந்தியத்தேவன் ஒரு அரண்.
நம் கீரிக்கு பொன்னியின் செல்வன் முகத்தை முதலில் பார்க்கணும் அப்புறம் எப்படியும் பேசிவிடலாம் என்று எண்ணம்.
அவர் காலடியைப் பின்பற்றி நடக்க முடிவு செய்தது.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
பொன்னியின் செல்வன் கால் அடித் தடத்தை மிதித்த உடனே கீரியின் உடலின் மறுபாதியும் தங்கமானது.
"ராஜராஜா!" என்று ஆச்சரியத்தில்
கூவியது கீரி.
உடைவாளை உருவிய படி வந்தியத் தேவர் சட் என திரும்ப, அருள்மொழி அவர் தோளில் கை வைத்த படி, "யார் கூப்பிட்டது?" என்றார் நிதானமாக.
முன்னே வந்த கீரி " நான்தான் அழைத்தேன் மாமன்னன் ராஜராஜன் அவர்களே!" என்றது.
ஆச்சரியத்தில் அருள்மொழிக்கு சில நொடிகள் பேச்சு வரவில்லை.
பின் மெதுவாக கீரியிடம் கேட்டார்.
"தாங்கள் யார்? இது ஏதாவது மாயாஜாலமா?
ஒரு கீரியால் எப்படிப் பேச முடியும்?
என்னையா ராஜ ராஜா என்று அழைத்தீர்கள்? நான் ராஜாவே இல்லை! அப்புறம் தானே ராஜாவுக்கு ராஜா.. எல்லாம்! என் சிறிய தந்தை மதுராந்தகன் தான் இந்த நாட்டு மன்னன். நான் இல்லை.தெரிந்து கொள்ளவும்."
"அரசே! நான் முக்காலமும் ஓரளவு அறிந்தவன் தான். நீங்கள் தான் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் என்ற பெருமை வாய்ந்த சக்கரவர்த்தி ஆகி தஞ்சையில் பார் புகழும் சிவன் ஆலயம் உண்டாக்கப் போகிறீர்கள்."
என்று கூறி தன்னைப் பற்றிய பழைய கதை எல்லாம் கூறியது கீரி.
"அரசே உங்கள் காலடி பட்டதும் என் உடல் முழுவதும் பொன் ஆனது, ராமன் கால் பட்ட அகலிகை போல.
மன்னா உங்கள் கைகளில் சங்கு சக்கர ரேகை உண்டாமே! அதனால் நீங்கள் மகாவிஷ்ணுவின் அம்சம் என மக்கள் நம்புகிறார்கள்.
ஸ்ரீராமன் தியாகத்தின் சிகரம். தகப்பன் சொல்லுக்காக அரசு உரிமையைத் தியாகம் செய்தார்.
நீங்களும் பெரிய தியாகம் செய்தீர்கள் என அறிகிறேன்.
உங்கள் தந்தையின் பெரியப்பா கண்டராதித்தர் கொடுத்த அரசுரிமை,வழி வழியாய் உங்கள் தந்தைக்குப் பிறகு தற்போது உங்களுக்கு வந்த போது... கண்டராதித்தனின் மகனும் உங்கள் சிறிய தகப்பனும் ஆன மதுராந்தகனுக்கு அந்த அரசுரிமையை அளித்து,.. அதுதான் நியாயம்..என்று மக்களுக்கு நீங்கள் கூறியதும், தியாகத்தின் சிகரம் இல்லையா?
தர்ம புத்திரன் கூட போன யுகத்தில் செய்யாத இத்தகைய தியாகத்தை.. ராஜராஜனே நீ செய்திருக்கிறாய்.
அதனால் உன் காலடித்தடம் மிதித்து என் உடல் முழுக்க தங்கமாக மாற்ற முடிந்தது.
மேலும் என் மிகப் பழைய சாபம் விலகி கந்தர்வனாக இப்பொழுது மாறுவேன். நன்றி. நீடூழி வாழ்க!"
என்று கூறி விண்ணில் ஒரு மின்னல் கீற்றுப் போல மறைந்தது கீரி.
ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வந்தியத் தேவர் கேட்டார்.
"அருள்மொழிவர்மரே! நடந்தது கனவா? நிஜமா? இல்லை ஏதாவது பில்லி சூனியமா?"
அருள்மொழி சொன்னார்
"இது கனவு நிச்சயம் இல்லை.
நம் இருவருக்கும் ஒன்றாக நடந்திருக்கிறது என்பதால்.
பில்லி சூனியம் என்றால் இறைவன் காப்பார். கவலை வேண்டாம்.
ஒருவேளை இது நிஜமாகவே இருந்தால் கூட இங்கு நடந்ததை வெளியில் யாருக்கும் கூறி விட வேண்டாம். "
"ஏன் தலைவா? "என்றார் வல்லவரையர்.
"அப்புறம் ஊரில் எல்லோரும் 'அருள்மொழி பொய் சொல்லி ஆட்சியை இப்போ பிடிக்கப் பார்க்கிறான்' என்று வேறு பேச ஆரம்பித்து விடுவார்கள். வம்பே வேண்டாம். இங்கு நடந்ததையே மறந்து விடுதல் நல்லது.."
கடகட என்று முத்துத் தெறிப்பது போல சிரித்தார் ராஜராஜர்.
அத்துடன் தானும் ஒத்திசைந்து சிரித்தார் மாவீரர் வந்தியத் தேவர்.
Leave a comment
Upload