சோழர்களின் ஆட்சி காலம் என்பது தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும். சங்ககால சோழர்கள், பிற்கால சோழர்கள் என இரண்டு முக்கிய கால கட்டங்களாகப் பிரிக்கலாம். சங்ககால சோழர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். பிற்கால சோழர்கள் விஜயாலய சோழன் கிபி 850 இல் சோழ நாட்டை மீட்டெடுத்ததிலிருந்து, கிபி 1279 வரை ஆட்சி செய்தனர்.
சோழ அரசர்கள் வலிமைமிக்க வெற்றியாளர்களாகவும் சிறந்த நிர்வாகிகளாகவும் மட்டுமல்லாமல், சிறந்த கட்டிடக் கலைஞர்களாகவும் இருந்தனர். கலை, இலக்கியம், சமூக சேவை போன்றவற்றுக்கு நிதி அல்லது பிற உதவிகளை வழங்குபவர்களாகவும் இருந்தனர். குறிப்பாக, அவர்களின் ஆட்சிக் காலத்தில், தென்னிந்தியாவில் மிக அற்புதமான கோயில்கள் கட்டப்பட்டன. சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்கள் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவை பல நூற்றாண்டுகள் கடந்து இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன.
சோழர்கள் அவர்கள் ஆட்சியில் பல கோயில்கள் கட்டியுள்ளனர். அவற்றில் மிகவும் பிரபலமான கோயில்கள்:
1.தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் கோயில்) இது முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்.
2.கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில். இது முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயிலைப் போலவே, இதுவும் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
3.தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில் இது இரண்டாம் இராஜராஜனால் கட்டப்பட்டது. இதுவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும்,
ஒவ்வொரு கோயிலும் அதன் கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்றது. இந்த கோயில்கள் சோழர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான முக்கிய சான்றுகளாகவும் உள்ளன. இக் கோயிலின் பலவிடங்களில் இருக்கும் கல்வெட்டுகள் மூலம் சோழர்களின் வாழ்க்கை, ஆட்சி, பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். மேலும் அவை இன்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கின்றன.
1987ல் பெருவுடையார் கோயில், யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களைப் பதிப்பித்துள்ளது.
தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் (பிரகதீஸ்வரர் கோயில்)
இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோயில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் கோயில் எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
இக்கோயில், கி.பி.1003 ஆம் ஆண்டு துவங்கி 7 ஆண்டுகளில் இயந்திரங்கள் இல்லாமல் வெறும் மனிதர்களைக் கொண்டே கி.பி. 1010 ஆம் ஆண்டு சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோயிலின் கோபுரத்தை வடிவமைக்கத் தேவைப்படும் பெரிய கற்களை கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, ரதங்களையும் யானைகளையும் கொண்டு எடுத்து வந்து வடிவமைத்தாராம்.
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகவும் பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பெரியநாயகி அம்மன் தனிச்சந்நிதியில் ஒன்பது அடி உயரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
விரிவான பாறைக் கலைப் படைப்புகள் நிறைந்த கோட்டைச் சுவர்கள் கோயிலைச் சூழ்ந்து, முழு வளாகத்துக்கும் பிரமாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன.
இக்கோயிலான பிரதான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான ஆலயக் கோபுரங்களில் ஒன்று. கோயிலின் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் ஆனது. கோவிலுக்கான முக்கிய 'கோபுரங்கள்' மற்றும் நுழைவாயில்கள் விரிவான சிற்பங்களுடன் கூடிய அற்புதமான கட்டமைப்புகளாகத் திகழ்கின்றன.
கோயிலின் கல்வெட்டுகள் மற்றும் ஓவியங்கள் தஞ்சை நகரத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி வரலாற்றின் கதையை விவரிக்கின்றன. சிவலிங்கம் கோபுரத்தால் மேலே சூழப்பட்டு, சாந்து பயன்படுத்தாத கற்களால் கட்டப்பட்டுள்ளது. இன்னும் ஒரு அதிசயத்தை மேலே காணலாம். மேலே உள்ள கல் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது. ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ வம்சத்தின் பெருமை மற்றும் வலிமைக்கு இந்த கோயில் ஒரு பொருத்தமான சான்றாக விளங்குகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது இந்த நேரங்கள் மாறுபடலாம்.
திருவிழாக்கள்:
சித்திரைத் திருவிழா மற்றும் ஆஷாட நவராத்திரி விழா. சித்திரைத் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும். ஆஷாட நவராத்திரி விழாவின் போது, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாளில், பெரிய கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதைத்தவிர தை அமாவாசை, மாசிமகப் பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா போன்றவையும் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கோயிலுக்குப் போவது எப்படி:
பெரிய கோயில் நகரத்தின் மையத்தில் உள்ளது, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து (0.5km) ஆட்டோ அல்லது பேருந்து அல்லது டாக்ஸியும் உங்களைக் கோயிலுக்குச் செல்லலாம்.
கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்:
கங்கைகொண்ட சோழபுரம் அல்லது கங்கைகொண்டசோழீஸ்வரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்ட சோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீஸ்வரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது. இம்மூன்றும், கங்கை நதிக்கரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. இந்த கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களைக் கங்கையிலிருந்து தண்ணீரைத் தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தார். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. கும்பாபிஷேக நீரைக் கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரைத் தலையில் தெளித்துக் கொண்ட பின்பே சிவனைத் தரிசனம் செய்வார். இங்கு தெற்குநோக்கிய அம்மன் சந்நிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருவுருவச் சிலையின் உயரம் 91/2அடி ஆகும். பிரகதீஸ்வரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.
இக்கோயில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இந்த லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. அதே போல் கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்தக் கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் வெயில் காலத்தில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியைக் கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியைக் குறைத்து இதமான வெப்பத்தைத் தரும். பிரதான கோயில் கோபுரம் 55 மீ உயரம் கொண்டதாகவும் கம்பீரமானதாகவும் உள்ள கட்டிடம் ஆகும்.
இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைப் போன்றே இதுவும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சில நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. தற்போது இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
திருவிழாக்கள்:
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை.
கோயிலுக்குப் போவது எப்படி:
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.
தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில்:
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம்
என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இரண்டாம் இராஜ ராஜ சோழனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகச்சிறந்த கட்டிடக் கலைகளில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் மொத்தம் 40,000 சிற்பங்கள் உள்ளன. மூலவர் சந்நிதி ஒரு தேர் வடிவத்தில் உள்ளது. முழு கோயில் வளாகமும் பண்டைய இந்திய புராணங்களின் கதைகளை விவரிக்கும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளால் நிரம்பியுள்ளது.
கோயிலின் மற்றுமொரு மனதைக் கவரும் பகுதி இசைப் படிகள். இந்த கோயிலுக்கு ஏழு பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஒவ்வொரு படியிலும் ச, ரி, க, ம, ப, த, நி, ச என்ற ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன. ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது.
கட்டிடக்கலை, சிற்பங்கள், ஓவியங்கள், வெண்கல வார்ப்பு -இவையனைத்தும் இந்த கோவில் சோழ வம்சத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் கோயில் ஆதியில் ராஜராஜேஸ்வரம் என்றும் சுவாமியின் பெயர் ராஜராஜப் பெருவுடையார் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் ஐராவதேஸ்வரம் என்றும் ஐராவதேஸ்வரர் என்றும் மாற்றப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. இந்திரனின் யானையான ஐராவதம் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் என்பதால் இந்த கோயில் ஐராவதீஸ்வரர் கோயில் என்றானதாகச் சொல்கிறார்கள்.
ஆலய முகப்பு, அர்த்த மண்டபம், முகமண்டபம், ராஜகம்பீர மண்டபம், விமானம், கருவறை மண்டபம் என எங்கு நோக்கினும் அழகும் பிரமாண்டமாகப் புதுவிதமான சிவப்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள்:
பிரதோஷ பூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கிறது.
கோயிலுக்குப் போவது எப்படி:
கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் செல்ல பேருந்துகள் நிறைய உள்ளன. தாராசுரம் பேருந்து நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து கோயிலுக்கு நடந்து செல்லலாம் அல்லது ஆட்டோ ரிக்ஷா மூலம் செல்லலாம்.
தமிழ்நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயில்களின் மூலம் சோழர்களின் கட்டிடக் கலை செழிப்பும், அவர்களின் நிர்வாகத்திறனும் மற்றும் மக்களின் கலாச்சார முன்னேற்றம் இவை அனைத்தும் சோழ நிர்வாகத்தின் கீழ் கட்டப்பட்ட கோயில்களில் மூலம் காணப்படுகிறது. இந்த கட்டிட அமைப்பு வெளிப்படுத்தும் வசீகரத்திற்கும் சிறப்பிற்கும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இக்கோயில்களை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக நம் கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும்…!!
Leave a comment
Upload