தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 32 எங்கே போயிற்று அந்த டேப்ரெகார்டர்? -மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250701075419507.png

(ஏ.ஐ.உருவாக்கிய படம்)

எம்ஜிஆர் ரசிகர்களுக்கு நாயகன், நிருபர்களுக்கு அல்ல. அவர் பேச்சை குறிப்பெடுப்பதும், பேட்டிகளில் சரியான பதில்களைப் பெறுவதும் சிரமமானது.

வருடம் 1981. குடியரசு தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கடலூருக்கு வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அன்றிரவு நெய்வேலியில் விருந்தினர் இல்லத்தில் தங்கினார். மதிய நேரத்தில் நிருபர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு. அப்போது அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி, முத்து காளத்தி. எப்போதும் சிரித்த முகம். நெய்வேலியில் அன்று சிரிப்பை தொலைத்தது தொலைத்ததுதான். பிறகு மக்கள் தொடர்பு பணியில் இருந்து அவர் தமிழரசு பத்திரிகை ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அப்படி என்னதான் நடந்தது?

மாவட்ட நிருபர்கள் அன்று காலையிலேயே நெய்வேலிக்கு வந்திருந்தார்கள். அவன் என்.எல்.சி. மக்கள் தொடர்புதுறை மூலமாக நிருபர்கள் சுரங்கத்தையும், தொழிற்சாலைகளையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தான். அவர்களுக்கு அவன் வீட்டில் மதிய உணவும் கொடுத்தான். அதன் பிறகு அவர்கள் நெய்வேலி விருந்தினர்கள் இல்லத்திற்கு எம்.ஜி.ஆரின் பேட்டிக்காக சென்றார்கள்.

மாலை 4.30 மணி ஆயிற்று. மக்கள் தொடர்பு அதிகாரி முத்து காளத்தி ‘எம்.ஜி.ஆர் இதோ வருவார், அதோ வருவார்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் அவனுக்கு வெறுத்துப் போய்விட்டது. மற்ற நிருபர்களைப் பார்த்து, ‘வாங்கய்யா போகலாம்’ என்றான். அவனையும் சேர்த்து அங்கிருந்த 12 நிருபர்கள் நேராக தபால் அலுவலகத்திற்கு சென்று, ‘தாமதத்தின் காரணமாக முதல்வரின் பேட்டியை நிருபர்கள் புறக்கணித்தார்கள்’ என்று செய்தி கொடுத்தார்கள். மறுநாள் அவனது பத்திரிகையில் அந்த சிறிய செய்தி முதல் பக்கத்திலேயே வெளியானது.

மறுவருடம் அதேபோல் அதே தினத்தில் கடலூருக்கும் நெய்வேலிக்கும் வந்தார் எம்.ஜி.ஆர். முற்பகலில் நிருபர் கூட்டம். உரிய நேரத்தில் தொடங்கியது. எம்.ஜி.ஆர் எதிரே அவன் அமர்ந்திருந்தான். அருகருகே மற்ற நிருபர்கள் அமர்ந்திருந்தார்கள். காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ்.பஞ்சாபகேசன், உள்ளூர் டி.எஸ்.பி., அரசு பி.ஆர்.ஓ. மற்றும் நெய்வேலி அதிகாரிகள் இருவர் எம்.ஜி.ஆருக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் புத்தகம் அளவுள்ள ஒரு கைப்பைக்கு மேலே சுருக்கெழுத்து நோட் புக்கை வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர் சொல்வதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தான். இடை இடையே ஜிப் திறந்திருந்த அந்த கைப்பைக்குள் இடது கை விரல்களால் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான். வலது கை பேட்டியை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தது. முதல்வருக்கு நேர் பின்னால் நின்ற மாவட்ட எஸ்.பி.பஞ்சாபகேசன் அதை கவனித்துவிட்டார். அவன் ஒருவேளை கைப்பைக்குள் டேப்ரெகார்டர் வைத்திருக்கிறானோ என்ற சந்தேகம் வந்தது. அவன் எதிரே இருந்த எம்.ஜி.ஆர் கூட அதை கவனிக்கவில்லை. போலீஸ்காரரின் கழுகு கண்கள் பார்த்துவிட்டன.

பேட்டியின் முக்கியமான கேள்வி, ‘அவதூறாக எழுதுபவர்களைத் தண்டிக்க எம்.ஜி.ஆர் கொண்டுவர இருந்த புதிய சட்டம் என்னவாயிற்று’ ‘ஏன் அப்படி ஒரு சட்டம் கொண்டு வருகிறீர்கள்? என்று அவன் கேட்க, எம்.ஜி.ஆர் சொன்னார், ‘நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நாங்கள் தண்டிக்கக் கூடாதா?‘ அதை அப்படியே குறிப்பெடுத்துக் கொண்டான் அவன். கடலூருக்குச் சென்று மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து செய்தி கொடுக்க நினைத்தான். நேராக அங்கிருந்து பண்ருட்டி வழியாக கடலூருக்குப் புறப்பட்டான். 10 கி.மீ. தாண்டியவுடன், பின்னால் வேகமாக வந்த போலீஸ் ஜீப் அவன் ஸ்கூட்டரை மறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ்காரர்களும், ‘எங்கே அந்த டேப் ரெக்கார்டர் என்று கேட்டார்கள்?’ அவன் அலட்சியமாக, ‘டேப்பாவாது, ரெக்கார்டராவது’ என்று சொன்னான். ‘உங்களைச் சோதனை போட வேண்டும்’ என்றார்கள்.

‘கைப் பை இங்கே இருக்கிறது, சட்டை பையையும் சோதனைப் போடுங்கள், ஸ்கூட்டரின் டயர், இன்ஜினையும் கூட கழற்றிப் பாருங்கள்’ என்றான்.

இன்ஸ்பெக்டர் சொன்னார், ‘நீங்கள் மைக்ரோ டேப்பில் முதல்வரின் பேச்சை பதிவு செய்ததை எஸ்.பி. பார்த்துவிட்டார். அவர்தான் எங்களை அனுப்பி டேப்ரெகார்டரை பறித்து வரச் சொல்லியிருக்கிறார்.’

‘நான்தான் சொல்கிறேனே, என்னிடம் டேப்ரெகார்டர் எதுவும் இல்லை’ என்று. அப்போது உடன் வந்த போலீஸ்காரர் சொன்னார், ‘சார் வரும் வழியிலேயே இவர் மரத்தடியில் வீசி இருப்பாரோ? வீட்டிற்கு கொண்டு போயிருப்பாரோ?’ என்றார். இன்ஸ்பெக்டர் சொன்னார், ‘அவர் வீட்டிற்கு போகவில்லை, நேராக ஸ்கூட்டரில் புறப்பட்டார்.’ என்றார். அந்த இன்ஸ்பெக்டரால், அவனிடமிருந்த ஷார்ட்ஹேண்டு, நோட் புக் பேனா தவிர எதையும் பார்க்க முடியவில்லை. அவன் ஸ்கூட்டரில் பயணத்தைத் தொடர்ந்தான். கடலூர் தந்தி அலுவலகத்தில் தந்தியில் செய்தியைக் கொடுத்தான்.

மறுநாள் அவதூறு சட்டம் அமலாகும், முதல்வர் முடிவு என்ற தலைப்பில் செய்தியைப் படித்ததும், சென்னையிலுள்ள மூத்த பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு கேட்டார்கள், ‘நீங்கள் மசோதாவை விலக்கிக் கொள்ளவதாக சென்னையில் சொன்னீர்களே, இப்போது நெய்வேலியில் மாற்றிச் சொல்லி இருக்கிறீர்களே? உங்களை நாங்கள் சந்திக்க வேண்டும்’’ என்று நேரம் கேட்டார்கள். அதற்கு எம்.ஜி.ஆர் செய்தித்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை சந்தியுங்கள் என்று சொல்லிவிட்டார். அவரை ஹிண்டு ராம், துக்ளக் சோ ராமசாமி, தீபம் நா.பார்த்தசாரதி ஆகிய மூவரும் சந்தித்தார்கள். அப்போது ஆர்.எம்.வீரப்பன் கையில் சுருட்டி வைத்திருந்த ஹிண்டு பேப்பரை மேஜையில் ஓங்கி அடித்து, மற்ற நாளேடுகளில் இந்த செய்தி வரவில்லை. இந்தச் செய்தி நெய்வேலி ஹிண்டு நிருபரின் குசும்பு என்று சொல்லிவிட்டார். ஹிண்டு ராமின் முகம் சிவந்தது. இது முற்பகல் 1 மணிக்கு முன்னதாக நடந்த மீட்டிங். 2 மணி அளவில் அவனது நெருங்கிய நண்பரான தீபம் நா.பார்த்தசாரதி மந்திரியின் கோபத்தையும், ராமின் சங்கடத்தையும் சொல்லி உங்களுக்கு அலுவலகத்தில் இருந்து கேள்வி வரும் எதிர்பாருங்கள் என்று சொல்லிவிட்டார். மதியம் 2.15 மணிக்கு செய்தி ஆசிரியர் கே.நாராயணன் அவனை தொலைபேசியில் அழைத்து, ‘என்னப்பா இந்த விவகாரம், எம்.ஜி.ஆர் அப்படி சொல்லவில்லை என்கிறாரே, மந்திரி. அவன் சொன்னான், ‘எம்.ஜி.ஆர் சொன்னது உண்மை, அதை டேப் செய்து வைத்திருக்கிறேன்’ என்றான். அவன் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்த ஹிண்டு நிர்வாகம், அந்த டேப்பை அனுப்பு என்று செய்தி ஆசிரியரோ, நிர்வாக ஆசிரியரோ கேட்கவில்லை. அப்படி நிர்வாகம் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையே பத்திரிகையாளனான அவனது பலம்.

டி.எஸ்.பஞ்சாபகேசன் மாவட்ட கண்காணிப்பாளர் பதவியில் இருந்து விலகியபோது கேட்டார், ‘இப்போதாவது அந்த டேப்ரெகார்டர் எங்கே என்று சொல்வீர்களா?’ இல்லை என்று மறுக்காதீர்கள். நான் பார்த்துவிட்டேன். என் சங்கடம் என்னவென்றால், எம்.ஜி.ஆர் அதைப் பார்த்திருந்தால் எங்களைக் கடுமையாக கண்டித்திருப்பார். அனுமதி இல்லாமல் டேப் செய்ததற்காக.

அது சரி போலீஸ் துரத்தும்போது அவனிடம் அவர்கள் டேப்பை பெறமுடியவில்லையே எங்கே போயிற்று அந்த டேப்?- நிருபர்கள் கூட்டத்தை விட்டு முதலில் வெளியேறிய அவன், அதே விருந்தினர் இல்லத்தின் மேனேஜர் கோபால கிருஷ்ணனிடம் அந்த டேப்பை கொடுத்து விட்டு, பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள் மாலை வாங்கிக் கொள்கிறேன் என்றான். மாலையில் டேப்ரெகார்டரை வாங்கி, ஹிண்டுவில் இருந்து பணி விலகும் வரை வைத்திருந்தான், ஆதாரத்திற்காக.