சூழ்ந்து வந்த இருள் எங்களை மெல்ல மெல்ல விழுங்க தொடங்கியது. இருளும் குளிரும் இரட்டையர்களாக இருப்பார்களோ, இருளின் பரவலுக்கு பிறகு குளிர் எங்களை துளைக்கத் தொடங்கி இருந்தது. சில் வண்டுகளின் ரீங்காரம் நன்றாக கேட்க ஆரம்பித்திருந்தது. அந்த அற்புதமான முன்னிரவில் தேக்கன் எங்களிடம் உரையாடத் தொடங்கினார். தன்னைப் பற்றி அறிமுகபடுத்திக் கொண்டு எங்களையும் தன்னறிமுகம் செய்ய கோரினார். அவரது முப்பது வருட சூழலியல் அனுபவங்களை கேட்டு சற்றே திகைத்திருந்த பலர் தங்கள் தயக்க கூட்டிலிருந்து விடுபட்டு தங்களை அறிமுக செய்து கொள்ள பெரிதும் தயங்கினர். பலவாறு எங்களை ஊக்கப் படுத்தி பேச வைத்தார்.
தன்னறிமுகத்திற்கு பிறகு சோர்ந்து அமர்ந்திருந்த எங்களுக்கு ஒரு தோழமை சின்ன சின்ன கைதட்டுதல், சொடக்கிடுதல் போன்ற எளிய பயிற்சிகள் தந்து எங்களை உற்சாக படுத்தினார். பிறகு மீண்டும் தேக்கன் தன் நூல்களை அறிமுகம் செய்தார். காடறிதல் பயணங்களில் எங்களை போன்ற பயணிகளுக்கு தான் அறிமுகப்படுத்திய இயற்கையை நூலிலும் அறிமுகம் செய்திருக்கிறார் தேக்கன். நூலின் பெயரே காடறிதல் தான். ஒரு வருடம் முன்பே நான் இந்த நூலை வாங்கி விட்டேன், அதை வாசித்த பிறகு தான் அவசியம் தேக்கனுடன் இந்த காடறிதல் பயணத்திற்கு போயே தீர வேண்டும் என்ற பேராவல் எனக்குள் எழுந்தது. அந்த ஆர்வத்தை ஏற்படுத்திய காடறிதல் நூலில் ஐயம் தெளிவோம் நிகழ்வில் தோழர்கள் கேட்ட நிறைய சந்தேகங்களுக்கு தேக்கன் பதில் சொல்லி இருக்கிறார்.
ஒரு அன்பர் முகநூலில் ஒரு காணொளியில் புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்கு பால் கொடுப்பதாக காட்டப்பட்டிருந்தது அது உண்மையா, புறாக்கள் பாலூட்டிகளா என்று கேள்வி கேட்டார். அது நிஜமல்ல முதலில் அந்த பறவை புறாவே அல்ல, அது Sand grouse என்று அழைக்கப்படும் ஒரு வித பாலைவன கௌதாரி இனம். குஞ்சுகள் பால் குடிக்கவில்லை அவை தன் தந்தையிடமிருந்து தண்ணீரை தான் அருந்துகின்றன என்றார் தேக்கன். பாலைவன கௌதாரிகளுக்கு முன்பக்க இறகுத் தொகுதி சிறப்பு வாய்ந்த ஒன்று, இதில் சுருளாக ஒரு வெற்றிடம் இருக்கும் அந்த இடத்தில் குடிநீரை சேகரித்து வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கும் தந்தை பறவைகள். நீர் சேமிக்கும் இறகுத் தொகுதி சிறப்பாக அமையப்பெற்ற ஆண்களையே பெண் கௌதாரிகள் தேர்வு செய்யுமாம். கிட்டதட்ட இருபத்தி ஐந்து மில்லிலிட்டர் நீரை சேகரித்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த நீர் ஆவியாகும் முன்பு பறந்து வந்து குஞ்சுகளுக்கு தரும் என்பது மிகுந்த வியப்பை அளிக்கும் தகவல். இவை போன்று இணையத்தில் காணுயிர்கள் சார்ந்து பரவும் பொய்யான தகவல்களுக்கு சரியான விளக்கமளிக்கிறார் தேக்கன்.
பெருந்தொற்று காலத்தில் மக்கள் பட்ட அவதிகளுக்கு பிறகு போன காடறிதல் பயணங்களை குறித்து எழுதப்பட்டது தான் "மரப்பேச்சி" மற்றும் "பூச்சிகளின் தேசம்" நூல்கள். இந்த நூல்களிலும் நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சூழலியல் சார்ந்த இவரின் தொடர் செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை. ஒரு உயிரினத்தை பற்றி எழுத தலைப்பட்டால் அவற்றின் உருவ அமைப்பில் இருந்து தொடங்கி அவை காணப்படும் இடங்கள், அவை உட்கொள்ளும் உணவுகள், அவைகளுக்கும் மனிதனுக்குமான உறவு, இப்போது அந்த உயிர் எப்படி அருகி வருகிறது அது அப்படி அழிந்து போக மனிதன் செய்த செயல் என்ன என்று விலாவாரியாக விவரிக்கிறார். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவரது நூல்களை வாசித்து புரிந்து கொண்டுவிட முடியும் என்பதே இவரது எழுத்தின் பலம்.
குள்ளநரிகளை ஏனோ நம் நாட்டவர்கள் தந்திரமானது என்று கற்பித்திருக்கிறார்கள் அதனால் அந்த இனத்தை குழந்தைகளுக்கு கூட அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் அந்த குள்ள நரிகளை காலையில் பார்த்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு மூடநம்பிக்கையை வைத்து கொண்டு அவைகளை சிறை பிடித்து கூட்டில் அடைத்து துன்புறுத்துகிறார்கள். இதுபோக சேலம் பகுதியில் நரி ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடக்கும் கொடுமையையும் தன்னுடைய கள ஆராய்ச்சியின் போது தெரிந்து கொண்டு அவைகளை பற்றி குறுநரிகள் வாழ்ந்த காடு என்றார் நூலில் அறிமுகப்படுத்தி எழுதி இருக்கிறார்.
முள்ளெலிகள் பற்றிய நூல் முந்தைய காடறிதல் பயணத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினார். அப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுந்தது. "ஐயா முள்ளெலியும் முள்ளம்பன்றியும் வேறு வேறா அல்லது ஒன்றே தானா ?" என்று கேள்வி எழுப்பினோம். "இரண்டும் வேறு வேறானவை" என்றார். முள்ளெலிகள் ஆபத்து வந்தால் தன்னுடைய உடம்பை ஒரு பந்து போல சுருட்டிக் கொள்ளும் என்றும் அதே முள்ளம்பன்றியானது தன் உடலை சிலிர்த்து மேலுள்ள முள்ளை எதிரிகள் மேல் எரிந்து தப்பித்து கொள்ளும் என்றும் விளக்கி கூறினார். இந்த முள்ளெலிகளை முதலில் பதிவு செய்த சூழலியளாரான மா. கிருஷ்ணனை குறித்தும் பதிவு செய்திருக்கிறார். இது போல பல தாவரங்களை குறித்த இவரது அறிவு நம்மை வியக்க வைக்கும். பார்வை கோபுரத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்த போது அங்கு ஒரு செடியை காட்டி இது என்ன செடி என்று தெரிகிறதா என்று கேட்டார். எங்களுக்கு தெரியவில்லை, அதன் பெயர் கள்ளிமுளையான், வறட்சியை எதிர் கொண்டு வளர்வதால் இது சாம்பல் சிவப்பு வண்ணங்கள் திரிந்த சிவப்பு வண்ணத்தில் உள்ளன என்றும் ஆதிக்குடிகள் தாகம் தனித்து கொள்ள இந்த செடியையே உண்பார்கள் என்றும் கூறினார்.
தேக்கனின் தமிழ் தனித்துவமானது, ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழில் பேசுவார். எளிய மொழிநடையும், தன்மையான குரலும் நம்மை கட்டிப்போடும். இன்றைய நாகரீக பழக்கவழங்கள் அவை சார்ந்த சொற்களை அவர் படைப்புகளில் காண முடியாது. இடை இடையே நம் மக்களின் மூட நம்பிக்கைகள் குறித்து எள்ளலாய் சில கருத்துகளையும் தூவி இருப்பார். இன்றைய தலைமுறை இளைஞர்கள், குழந்தைகள் என்று அனைவரும் அவரது பேச்சையும் விரும்பி கேட்கிறார்கள், அவரின் நூலையும் வாசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பாம்புகள் குறித்து மிக விரிவான நூலை எழுதி இருக்கிறார் தேக்கன் ஐயா. இதில் பாம்புகள் சார்ந்த மக்களின் மூட நம்பிக்கைகளால் எப்படி பாம்புகள் அழிந்து வருகின்றன என்று விளக்குகிறார். விஷமுள்ள பாம்புகள் விஷமில்லாத பாம்புகள் என்று விரிகிறது நூல். பாம்பின் விஷத்தை எடுத்து மருத்துவத்திற்கு பயன்படுத்துவதும், அதற்காக உதவும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த இருவருக்கு அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இருப்பதும் இந்தநூலில் இருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டு தலை பாம்பு உண்டா ? இச்சாதாரி பாம்புகள் இருந்தனவா இன்னும் இருக்கின்றனவா ? பாம்பின் வாயில் மாணிக்கம் உண்டா ? போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு தேக்கன் சரியான பதிலை தந்திருக்கிறார்.
"ஆதியில் யானைகள் இருந்தன" என்ற நூலில் ஆதிகாலத்தில் யானைகள் எப்படி இருந்தன தற்போது அவை அடைந்துள்ள மாற்றங்கள் யாவை என்றும் காடு உருவாக யானைகளின் பங்கு எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைக்கிறார். இந்த நூலில் தான் மதம் பிடிப்பது என்றால் என்ன என்று அறிந்து கொண்டேன், அது குறித்த தகவல்களை விரிவாக விளக்குகிறார் தேக்கன். காட்டை சுத்தப்படுத்தும் தூய்மையாளரான கழுதைபுலி, கழுதை, பல்லி, எறும்புகள், மயில், தவளை, நாய்கள் என்று எந்த விலங்கையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் குறித்து அற்புதமாக தனி தனி நூல்களாக எழுதி இருக்கிறார்.
இவையல்லாமல் பறவைகள் குறித்தும் தனி நூல்களை படைத்திருக்கிறார். அதில் ஊர் புறத்துப் பறவைகள், இறகுதிர் காலம், பறவையின் எச்சத்தில் பூக்கும் ஒரு காடு, உயிர் இனிது, உயிர் புதையல் போன்ற நூல்களை படைத்திருக்கிறார். இவரின் நூல்களை வாசித்த எவரும் இயற்க்கையின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை உணர்வார்கள். நம்மையறியாமல் நாம் இயற்கைக்கு எவ்வளவு குந்தகம் விளைவிக்கிறோம் என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்விற்கு என்ன வழி செய்யலாம் என்று சிந்திக்க தொடங்குவார்கள் என்பது உறுதி.
நூல் அறிமுகத்திற்கு பிறகு அனைத்து நூல்களையும் வாங்கும் பேராசை வந்ததென்னவோ உண்மை. அங்கிருந்த நூல்களில் பாதியை வாங்கிய பிறகு தான் நிம்மதியாக இருக்கையில் அமர்ந்தேன். பின் கட்டில் சூடான சப்பாத்தியும் குருமாவும் தயாராகி கொண்டிருந்தது, வாசம் பசியை தூண்டிய போதும் யானைகளை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம் என்று குழந்தைகள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இதற்கு பிறகு ஆற்றல் பிரவீன் குமார் அவர்கள் யானைகளை குறித்து ஒரு காணொளி காட்டினார்கள். அதில் தெரிந்து கொண்ட யானைகளை பற்றிய தரவுகளை மட்டுமே தனி பதிவாக எழுத விழைகிறேன்.
தொடர்ந்து பயணிப்போம் .......
Leave a comment
Upload