தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை -31- மரியா சிவானந்தம்

20250701073326984.jpeg

மனிதருக்கு எப்போதும் ஏற்படும் குழப்பம் இது!

யார் சொல்வதைக் கேட்பது ?

நம்முள் இயங்கும் இதயம் , நம்மை இயக்கும்அறிவு .

அன்பு, காதல், பாசம் , நட்பு என்னும் உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் என்றால் நம் உணர்வுகளை கட்டுப்படுத்தி, நல்வழி செலுத்தும் அறிவின் இருப்பிடம் மூளை .

நம் உணர்வு சொல்வதைக் கேட்க வேண்டுமா ?

அறிவு சொல்வதைக் கேட்க வேண்டுமா ?

இது போன்ற இக்கட்டான தருணம் நம் நற்றிணை நாயகனுக்கும் ஏற்படுகிறது.

தலைவியைப் பிரித்துப் பொருள் தேடி நெடும் பயணம் மேற்கொள்கிறான்.

வழி நெடுக அவனைத் தலைவியின் நினைவு வாட்டுகிறது.

அவன் உள்ளம் சொல்கிறது , " காதலியின் நினைவில் நீயும் , உன்னை நினைத்து அவளும்வருந்திக் கொண்டு இருக்க வேண்டாம் . நீ திரும்பிச் செல்"

அவனது அறிவோ , " வறுமை நீங்க பொருள் தேடி செல்கிறாய் . அந்த வினை முடிக்காமல்திரும்பிச் செல்வது கேலிக்கூத்தாகி விடும்" என்று இடித்துரைக்கிறது.

இருபுறமும் நெருக்குண்டு, நிலை குலைந்து வேதனையைக் கூறுகிறது இந்த நற்றிணைப்பாடல் .

தலைவன் தனக்குத்தானே புலம்புகிறான்

" என் தலைவியின் முதுகில் அடர்ந்த ,கரிய கூந்தல் புரள்கிறது.

நெய்தல் மலரை ஒத்த அவள் மை தீட்டிய கண்கள் , என் உள்ளத்தை அவளுடன் இறுகப்பிணிக்கிறது.

அப்பிணைப்பை எண்ணி என் மனம் " தலைவியிடத்து செல்வோம், அவளது துன்பத்தைத்தீர்ப்போம்" என்று கூறுகிறது.

என் அறிவு " தொடங்கிய வினையை முடிக்காமல் இடையில் விலகுவது அறியாமை அல்லவா? பிறர் இகழ்ந்து பேசும் செயல் அல்லவா, எனவே நீ திரும்பிச் செல்லும் செயலைச்செய்யாதே ? " என்று சொல்கிறது .

இவ்வாறு இரு மாறுபட்ட கருத்துக்களை என் உள்ளமும், அறிவும் சொல்ல, நான் இரண்டுக்கும்இடையே பரிதவிக்கிறேன்.

என் உடல் இத்துன்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறது

தலையின் முன்புறம் கொம்பு முளைத்த யானையைக் கட்டி வைத்த , புரிகள் பிரிந்த பழங்கயிறு போல என் உடல் திண்டாடுகிறது" என்று புலம்புகிறான்.

உணர்வுக்கும் , அறிவுக்கும் நடக்கும் போராட்டத்தை, பாலைத்திணைப் பாடலாக எழுத்தில்வடித்தவர் மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் என்னும் புலவர்

''புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்

நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,

உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்'', நெஞ்சம்,

''செல்லல் தீர்கம்; செல்வாம்'' என்னும்:

''செய்வினை முடியாது எவ்வம் செய்தல்

எய்யாமையோடு இளிவு தலைத்தரும்'' என,

உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,

''சிறிது நனி விரையல்'' என்னும்: ஆயிடை,

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய

தேய்புரிப் பழங் கயிறு போல,

வீவதுகொல் என் வருந்திய உடம்பே?

அறிவின் வழி நிற்பதே அறம் என்று நாம் நினைப்பதைப் போலவே தலைவனும்நினைத்திருப்பான்.

மேலும் ஒரு இனிய நற்றிணைப் பாடலுடன் சந்திப்போம்

தொடரும்