தொடர்கள்
கதை
முரண் - சத்யபாமா ஒப்பிலி

20240507233303542.jpeg

" லட்சுமி உன் புள்ளை அங்க குடிச்சுட்டு போலீஸ் காரன் கூட சண்ட போட்டுட்ருக்கான். நம்ம சங்கரு கடைக்கு எதுத்தாப்புல. என்ன சொன்னாலும் அடங்க மாட்டேங்கறான். ஓடிப்போ. போலீஸ் அடிச்சே சாவடிச்சுற போறானுங்க" மேரி சொன்னதும், கழுவிக்கொண்டிருந்த பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த வாளி தண்ணீரில் வேகமாக கையை முக்கி எடுத்து, முட்டியில் கைவைத்து எழுந்து கொண்டாள். மனதின் வேகம் உடம்பில் வருவதில்லை. புடவை தலைப்பில் கையைத் துடைத்துக்கொண்டே வாசலைப் பார்த்து ஓடினாள்.

"உன் கால வைச்சுக்கிட்டு மெதுவா போ லட்சுமி. " சொல்லிவிட்டு கூடவே நடந்தாள் மேரி.

சற்று பெருமனான உடம்பு லட்சுமிக்கு. அதனாலேயே கால் வலியும்.

விந்தி விந்தி வேகமாக நடந்தாள்.

" என்ன பொழப்பு மேரி இது. அவங்கப்பன் எங்க போனான்னே தெரியல. நாலு வருஷம் ஆச்சு. ஒழுங்கா படிச்சுட்டு இருந்த பிள்ள. இப்படி ஆயிட்டானே! தினமும் யாரோடையாவது சண்ட. கேக்க நாதி இல்ல. பொழுது விடிஞ்சா போதும் எங்கேயோ போகவேண்டியது. இதுக்கெல்லாம் எங்க காசு வருதோ. ஐயோ! நேத்திக்கு வட்டி கட்ட பணம் வைச்சுருந்தேனே டப்பால! எடுத்துகிட்டானோ என்னவோ!"

மூச்சு முட்டியது லட்சுமிக்கு.

"திருட ஆரம்பிச்சாச்சு, பொய் சொல்றான். கூட்டு சரி இல்ல.. சிலசமயம் காலைல அவன் குடிச்சுட்டு அலங்கோலமா விழுந்து கிடைக்கறத பாத்தா சனியன் அப்படியே எங்கயாவது போய் தொலையாதான்னு தோணும். நம்ம அன்னாடம் பொழப்பே முழி பிதுங்குது. இதுல இவன் வேற.!!”

இடம் நெருங்க நெருங்க படபடப்பு கூடியது லட்சுமிக்கு.

ஒரு போலீஸ் வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அங்கங்கே கூட்டம் இருந்தாலும், எல்லாரும் அவரவர் வேலையை செய்வது போலவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சட்டை இல்லாமல், எப்பொழுதுவேண்டுமானாலும் விழுந்துவிடும் தொள தொள பேண்டுடன், அங்கிருந்த ஒரு போலீஸுடன் கையை கையை ஆட்டி தள்ளாடியபடியே எதோ பேசிக்கொண்டிருந்தான் அவள் மகன். அவன் பேச பேச,

'நானும் சொல்லிகிட்டே இருக்கேன், கூட கூட பேசற நீ. பெத்து போட்டுட்டு ஊர் மேய விட் றவேண்டியது. எங்கடா உங்கப்பனும் ஆத்தாளும். அவங்களையும் ரெண்டு போட்டாத்தான் சரி படும்."

லட்சுமி காதில் அவர் சொன்னது தெளிவாக விழுந்தது. தலையில் அடித்துக் கொண்டே வேகமாக அவனருகில் ஓடினாள்.

"சரி தான் நீங்க சொல்றது, இவன பெத்ததுக்கு எனக்கும் ரெண்டு அடி குடுங்க ."

நடக்கமுடியாமல் நடந்து வந்த லட்சுமியைப் பார்த்தார் அவர்.

"நீதான் அம்மாவா?"

ஆமாம் அய்யா. இவன் என்ன செஞ்சான்.?

"காலங்காத்தால குடிச்சுட்டு அலும்பு பண்ணிட்டு இருக்கான்! கேக்க மாட்டயா?" போற வருவாங்க கிட்ட எல்லாம் ஏதோ ஒளறிக்கிட்டு இருக்கான். சின்ன பசங்க ஸ்கூல் போற நேரம். நிதம் இதே பண்றானாம். கேக்க மாட்டாயா?"

"கேக்க மாட்டயா, கேக்க மாட்டயா சொல்றீங்களே, கேக்காம இருப்பேனா ? என்ன சொன்னாலும் கேக்கறதில்லயே"

தன்னை சுற்றி இருக்கும் மக்கள், கையில் பிரம்பை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காத ஒருத்தன், பரட்டை தலையுடன், அழுக்கு பேண்டுடன், சுத்தி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உளறிக்கொண்டிருந்த மகன்.. லட்சுமிக்கு சுய பரிதாபம், ஏமாற்றம், ஆற்றாமை எல்லாம் சேர்ந்து கோவமாக வெடித்தது.

"மானத்த வாங்கறயே. உங்கப்பன் அடிச்ச கொட்டம் போதாதுன்னு நீ வேற".

இரெண்டு கையையும் தூக்கி ஓங்கி தன் மகனை முதுகில் அடித்தாள். தடுமாறி கீழே விழுந்தான் அவன். கூட்டம் லேசாக சிரித்தது. அவனுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. பேண்டை ஒரு கையால் பிடித்துக் கொண்டு எழுந்து,

"ஏய் லூசு ஆத்தா, என்று ஆரம்பித்து ஏதேதோ குழறியபடியே கோபத்துடன் அவளருகில் சென்றான்.

"இவனுகளுக்கு முன்னாடி நீஅடி க்கற இல்ல இப்போ பாரு என்று சொல்லிக்கொண்டே தரையில் இருந்த ஒரு கல்லை எடுத்து காவல் வண்டியில் எறிந்தான். கல் எங்கேயோ போய் தான் விழுந்தது. ஆனாலும் ஏற்கனவே கோபத்தில் இருந்த அந்த போலீஸ் , வேகமாக அவனருகில் வந்து, கையை பிடித்து அவன் முதுகுக்கு பின்னால் வைத்து மடக்கினார்.

"ஆ " என்று அலறினான் அவன்.

லட்சுமி தலையில் அடித்துக்கொண்டே,

" அய்யா, அய்யா புள்ள வலி தாங்காது, விட்ருங்கய்யா, நான் கூடி கிட்டு போறேன்" என்று கெஞ்சினாள்.

"என்ன வலி தாங்காதா என்று கேட்டு மறுபடியும் அவர் கையை முறுக்க,.

"லட்சுமி அழுது கொண்டே, தன மகனைப் பார்த்து,

"உனக்கு தேவையாடா இது, ஏன் இன்னும் உசுரோட இருக்க, செத்து தொலைய வேண்டியது தானே" என்று கத்தி விட்டு, போலீசின் அருகில் சென்று, மறுபடியும் கெஞ்ச தொடங்கினாள்.

" நான் கண்டிக்கறேன் அய்யா, இனிமே இப்படி செய்ய மாட்டான். செய்ய மாட்டான். பச்ச புள்ளயா பச்ச புள்ள , வலி பொறுக்காது",

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

கள்ளுண்ணாமையில் வள்ளுவர்.

வள்ளுவனுக்கு 2000 வருடங்களுக்கு முன்னரே டாஸ்மாக் திறக்கப்போவது தெரிந்திருக்கிறது. ஆனால் அதை தெரிந்த வள்ளுவனுக்கு அம்மாக்களைப் பற்றி மட்டும் ஒன்று புரியவேயில்லை. பெற்ற மகன் குடித்திருந்தாலும் அவன் மீது அவளுக்கு பாசம் குறைவதேயில்லை….

வள்ளுவன் மறந்த முரண் !!!