தொடர்கள்
பொது
யாமறியோம் பராபரமே - ஆரா 

20240507180200205.png

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதனின் புதிய பரிமாணங்கள் பற்றி சமீப காலமாக ஒரு பயம் கலந்த உற்சாகம் பெருகி வருகிறது. குறிப்பாக ஜெனெரேட்டிவ் AI -யின் பிள்ளைகளான Chat GPT, Gemini , Co-Pilot, போன்றவை புரட்சிகரமான விஞ்ஞான வளர்ச்சிகளாக பார்க்கப்படுகின்றன.

சரி, இதெல்லாம் என்ன? எதற்கு இத்தனை கூப்பாடு? நம்மை போல சாமானியர்கள் புரிந்தும் கொள்ளும் அளவில் சொல்வதானால் நாம் சொன்னதை மட்டும் செய்த கணினி இப்போது நாம் நினைப்பதை போல தானும் நினைத்து செயலாற்ற விழைகின்றது எனலாம். அதற்காக நம் ரஜினி-சிட்டி ரோபோட் போல என்று எண்ணக்கூடாது. அதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். இப்போதைக்கு இந்த AI ஆனது LLM எனப்படும் சிக்கலான மொழி மாதிரிகளைக் கொண்டு பொதுவான ஆங்கிலத்தில் வரும் கட்டளைகளை (prompt) புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் பதில் அளிக்க சுயமாக கன்டென்ட் உற்பத்தி செய்கிறது. இவை உரைகளாகவோ (text), ஒலியாகவோ (audio), படங்களாகவோ (image, video) நம்மால் பயன் படுத்தக்கூடிய அளவில் கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு கேள்வி கேட்டால் பதிலுக்கு வலைப்பக்கங்களை வரிசைப்படுத்தும் தேடல் பக்கம் போல் இல்லாமல், இவை சரியான வலைப்பக்கங்களில் இருந்து தேவையான பதில்களை படித்து புரிந்து நமக்கு பதிலாகவே அளித்து விடுகின்றன. இதனால் பெரும் நிறுவனங்கள் இந்த Gen AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல புதிய விஷயங்களை உருவாக்கவும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய பல சேவைகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வருவாய் பெருக்கவும் மும்முரமாக ஆராய்ச்சி மற்றும் முயற்சிகளில் இறங்கி உள்ளன. அதே நேரத்தில் இந்த புதிய ஜெனெரேட்டிவ் திறனால் ஏற்படக்கூடும் ஆபத்துக்களும் (ரஷ்மிக்காவின் லிஃட் வீடியோ நினைவு இருக்கிறதா?) அதிகம் என்பதால் நுண்ணறிவிற்கான நல் வழிகள் (AI Ethics) மற்றும் சட்டங்கள் இயற்றி இதனை தீவிரமாக கண்காணித்து வழிநடத்த வேண்டும் என்பது திண்ணமாகிறது.

இந்த புதிய உருவாக்கும் திறன் AI துறையின் பரிமாண வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பாராட்டப்படுகிறது. இந்த உருவாகும் சக்தி ஏற்கனவே உள்ள பகுப்பாய்வு /பகுத்தாய்வு (analytics) திறனுடன் உடன் சேரும்போது பல சாத்தியங்களை உருவாக்க வல்லது. அதுபோலவே இயந்திரவியல் (robotics/mechatronics) போன்ற விஞ்ஞான வளர்ச்சிகள் இதனுடன் கை கோர்க்கும் போது சிட்டி போன்ற ரோபாட்டுக்கள் மொழி புரிந்து, ஓரளவு சிந்தித்து, இடம் பொருள் ஏவல் உணர்ந்து செயலாற்ற வழி பிறக்கும். அவ்வாறு உருவாகும் ரோபோக்கள் ஒரு நாள் நம் ஆற்றல் எல்லைகளைக் கடந்து இந்த உலகை ஆளும் காலம் வரலாம் என்பது தான் பலரின் பதற்றதிற்கும் காரணம். சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'-வில் தொடங்கி, ஹாலிவுட்டில் பிரபலமான டெர்மினேட்டர், I-Robot, Matrix போன்ற திரை படங்கள் அன்றே இந்த சிந்தனையை வைத்து கற்பனை உலகங்களை நமக்கு காட்டி உள்ளன. சமீபத்திய 'மிஷன் இம்பாசிபல்-7' படத்தில் கூட டாம் க்ரூஸ்-க்கு வில்லன் ஒரு வலுவான எல்லாம் அறிந்து எல்லாம் கணிக்கக்கூடிய முக்காலம் உணர்ந்து செயல் ஆற்றகூடிய உலகாள முயலும் ஒரு AI தான்.

இதற்காக இன்றே அறிவான சமூகம் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டது. காரணம், விஞ்ஞான மற்றும் AI வளர்ச்சியின் வேகம் இயற்கையின் பரிமாண வேகத்தைப்போல இல்லாமல் பன்மடங்கு துரிதமானது. மனிதன் பறக்க கற்று நூறு ஆண்டுகளுக்குள் நிலவில் கால் வைக்கவில்லையா? அது போலத்தான்.

அப்படி என்றால் இது நடந்தே விடுமா? எப்போது இது நிகழும்? என் பேரனின் பேரன் ஒரு வேளை ரோபோவின் பண்ணையில் பணியாளாக காலம் தள்ள வேண்டி இருக்குமோ? (ரோபோ பண்ணை வைத்து என்ன செய்யும்?!) அல்லது வழக்கம் போல மனித மூளை தன் மகத்தான ஆற்றலால் மேலும் வளர்ச்சி பெற்று மனித-இயந்திர கலவைகளாக (cyborg) மாறி கோள்களை ஆள முற்படுமா? இல்லை இதெல்லாம் வளரும் முன்னரே உலக வெப்பமயமாவதால் மனித இனம் தானும் அழிந்து பூமியையும் அழித்து விடுமா? ChatGPT -ஐ கேட்டால் அது இதற்கு அனுமானித்து ஒரு பதில் சொல்லலாம். ஆனால் அப்படித்தான் நிகழுமா என்ன? யாமறியோம் பராபரமே!