தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ 16 - பித்தன் வெங்கட்ராஜ்

20240605180945661.jpg

எவ்வத்தின் நுதிகாண நீயாற்றுமேதும்

எவ்வாறு இங்கே பிழை!

பௌவத்தின் துளிமொண்டு மாகஞ்செய்யாது

அவ்வானில் எங்கே மழை!

-பாடலாசிரியர் மதன் கார்க்கி.

வழக்கத்திற்கு மாறாக ஜூலை மாதத்தில் பரவலாகப் பெய்துவருகிறது மழை. அங்கும் இங்கும் எனத் தமிழகம் முழுதுமே கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துக்கொண்டிருக்கும் இச்சூழலில் என்னை மழையைப் பற்றி எழுது என்று சொன்னது ஓர் இரவுமழை.

மழைக்கென்றே ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளான் ஐயன் வள்ளுவன்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை. - (குறள்:12)

என்றொரு குறள். உணவுப் பொருள்களை விளைவிக்கவும், விளைவித்த பொருள்களைச் சமைத்து உணவாக்கவும் மட்டுமல்லாது தானே ஓர் உணவாகவும் அமைவது மழை என்கிறார் வள்ளுவர். அவ்வதிகாரத்தில் முத்தாய்ப்பாக, ‘நீரின்றமையாது உலகு’ என்றவன் அந்த நீரையே தருவது மழைதான் என்று வான்சிறப்புப் போற்றுகின்றான்.

வானிலிருந்து பெய்யும் மழையை மனிதன் சரியான வகையில் பயன்படுத்தத் தொடங்கியதுதான் அவனது நீர்மேலாண்மை. சிறிதளவாகத் தேக்கி, பயன்படுத்துமளவுக்கு இருக்கும் நீர் நிலையைக் குட்டை என்றழைத்தான் தமிழன். போலவே, நீர் கசிந்து தானே உருவானது ஊற்று, குளி(ர்)ப்பதற்குப் பயன்படுவது குளம், உணவாக அதாவது குடிநீராக இருப்பது ஊருணி, ஏர்த்தொழிலுக்குப் பயன்படுவது ஏரி, மழை நீரை மட்டுமே ஏந்தி நிற்பது ஏந்தல், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்று ஒவ்வொன்றுக்கும் சரியான பெயரையிட்டு அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறான் தமிழன்.

வானிலிருந்து பெறும் மழையைப் பயன்படுத்துவது சரி. வான் எப்படி‌ மழையைத் தருகிறது என்ற கேள்விக்கு இப்போது நாம் அனைவரும் பதில் அறிந்து வைத்திருக்கலாம். ஆனால், அறிவியல் ரீதியாக முதன்முதலில் மழையின் தோற்றம் பற்றிய கருத்தைக் கூறியவர் 'ஆல்ஃப்ரெட் வெஜினர்' (ஆண்டு 1911) என்னும் ஜெர்மானியக் காலநிலை நிபுணர் மற்றும் புவியியலாளர் ஆவார். இவரே “கண்ட நகர்வுக் கோட்பாட்டை”யும் முன்வைத்தவர்.

இவருக்கெல்லாம் முன்னோடியாக, கிட்டத்தட்ட 330 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பூமியிலுள்ள மொத்த ஆறுகளின் நீருக்கும் மழைப்பொழிவு ஒன்றே போதுமானதாக இருக்கும் என்று 1580 ஆம் ஆண்டு கூறியவர் 'பெர்னார்ட் பலிசி' என்ற ஃப்ரெஞ்ச் நீர்மவியல் பொறியாளர் . இவரே நவீன நீர்ச்சுழற்சிக் கோட்பாட்டின் தந்தை என்று அறியப்படுகிறார்.

20240605180254420.jpg

ஆனால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் ‘பெண் ஆழ்வார்’ ஆண்டாளின் பாடலைப் பாருங்கள்.

20240605180431553.jpg

'ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்'

-திருப்பாவை 4

கடல்நீரை முகந்து வானில் ஏறி, பரமன் மேனியைப்போல் கறுத்து அதாவது மேகமாக மாறி, அவன் சக்கரம்போல் மின்னி, சங்கைப்போல் அதிர்ந்து இடி இடித்து, சார்ங்க வில்லிலிருந்து பாயும் அம்புகளைப்போல் மழையைப் பொழிக என்று வருணனை வேண்டுகிறாள் ஆண்டாள்.

இதற்கும் முன்னோடியாக, குறிஞ்சிப்பாட்டில் கபிலர் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.

'விசும்பு ஆடு பறவை வீழ்பதிப் படர

நிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு

அகல்இரு வானத்து வீசுவளி கலாவலின்

முரசுஅதிர்ந் தன்ன இன்குரல் ஏற்றொடு

நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி

இன்னிசை முரசின் சுடர்ப்பூண் சேஎய்

ஒன்னார்க்கு ஏந்திய இலங்குஇலை எஃகின்

மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென'

-குறிஞ்சி- வரிகள்: 46-53

2024060518055350.jpg

வானில் பறக்கும் பறவைகள் கூடுதிரும்பின. நிறைந்த கடல்நீர் குறையும்படியாக நீரை முகந்துகொண்டு மேகம் மேலேறி, மிகுதியான காற்றுடனும், முரசு அதிரும்படியான இடியுடனும், ஒளிமிக்க அணிகலன்கள் அணிந்த முருகப்பெருமானின் இலைவடிவ வேலின் மின்னொளி போன்ற மின்னலுடனும் அங்கே மலைமீது மழை பொழிந்தது என்கிறார்.

போலவே, பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திருங்கண்ணனாரின் வரிகள்.

'வான் முகந்தநீர் மலைப்பொழியவும்

மலைப் பொழிந்தநீர் கடல்பரப்பவும்

மாரிபெய்யும் பருவம்போல

நீரினின்றும் நிலத்துஏற்றவும்

நிலத்தினின்றும் நீர்ப்பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்'

-பட்டினப்பாலை- வரிகள்: 126-131

வானம் கடலிலிருந்து முகந்த நீரை மண்மீது பொழிவதும், மண்ணில் பாயும் நீர் கடலில் சேர்வதுமாகிய மழைக்காலம்போலே, கடல்வழியாகக் கப்பலில் வந்து பொருள்களையெல்லாம் கரையில் இறக்குவதும், இங்கிருந்து அனுப்பவேண்டிய பொருள்களைக் கப்பலில் ஏற்றுவதும் என அளவிலாப் பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன என்கிறார்.

20240605180154724.jpg

ஒவ்வொரு நீர்நிலைக்கும் அதன் பயன்பாட்டையொட்டி ஒரு பெயர் சூட்டிய தமிழர், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே நீர்ச் சுழற்சிக் கோட்பாடறிந்த தமிழர் எனப் பெருமைகொள்வதோடு, அந்த நீர்ச்சுழற்சியை அப்போது நிகழ்ந்த கடல்வாணிப ஏற்றுமதி இறக்குமதிக்கு உவமையாக்கி வியப்பூட்டிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும் நமக்கும் யாவர்க்கும் அள்ள அள்ளக் குறையாத பெருங்கடலாய், மழையாய், நீராய், உயிராய் இருக்கும் நம் தமிழுக்கு இது பதினாறாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.