நட்புக்கு என்று ஒரு விதிமுறை உண்டு.
ஒருவருடன் பழகும் முன்னே ஆராய்ந்துப் பார்த்து அவர் நமக்குத் தகுதியானவரா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் .அதன் பின்னரே அவர் நட்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த நட்பை ஆராயக்கூடாது.
வள்ளுவர் கூறும் இந்த இலக்கணம் "நட்பாராய்தல் " என்னும் அதிகாரத்தில் பின் வரும் குறளாக மின்னுகிறது
"நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவருக்கு " (குறள் 791)
ஒருவரை மனதால் விரும்பி நட்பு கொண்ட பின் அவரை விட்டு விலகுவது கடினம் . எனவே ஒருவரைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ளாமல் நட்பு கொள்வது போல கேடு தருவது வேறொன்று இல்லை
இந்த விதி காதலுக்கும் பொருந்தும் .
கபிலர் கூறும் காதலின் இலக்கணமும் அதுதான்
"காதலிக்கத் தொடங்கும் முன்பே அவனைப் பற்றி தெளிவாக தெரிந்துக் கொள் .காதலில் விழுந்தபின்னர் அக்காதலை ஆராயாதே" என்று பொருள் பட பாடும் நற்றிணைப் பாடல் இது
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!(நற்றிணை 32)
- கபிலர்
காதலன் மலைநாட்டின் தலைவன் . அடிக்கடி அவன் தலைவியைத் தேடி வருகிறான்.தலைவியோ அவனை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கிறாள் .தலைவியின் தோழி தலைவிக்கு அறிவுறுத்தும் பாடல் இப்பாடல்.
தோழி கூறுகிறாள் :
" வாழ்க , என் தோழி நீ !
திருமாலின் கரிய நிறத்தைக் கொண்ட ஓங்கி நிற்கும் உயர்ந்த மலை. ,அம்மலையின் ஒரு புறத்தில் திருமாலுக்கு முன்பு பிறந்த பலராமனின் வெண்ணிறத்தை க் கொண்ட அழகிய அருவி .
அந்த மலையின் தலைவன் உன் உறவைத் தேடி நம் இடத்துக்கு அடிக்கடி வருகிறான் . நீ அவனைத் தவிர்ப்பதால் அவன் வருத்தத்துக்கு உள்ளாகிறான். இதை நான் சொன்னால் நீ ஏற்க மறுக்கிறாய் .
நீ உனது பிற தோழிகளுடன் கூடி ஆராய்ந்துப் பார் ,நான் சொல்வது உண்மை என்று புரியும் . அவன் காதலை உணர்ந்து அவனுடன் உரையாடு .
பெரியோர் எப்போதும் நட்பு கொள்ளும் முன்பே தம் நட்பை விரும்பி வந்தவர்களைப் பற்றி தீர விசாரித்து அறிந்துக் கொள்வார்கள் .
அவர்கள், உன்னைப் போல நட்பு கொண்ட பின்னர் எவ்வித ஆராய்ச்சியும் செய்ய மாட்டார்கள் "
அழகான உவமானத்துடன் தோழி சொல்லும் கருத்து தலைவிக்கு ஏற்றுக் கொள்ள தக்கதாகவே இருந்திருக்கும்
ஊடல் விடுத்து தலைவனுடன் அவள் மீண்டும் இணைந்திருப்பாள் .
காதலின் இயல்பு அதுதானே ?
தொடரும்
Leave a comment
Upload