குப்புசாமி மாமா அவர் புதிதாக குடி வந்திருக்கும் சீனியர் லிவிங் கம்யூனிட்டியையே அதகளப்படுத்திக்கொண்டிருந்தார். அதை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் கோவிலில் செப்டெம்பர் 7 ம் தேதி கும்பாபிஷேகமும், பிள்ளையார் சதுர்த்தியும் கோலாகலமாக நடைபெற திட்டம் போடப்பட்டது. விழாக்கமிட்டி தலைவராக அன்னபோஸ்ட்டாக (வேறு ஆளில்லாததால் ) குப்பு மாமா தேர்ந்தெடுக்கப் பட்டார். மீனாட்சி மாமி (அவர் மனைவி ) பொருளாளர். பக்கத்து பிளாட் பரிமளா மாமி செயலாளர் (குப்பு மாமா ரெகமெண்டஷன்) "புல்டாக்" பத்மநாபன் (எப்போது முகத்தை மூலம் வந்தவர் வைத்துக்கொண்டிருப்பதால் ) துணைத்தலைவர்.
விழா ஆலோசனைகளில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தானே உருவாக்கிய வாட்சப் குரூப்பில் மெஸேஜ் போட்டார் குப்பு. பின்குறிப்பாக " மீட்டிங் முடிவில் சூடாக குடைமிளாகாய் பஜ்ஜியும், பில்டர் காபியும் வழங்கப்படும் என்று போட்டு அதை BOLD செய்திருந்தார் ) மீட்டிங் ஹால் நிரம்பி வழிந்தது. தன் வீட்டிலிருந்தே , தானே பஜ்ஜி போட்டு கொண்டுவந்திருந்தார். கோவில் விஷயம் என்பதால் மாமி பிகு பண்ணாமல் காபி போட்டு கொடுத்தாள். நூறு பிளாட்டிலிருந்தும் மக்கள் ஆஜர். (பஜ்ஜி ஆறுவதற்குள் மீட்டிங்கை முடிக்கச்சொல்லி மேலிடத்து ப்ரெஷர் வேறு ) எல்லோரும் வீட்டிற்கு 2000 கொடுக்க முடிவானது. மாமாவுக்கு ரெண்டு பொறுப்பு பிள்ளையார் சிலையும், பிரசாதமும். முன்னது தயார் செய்தும் (திருடியும்) பின்னது சுயமாக செய்வதாயும் மாமா ஒப்புக்கொண்டார். பஜ்ஜி காபி விநியோகத்துடன் மீட்டிங் சூடாக முடிந்தது. பரிமளா மாமி தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த ப்ரெஷ் கொத்தமல்லி சட்னியை குப்பு மாமா தட்டிலும் தன் தட்டில் மட்டும் லிமிடெட் எடிஷன் ஆக பரிமாறியதை, மீனாட்சி மாமியின் CC TV நோட் பண்ணத் தவற வில்லை, ரெக்கார்டிங்கும் தான்.
சிலை கடத்தல் அன்று இரவே பிளான் செய்யப்பட்டது, மாமாவுக்கு சிலையை காண்பிக்க , கூடவே உதவ அவரது மச்சினன் அச்சு (எ) அச்சுதன் அவன் மனைவி அலமு (எ) அலமேலு மற்றும் அவன் பிள்ளை சுப்புணி (எ) சுப்பிரமணி ஆகியோர் கொண்ட படை தயார். போருக்கு போவது போல் சாக்கு பை, கடப்பாரை, கயறு, டார்ச் லைட் மொபைல் முதலிய திருட்டுக்கு முக்கிய தேவையான தளவாடங்களுடன் தயாரானது குப்பு &கோ. மாமி ஆரத்தி எடுத்து திலகமிட்டு முக்கியமாய் தைரியத்திற்கு விபூதி பூசிவிட்டு , வழியனுப்பி வைக்க தயாரானாள். ஆரத்தி ஒளியில் குப்புசாமீ கருப்பசாமி போலவே பயங்கரமாய் தெரிந்தார். எப்போதும் அவரை உரசிக்கொண்டே வரும் அச்சுவே ரெண்டு அடி தள்ளியே வந்தான். மாமா ஆவேச நிலையில் இருந்தார். பம்பை, உடுக்கை அடித்திருந்தால் மாமாவுக்கு சாமி வந்திருக்கும்.
இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஆலமரத்தடி அநாதை பிள்ளையாரைத் தான் அச்சு குறி வைத்திருந்தான். வெறும் டீ மட்டும் சாப்பிட்டு மறைந்து இருந்து நடவடிக்கைகளை (பிள்ளையாரின்??) கவனித்து , இவர் தான் மரத்தடியிலிருந்து மாடி வீட்டுக்கு குடியேற பொருத்தமானவர் என்று குடிசை மாற்று வாரிய அதிகாரியாய் மாறி முடிவு செய்திருந்தான்.
ராத்திரி மணி 11 . கிட்டத்தட்ட வேட்டைக்குப்போகும் கருப்பசாமியாய் குப்பு மாமா, கூடவே சாக்குப்பையோடு அச்சு. மீனு மாமியின் காபி இருவருக்கும் ஒரு அசாத்திய தைரியத்தை கொடுத்திருந்தது. மீனாட்சியையே சமாளிக்கும் நமக்கு இது ஜுஜுபி என்று குப்பு மாமா மனதில் நினைத்துக்கொண்டே ஆலமரத்தடியை நெருங்கினார். தான் படுத்திருக்கும் இடத்தை ஆட்டையைப்போட யாரோ வருகிறார்கள் என நினைத்து அங்கே வழக்கமாக படுத்திருக்கும் தெரு நாய் குறைக்க வாயை திறக்கவும், சரியாக ஒரு மசால் வடையை அதன் வாயைக் குறி பார்த்து அச்சு எறியவும் சரியாக இருந்தது. வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்கம் ஏன் மிஸ் ஆனது? அச்சு கலந்து கொள்ளாததால் தான் என்று அதை பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும். வடை வாயில் போய் உட்கார அதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , குறைக்கவும் முடியாமல்..அச்சுவைப் பார்த்து " அலமுவை இது மாதிரி வாயை மூட வைக்க முடியுமா ? என்று கேட்பது போல முனகலோடு ஒரு கேவலமான பார்வை பார்த்தது. அச்சு டார்ச் அடிக்க மாமா வேலையை துவங்கினார். பிள்ளையாருக்கு கற்பூரமேற்றி வேண்டிக்கொண்டார், கற்பூரம் எரிந்து முடிக்கவும் கடப்பாரையை கையில் எடுத்தார்...டூட்டி நைட் வாட்ச்மேன் அந்தப்பக்கம் வரவும் அச்சு ஆலமரத்தின் பின்னே பதுங்க, திட்டத்தில் இது இல்லாததால், மாமா கடப்பாரையும் கையுமாக அப்படியே உறைந்து நின்றார். (கவனிக்க:அச்சு கவனித்தது பகலில்) பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் இன்னொரு சிலையாய், முகத்தில் டார்ச் அடித்த வாட்ச்மேன் கடப்பாரையுடன் ?? நிற்கும் கருப்ப சாமீ சிலையை ??!! (நல்லவேளையா மாமா கண்ணாடி போடவில்லை, காண்டாக்ட் லென்ஸ் போட்டிருந்தார், கண்கள் ஜொலித்தது ) எதிர்பாராமல் பார்த்த அதிர்ச்சியில் மயக்கமாகி கீழே விழுந்தான்..."பிரமாதம் அத்திம்பேர் ...என்ன ஒரு தத்ரூபம் " என்று பாராட்டிக்கொண்டே மரத்தின் பின்னாலிருந்து அச்சு வெளியே வந்தான். அந்த நேரத்திலும் புன் முறுவலோடு தன் சிஷ்ய கேடியின் பாராட்டை குப்பு மாமா ஏற்றுக்கொண்டார். நாளே குத்தில் சிலை பீடத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. ஜாக்கிரதையாய் துணியில் சுற்றி சாக்கு பைக்குள் வைத்துக்கொண்டார். கையோடு கொண்டு வந்த துளசி செடி தொட்டியை (மாமாவின் மாஸ்டர் பிளான் ) அந்த காலி இடத்தில வைத்து விட்டு இருவரும் விறு விறுவென கிளம்பினர். சிலையை கொண்டு போய் கோயிலில் வைத்துவிட்டு அச்சுவை வழியனுப்பி வைத்துவிட்டு வெற்றி வீரராய் வீட்டுக்குள் நுழைந்தார் குப்பு. மீனு மாமி தலையை ஆட்டி என்ன ஆச்சு? என்று கேட்க, கட்டை விரலை உயர்த்தி காண்பித்துக்கொண்டே உள்ளே நுழைந்த வெற்றி வீரர் குப்புவை சூடான காபியோடு வரவேற்றாள் மாமி. வாழ்க்கையில் முதல் முறையாக மாமியின் பாராட்டை பெற்றதாலோ என்னமோ முதல் முறை சட்டசபையில் நுழையும் MLA போல கனவில் மிதந்தார். கட்டிலில் விழுந்து கனவுகளோடு தூங்கி போனார். அடுத்த நாள் கொழுக்கட்டை செய்ய தயாரானார். மறுநாள் கும்பாபிஷேகம் & பிள்ளையார் சதுர்த்தி. கீழே கேன்டீனுக்கு சென்று அச்சுவிடம் கொடுத்து வாங்கச் சொன்ன பொருட்களையெல்லாம் எடுத்து வைத்து, அரிசி மாவினை தயார் செய்ய துவங்கினார். அச்சு குடும்பத்தோடு வந்து கொழுக்கட்டை பிடிக்க ஆரம்பித்தான். (காபியும் டிபனும் வருமே, !!) அச்சு கொழுக்கட்டைக்கு மாவில் சொப்பு செய்ய ,திரென புயலாய் உள்ளே புகுந்த பரிமளா மாமி அச்சுவுக்கும் குப்பு மாமாவுக்கும் நடுவில் உட்கார்ந்து உள்ளே பூரணம் வைத்து மூட ஆரம்பிக்கவும், காபியோடு மாமி வரவும் சரியாக இருந்தது. அச்சுவுக்கு கொடுத்துவிட்டு , குப்பு மாமாவிடம் டம்ளரைக் கொடுக்கப்போனபோது (வழக்கம்போல..??!!) இடையில் கை நீட்டி அதை வாங்கி (பிடுங்கி )கொண்டாள், பரிமளா மாமி. மாமி மாமாவை முறைத்தாள். "அவளா வந்தா, உக்காந்தா, பூரணம் வெச்சா, இப்போ காப்பிய பிடுங்கினா, இதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?" என எல்லாவற்றையும் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரம் , பத்மினியிடம் சொல்வது போல அபிநயம் பிடித்தார். நாகலிங்கம் போல பரிமளா மாமி , "காபி பிரமாதம், மாமா டிகாஷன் நீங்க போட்டேளா ?" என்று கத்தி வீசினாள், கத்தி இடம் மாறி பத்மினியை தாக்கியது. " டிகாஷன், காபி கலந்தது எல்லாமே நான் தான் " மீனு மாமியின் குரலில் கடுப்பு தெரிந்தது. அதை புறம் தள்ளியவளாய் , "எங்க மாமா காபி பொடி வாங்கறீங்க , எனக்கு ஒரு அரை கிலோ வாங்கி கொடுங்க" என்று , மாமாவின் க்ரைம் ரேட்டை ஏற்றினாள்.
காபி சாப்பிட்ட டம்பளர்களை மாமி பிடுங்கிய விதத்திலேயே அச்சுக்கு புரிந்தது , இன்று மாமாவுக்கு கேன்டீன் சாப்பாடு தான் என்று. சரி நெல்லுக்கு இறைத்த நீராய் தனக்கும்....என்பதால். அமைதியானான். ஒருவழியாய் கொழுக்கட்டை புராணம் முடிவுக்கு வந்தது.
மறுநாள் காலை கோயில் கும்பாபிஷேகம், காம்பௌண்டு களை காட்டியது, மீனு மாமி மடிசாரில் ஆஜர். தன் அறுபதாம் கல்யாண பட்டு வேஷ்டியில் மாமாவும் ரெடி. கமிட்டி தலைவர் என்ற முறையில் குப்பு மாமா தான் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகிழ்ந்தார். ஏகப்பட்ட மொபைல் கேமரா கவரேஜ், யூட்யூப் லைவ், மீண்டும் ஹீரோவானார் குப்பு மாமா! விழாவுக்கு பந்தோபஸ்துக்கு வந்திருந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர், மாமாவை உத்து உத்து பார்த்துக்கொண்டிருந்தார்...தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த மீனு மாமி அவரிடம் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு...காபி சாப்பிட வீட்டிற்கு அழைத்தாள். இருவரும் போனதை சாரத்தின் மேலிருந்து பார்த்த மாமாவுக்கு கை, காலெல்லாம் வெடவெடத்தது....பரிமளா மாமி இதை பார்த்து என்ன மாமா விடிகாலை குளிரா..? என்றாள். "பிள்ளையார் பிடிக்க ....இன்ஸ்பெக்டராய் முடிந்துவிட்டதோ?" என மாமாவுக்கு சந்தேகம்.
காபி சாப்பிட்ட திருப்தியில் கீழே வந்த இன்ஸ்பெக்டர் நேராக குப்பு மாமாவிடம் வந்து "பிரியா இருந்தா, கொஞ்சம் ஸ்டேஷன் பக்கம் வந்துட்டு போங்க " என்று சொல்லி விட்டு போனார். மாமாவுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டுவிட்டது. கடவென மேலே ஏறி தன் வீட்டுக்குப் போய், AC ஆண் செய்து கட்டிலில் போர்வையை போர்த்திக்கொண்டு படுத்துவிட்டார்.மொபைலை ஆஃப் செய்து விட்டார்...கனவினில் கம்பிகளின் பின்னே குப்பு....
(PIN குறிப்பு: இன்ஸ்பெக்டரிடம் பேசி பிள்ளையார் திருட்டு விஷயத்தை பற்றி கேட்டு அவர்கள் யாரோ ஒரு பழைய திருடனை கைது செய்து விட்டதாகவும், பெரிதாக புகார் எதுவும் இல்லாததால், அது ஒன்றும் பெரிய கேஸ் இல்லையென்பதையும், தன் கணவர் நன்றாக கைரேகை பார்ப்பார் என்றும், ஸ்டேஷனுக்கு கூப்பிட்டு நீங்கள் கை பார்த்து பலன் சொல்ல சொல்லுங்கள் என்றும் மாமி சொல்லியிருப்பது பாவம் மாமாவுக்கு தெரியாது )
Leave a comment
Upload