நமது வழிபாட்டு முறையில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம் பிள்ளையார் கோயில்களில் சிதறு தேங்காய் உடைப்பது. எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் போது பிள்ளையாருக்குச் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவோம்.
அவரை முதலில் வழிபட்டு ஆரம்பிக்கும் எந்தவொரு செயலும் நன்மையில் முடியும் என்கிறது நமது சாஸ்திரம்.
சிதறு தேங்காய் உடைத்தல் என்பது ஒரு நேர்த்திக்கடன் ஆகும். தேங்காயை ஓங்கி தரையில் அடித்து உடைக்கும்போது, அது உடைந்து சில்லுச்சில்லாகச் சிதறும். அது போல விநாயகரின் அருளால் நம்மைப் பீடித்திருக்கும் தோஷங்களும், பாவங்களும், விக்னங்களும் வேதனைகளும் இந்தக் காய் உடைந்து சிதறுவது போல, அனைத்தும் நம்மை விட்டுச் சிதறி ஓடும். தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருப்பது, அதற்குரிய முக்கிய சிறப்பு.
புராணங்களில் சிதறு தேங்காய்:
தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பொன் வெள்ளி இரும்பாலான கோட்டைகளைக் கட்டி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்தனர் . அந்த அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர் . அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது. இது விநாயகர் செயல் என்பதை உணர்ந்த சிவபெருமான் விநாயகரை மனதில் நினைத்தார். (எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்பது நியதி. அது சிவபெருமானுக்கும் பொருந்தும்)
மறுகணம் அங்குத் தோன்றிய விநாயகருக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் விநாயகர். உடனே, சிவபெருமான் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயைப் பிள்ளையாருக்கு படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிடப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
சிதறு தேங்காய் உடைப்பதின் பலன்கள்:
நாம் வெளியூர் பயணம் செய்யும்போது, கல்யாண வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் முதலான விசேஷ நாட்கள், சரியான முடிவை எடுக்கச் சிரமப்பட்டுத் தவிக்கும் தருணம், என வாழ்வின் முக்கியமான வேளைகளில் சிதறு தேங்காய் உடைத்துவிட்டுத் தொடங்க வேண்டும். அப்படித் தொடங்குவதால் எந்த காரியத் தடையும் இருக்காது. காரியம் சித்தியாகி நமக்கு வெற்றியையேத் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
Leave a comment
Upload