இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய
சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் ஒன்பதாவது அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியாவை பிரதமராகஇலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமித்திருக்கிறார்.
ஹரிணி 2020 இல் அரசியலில் நுழைந்தாலும் 2021 ல் தான் முழு நேர அரசியல்வாதியாக தீவிரமாக பணியாற்ற ஆரம்பித்தார். 3 வருடங்களிலேயே இலங்கையின் பிரதமராக வந்திருப்பது ஆச்சரியமான அசுரவளர்ச்சி தான்.
ஜேவிபி ஒரு இடதுசாரி கட்சி , மார்க்சிஸ்ட் என்ற பிம்பத்தை மாற்றிய பெருமையில் ஹரிணிக்கும் பெரும் பங்குண்டு. ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுனா ) கட்சியின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தோமானால் ஒரே ரத்த சரித்திரமாக இருக்கிறது. 1971 மற்றும் 1988-89 ல் இலங்கை அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டு சுமார் 80,000 மக்களை கொன்றழித்த தீவிரவாத இயக்கம் தான் ஜேவிபி. ஆனால் ஜேவிபி காலப்போக்கில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மக்களுக்கான இயக்கமாக உருமாறி , 2019 ல் “தேசிய மக்கள் சக்தி” என்ற புது பெயருடன் கட்சியை ஆரம்பித்தது. இன்று ஜனநாயக வழியில், சில அரசியல்கட்சிகள், இளைஞர் இயக்கங்கள், பெண்கள் குழுக்கள், வர்த்தகர்கள் சங்கம் என மொத்தம் 21 அமைப்புகள் சேர்ந்து “தேசிய மக்கள் சக்தி” தலைமையில் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். சிங்கள பெரும்பான்மைத்தனத்தை ஆதரித்து சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் இன்று இக்கட்சிக்கு தமிழர் வாழும் பகுதியிலிருந்து குறைந்த அளவே ஓட்டு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தங்களது கடந்தகால தவறுகளுக்காக ஜேவிபியின் தலைவரும், தற்போதைய அதிபருமான அநுரா குமார திசாநாயக மன்னிப்பு கேட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து தங்கள் அரசு நன்மை செய்யும் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. இன்று இதை பார்க்கும் போது மறைந்த ஈழ தலைவர் பிரபாகரனும் ஒரு கட்டத்தில் தங்களது போராட்ட வழிமுறையை மாற்றி, ஜனநாயக ரீதியில் களத்தில் இறங்கி இருந்தால் இது போல் அவர்களும் இன்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தமிழீழ மக்களுக்கு நன்மை செய்திருக்கலாமே என்கிற ஆதங்கம் தோன்றுகிறது. ஜேவிபி என்ற தீவிரவாத அடையாளத்தை மறக்கடித்து, தேசிய மக்கள் சக்தி கட்சியை சாத்வீகமான முகமாக காட்ட மெத்த படித்த ஹரிணி மிகவும் உதவி இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.
கல்லூரி பேராசிரியராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் களப்பணியாற்றிய ஹரிணியின் பின்புலம் இதற்கு பக்கபலமாக இருந்தது.
ஹரிணி, 1991-1994 க்கு இடையில் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் இளங்கலைப்பட்டப்படிப்பையும் , மானிடவியலில் முதுகலைப் பட்டமும் , முனைவர் பட்டமும் எடின்பர்க் பல்கலைகழகத்தில் பெற்றவர். எந்தவித அரசியல் பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தாலும் தமது மக்களுக்கான நீதி கேட்டு போராட்டங்களிலும், சமூக அரசியலிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வந்திருக்கிறார். அதன் பலனாக இன்று ஹரிணி இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். இவருக்கு முன் சிறிமாவோ பண்டாரநாயகேவும், சந்திரிகா குமாரதுங்கவும் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். 54 வயதாகும் ஹரிணி, மார்க்சிஸ்ட்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
இலங்கையின் புது அரசு, இடதுசாரி, மார்க்சிஸ்ட் கட்சி ஆயிற்றே..?!காம்ரேட் சீனாவுடன் இன்னும் நெருங்கி இந்தியாவை வெறுப்பேத்துவார்களா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து ஹரிணியிடம் கேட்கும்போது “இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டக்காலத்திலெல்லாம் சீனா எங்களுக்கு பக்கபலமாக நின்று உதவியதை நாங்கள் நன்கு அறிவோம். சீனாவுடனான உறவை நீடிப்பதே எங்களின் எண்ணம். கடந்தகாலங்களில் சீனாவுடன் சேர்ந்து நாங்கள் இயங்கி வந்திருக்கிறோம். வருங்காலங்களிலும் அது தொடரவே விரும்புகிறோம்” என்கிறார்.
சீனாவுடனான இலங்கையின் நட்பால் சீனாவின் கடற்படை கப்பல்கள் இந்திய பெருங்கடலில் சுதந்திரமாக உலாவி வருகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தான தலைவலி ஏற்கனவே இருக்கிறது. கடந்த ராஜபக்ஷே ஆட்சியில் கொழும்பு பக்கத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு இலங்கை வழங்கியது. அதுவும் முன்னாள் ராஜபக்ஷே சகோதரர்கள் ஆட்சியில், இலங்கை சீனாவுடன் மிகவும் ஒன்றிப்போய் இதுவரை எந்த ஆட்சியாளர்களும் ராஜபக்ஷே அளவுக்கு ஒட்டி உறவாடவில்லை என்ற பெருமையையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். என்னதான் டெல்லியில் ஹரிணி படித்திருந்து இந்திய தொடர்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தியாவா?சீனாவா ? என்ற நிலைப்பாடு வரும்போது இலங்கை எப்படி இரண்டையும் சமநிலையில் அணுக போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய அரசு இலங்கையின் மிக மோசமான காலக்கட்டத்தில் பதவி ஏற்றிருக்கிறது. நிலைக்குலைந்த பொருளாதாரம், விண்ணை முட்டிய விலைவாசி, கடன் கட்ட முடியாமல் திவால் ஆன அரசு என நாலு முனையிலும் ஈட்டி பாய்கிற அபாயகரமான சூழ்நிலை நிலவுகிற நேரத்தில் ஹரிணி பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். தேர்தலில் வெற்றிப்பெற்ற ஹரிணியிடம்
வெளிநாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் “ புதிதாக அரசு அமைத்திருக்கும் உங்களுக்கு நாட்டை ஆள்வதில் அனுபவம் உள்ளதா?” என்று கேட்டதற்கு “ நாட்டை திவால் ஆக்குவதில் எங்களுக்கு அனுபவம் கிடையாதுதான். ஆனால் புதிதாக நாட்டை கட்டமைத்து முன்னேற்றப்பாதையில் நடைப்போட வைக்கும் அனுபவம் எங்களுக்கு கிடைக்க போகிறது” என்று சொல்லி ஹரிணி அசத்தினார். சமூகத்தில் படித்தவர்களுக்கு என்று ஒரு மரியாதை இப்பவும் உள்ளது. அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் மனதில் நம்பிக்கையின்மையும் விரக்தியும் வெளிப்படுத்தும் காலக்கட்டம் இது. இந்தியாவோ, இலங்கையோ, பொறுப்புமிக்க பதவியில் மிக்க படித்த அரசியல்வாதி ஒருவர் பொறுப்பேற்கும் போது இவர் படித்தவர், நிச்சயம் நல்லது செய்வார் என்று மக்கள் இன்னும் நம்புகிறார்கள். இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ஹரிணி அமரசூர்ய நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
Leave a comment
Upload