தொடர்கள்
கதை
தர்க்க சூத்திரம் - சுஶ்ரீ

20240828092120563.jpg

நல்ல ஜிகுஜிகுனு இளம் மஞ்சள் கலர்ல புடவையை கட்டிண்டு ஃபுல் அலங்காரத்துல என் முன்னாடி வந்து நின்னா சுசீலா.

ஏங்க இன்னிக்கு ஒருநாளாவது என் புடவைக்கு மேச்சான கலர்ல ஷர்ட் போட்டுட்டு வாங்களேன்.உங்களுக்கு டிரஸ்ஸிங் சென்ஸே இல்லை எப்பப் பாரு சாணிக்கலர்ல ஒரு பேண்ட்,அழுக மாங்கா கலர்ல ஒரு ஷர்ட்.

போட்டுட்டா போச்சு,ஆமாம் இன்னிக்கு என்ன விசேஷம் எங்கே போறோம்.

நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு. இப்படி திடீர்னு கேட்டா எப்படிச் சொல்றது.

இது என்ன ஐ.ஏ.எஸ் கொஸ்டினா என்ன, நம்ம கல்யாணம் நடந்து எத்தனை வருஷம் ஆச்சுனுதானே கேட்டேன்.

போன மாசம் ராமகிருஷ்ணா மடத்துல,ஒரு சத்சங்க பிரவசனம் போனேன்தானே!

ஆமாம் ஏங்க சம்பந்தமே இல்லாம பேசறீங்க?

அந்த லெக்சர் முடிஞ்ச உடனே அந்த குரு முத்தியானந்த ஸ்வாமிகளை போய் தனியா பாத்தேன்னு அன்னிக்கே சொன்னேன்தானே.

ஐய்யோ நான் கேட்டதுக்கும் நீங்க சொல்றதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா சொல்லுங்க.

நீ சம்பந்தம்னு சொன்னவுடனே ஞாபகம் வருது,என் கூட மெஜுரா காலேஜ்ல படிச்சானே, சம்பத் சொல்லி இருக்கேன்தானே உனக்கு?

எனக்கு தலை சுத்துது.

அந்த சம்பத்துப் பய இருக்கானே படு கிராதகன் அவன் ஊர்க்காரா எல்லாரையும் ஏமாத்தறதுல கில்லாடி.ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமோ!

சொல்லித் தொலையுங்க,கேட்டுத் தொலைக்கறேன்,எல்லாம் என் கர்மா.

என்ன முனங்கறே.

இப்படி ஒரு அசத்தை கட்டிண்டு குப்பை கொட்டறோமேனு என் மேலயே நான் சுயபச்சதாபம் பட்டுக்கறேன்.

ஆமாம் மனசுல உள்ள கெட்ட எண்ணங்கள் ஒரு குப்பை மாதிரிதான் அப்பப்ப,அதை வழிச்சு கொட்டிடணும்.நீ ஏதோ சொல்ல வந்தயே அதையேன் சொல்லாம சுத்தி வளைக்கறே.

வேற என்ன உங்க கூட மெஜுரா காலேஜ்ல படிச்ச சம்பத் பத்திதான் யோசிச்சு தூக்கம் வராம தவிச்சிண்டிருக்கேன் போறுமா.

அவனை உனக்கும் தெரியுமா? நீ பழனிலேன்னா இருந்தே,ஏதாவது தூரத்து சொந்தமா,உன்னை புரபோஸ் பண்ணினானா!நல்ல பையன்தான் ஆனா நிறைய பொய் சொல்வான்.நல்லவேளை நீ அக்செப்ட் பண்ணலை.

ராமா,ராமா உங்க கூட பேசினா எனக்கு பைத்தியம்தான் பிடிக்கும் நல்ல நாளும் அதுவுமா,வாய் கூசாம பேசறதைப் பாரு.

இப்ப என்ன கூசாம சொன்னேன், அந்த சம்பத்தை சொன்னா உனக்கு ஏன் கோபம் வரது?லவ் ஃபெயிலியரா.என் கிட்ட சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டேன்.எல்லார் லைஃப்லயும் ஒரு ஃபர்ஸ்ட் லவ் இருக்கும்.நான் கூடதான் பேங்க்ல வேலைக்கு சேந்த புதுசுல பிரேமா மேல ஒரு கிரஷ்.நான் அப்ப கொஞ்சம் ஜெய்ஷங்கர் மாதிரி இருப்பேனா,அதனால அவளும் என்னையே பாக்கற மாதிரி தெரிஞ்சது. ஒரு சனிக்கிழமை அரை நாள் லீவா, ஆபீஸ் விட்டுப் புறப்படறப்ப அவகிட்ட கேட்டேன் ஆரியபவன் மசாலாபால் நன்னா இருக்கும் வரயா போகலாம். அவ சரி எனக்கும் உங்க கிட்ட தனியா பேசணும் வாங்கன்னா. போனோம்.

அட திருட்டுக்கொட்டு இத்தனை வருஷமா என் கிட்ட இதை மறைச்சு வச்சீங்களா!

நீ அந்த சம்பத்தை பத்தி கூடதான் எப்பவும் சொன்னதில்லை.

அட கிறுக்கு மனுஷா சம்பத்துன்றது உங்க பிரண்ட்,எனக்கு எப்படி அவனைத் தெரியும்.

நீதானே இப்ப சொன்னே சம்பத் உன்னை புரொபோஸ் பண்ணினான்னு.

என் புத்தியை செருப்பால அடிச்சிக்கணும்,உங்களைப் பத்தி தெரிஞ்சும் உங்க கூட தர்க்கம் பண்றேனே.

தர்க்கம்ன்னவுடனே சாணக்கியர் ஞாபகம் வருது,கெளடில்யர்னு கூட சொல்லுவா அவர் பெயரை,அர்த்தசாஸ்திரம்னு ஒரு அற்புதமான புஸ்தகத்தை எழுதியிருக்கார்.

தம்தம்னு தரைல காலை உதைச்சிண்டு பெட்ரூமுக்குள்ள போய், ஜிகுஜிகு புடவையை கழட்டிட்டு நைட்டியை போட்டுண்டு திரும்பி வந்தா சுசீ. “போறுமா எங்கேயும் வரலை இப்ப நானு”

நான் எங்கே கூப்பிட்டேன், ராஜு பையன் பூனல்கல்யாணம் அடுத்த வாரம்தானே.

திரும்ப தம்தம்னு நடந்து சமையலறைக்குள்ளே போயிட்டா,பாத்திரங்கள் படாத பாடு பட்டு சத்தம் போட்டது.

நான் சட்டையை மாட்டிண்டு ராயர் கடைக்குப் போனேன்,ஒரு ஸ்ட்ராங் காபி அடிக்க.

நான் யாரு,எங்க கிட்டயேவா! போன வருஷம் வெட்டிங்டே ஷாப்பிங்னு சொல்லி கிரெடிட் கார்ட்ல நாப்பந்தைஞ்சாயிரம் ரூபா தேச்சது எப்படி மறக்கும்.