சாஸ்தா என்றால் தலைவன் என்றும் பரிபாலனம் செய்பவன் என்றும் அர்த்தம்.
ஹரிஹர புத்திரனாக அவதரித்தவர் ஆதிபூத நாதர் எனும் ஆதிமூல சாஸ்தா. இவர் மேரு பர்வதத்தில் ஸ்படிக மயமான சிகரத்தில் வசிப்பவர். அச்சங்கோயிலில் குடி கொண்டிருப்பவர் இந்த சாஸ்தா தான் என்பது ஐதீகம். மழைவளம் தருபவர். பயிர்கள் செழிக்க அருள்பவர். நீர் நிலைகளைக் காப்பவர்.
இவரை புவன சாஸ்தா என்பதும் உண்டு. மதனா - வர்ணினீ என்ற இரு தேவியருடன் ஐயனார் என்று வழிபடப் பெறுகிறார்.
அஷ்ட சாஸ்தாக்கள் என்ற பகுப்பில் பல கிரந்தங்களும் வித்தியாசப் படுகின்றன.
ஶ்ரீசக்ரார்ச்சன தீபிகை/லக்ஷ்மி கல்பம்/ தியான ரத்னாவளி/ ஆகாச பைரவ கல்பம் என ஒவ்வொன்றும் சாஸ்தாக்கள் எண்மரை குறிப்பிடுவதில் வேறுபடுகின்றன. பல்வேறு நூல்களில் ஏறத்தாழ 104 சாஸ்தாக்களாக சொல்லப் படுகின்றன. பொதுவாக பூர்ண புஷ்கலா சமேதராக, செண்டாயுதம் ஏந்திய ஆதிமூல சாஸ்தாவின் எட்டவதாரங்களைப் கீழ்கண்ட முறையில் சொல்வது மரபு.
சம்மோஹன சாஸ்தா-
நல்ல இல்லறம் அமைந்து சுகமான வாழ்வு பெற அருள்பவர். நமது இல்லத்தை அரண்போல அமைந்து காப்பவர்.
கந்த புராணம் இவரைப் பற்றிப் பேசும். பில்லி சூன்யம் ஏவல்களும் துஷ்ட கோள்களும் அண்டவிடாமல் ரட்சிப்பவர்.
கல்யாண வரத சாஸ்தா-
விவாஹம் கூடி வரவும், திருமணத்தின் தடங்கல்களைப் போக்கி மங்களம் தருபவர் இவர். தம் இரு தேவிகளுடன் ஆனந்த ரூபராக திகழ்பவர்.
காந்தமலையில் வசிப்பவராக ஐதீகம்.
வேத சாஸ்தா -
வேத ஞானமும், சாஸ்திரங்களில் தேர்ச்சியையும் தருபவர்.
சிம்மத்தை தன் வாகனமாக உடையவர். இவரை சிம்ஹாரூட சாஸ்தா என்றும் அழைப்பர். பச்சைப் பட்டாடை உடுத்தியவர். வேத கோஷத்தை செவிமடுப்பதில் அளவில்லாத ஆனந்தம் கொள்பவர்.
ஞான சாஸ்தா-
வேண்டும் கலைகளில் திறனும், கல்வி கேள்விகளில் உயர்வும் அளிப்பவர். ஆலமரத்தடியில் அமர்ந்தபடியும் கைகளில் மாணிக்ய வீணை ஏந்தியபடியும் ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி ஸ்வரூபம் இவர்.
பிரம்ம சாஸ்தா-
சரஸ்வதி அம்சமானவளும் மாணிக்ய வீணை ஏந்தியவளுமான பிரபாதேவி, மற்றும் புதல்வன் சத்யகனுடனும் இருந்து அருள் செய்பவர். குழந்தைப் பேற்றை தரும் இவர் சந்தான பிராப்தி சாஸ்தா என்றுபெயரும் கொண்டவர். இவரே தசரதன் செய்த புத்ர காமேஷ்டி யாகத்தில் மஹத் பூதமாக பாயச கிண்ணத்துடன் வெளிப்பட்டு வழங்கியவர். ஆர்ய சாஸ்தா என்று இவரை அழைப்பதும் உண்டு.
மஹா சாஸ்தா-
இக வாழ்வில் உயர்வையும், பரத்தில் மோட்சத்தையும் பிரசாதிப்பவர். தனது பக்தனின் எதிரிகளை சிட்சிப்பவர். மதகஜத்தின் மேல் கரங்களில் ஆயுதங்கள் தாங்கி பவனி வருபவர். இவரே கால சாஸ்தா ஆவார். மரணபயம் போக்குபவர்.
வீர சாஸ்தா-
மனத் திடத்தையும், பயங்களைப் போக்கி எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் தருபவர். குதிரையின்மேல் ஆரோகணித்து ஆயுதங்கள் ஏந்தி துஷ்ட நிக்ரஹம் செய்பவர். இவருக்கு அஸ்வாரூட சாஸ்தா என்றும் பெயர்.
தர்ம சாஸ்தா-
கோள்களின் சஞ்சாரத்தில் எதிர்கொள்ள நேரிடும் கஷ்டங்களை நீக்கி அருள்பவர். தர்மத்தைக் காப்பவர். தக்க பலாபலன்களை அளிப்பவர்.
தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா என்று சாத்திரம் கூறும்.தர்ம நெறிகள் தழைக்கச் செய்பவர் என்று பொருள்.
இவர்களன்றி,
கிராத சாஸ்தா
புவன சாஸ்தா
குபேர சாஸ்தா
குரு சாஸ்தா
ஆகாச சாஸ்தா
ஹம்ஸ மதன சாஸ்தா
பூதாதிப சாஸ்தா
பால சாஸ்தா
ஆகிய சாஸ்தாக்களும் பிரஸித்தம்.
சாஸ்தா வழிபாடு நம் பாவங்களையும் கர்ம வினைகளையும் எரித்துப் போக்கவல்லது.
அந்த பகவானை பக்தி செய்து உய்வோம்.
Leave a comment
Upload