அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களால் ஏற்படும் சேதங்களால் பலர் பாதிக்கப்படுவதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு கட்சிகளிடம் முன்வைப்புத் தொகையாக டெபாசிட் வசூலிக்க வசதியாக வழிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு அக்டோபர் 16-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருக்கிறது.
இதற்கு நீதிபதிகள் சொல்லும் காரணம் வழக்கமாக ஏதேனும் ஒரு சம்பவம் நடந்த பின் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு போடுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. அவர்கள் நலன்களை பாதுகாப்பது அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் என்பது மக்களுக்கு இடையூறு என்பது தற்சமயம் வாடிக்கையாகிவிட்டது. இது போன்ற இடையூறான அரசியல் கூட்டங்களுக்கு முறையான நெறிமுறைகள் வகுப்பது அவசியம் தான். சமீபத்தில் விஜய் நடத்திய இரண்டு மாநாடுகளுக்கும் அவரது ரசிகர்கள் சென்ற வாகனங்களுக்கு டோல் கட்டணம் செலுத்தாமல் அராஜகமாக கடந்து போய் இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்வேன் என்று முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் விஜய் முதலில் தனது ரசிகர்களை ஒழுங்குபடுத்துவது அவசியம். இது மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கூட்டம் நடத்த டெபாசிட் தொகை என்பது கட்டாயம் அவசியம் தான். தமிழக அரசு இதை உடனே செயல்படுத்த வேண்டும்.
Leave a comment
Upload