இசை ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்து மறைந்தார் ஜுபின் கார்க். அசாம் மண்ணின் மைந்தனாகிய ஜுபின் கார்க்கின் மறைவுக்கு இந்திய மக்கள் மட்டும் அல்ல, இசை உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.
இம்மாதம் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்ற ஜுபின் கார்க், ஸ்குபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட போது, , மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் கௌஹாத்தியின் அர்ஜுன் பொஹேஸ்வரர் விளையாட்டுத் திடலில் மக்களின் அஞ்சலிக்காக வகைப்பட்டு, பின்னர் அரசு மரியாதையுடன் கமர்க்குச்சி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது
சிறந்த பாடகர் ,இசை அமைப்பாளர், திரைப்படக் கலைஞர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்ட ஜூபின் கார்க். 12 விதமான இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர். நாற்பது இந்திய மொழிகளில் 38000 பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். ஜிபோன் போர்தாகூர் என்ற அவரது இயற்பெயரை, இந்தியாவின் மேற்கத்திய இசை மேதை ஜுபின் மேத்தாவின் மேல் கொண்ட அபிமானத்தால் ஜுபின் கார்க் என்று மாற்றிக் கொண்டவர்.
ஜுபினின் தந்தை நீதிபதி என்றாலும் சிறந்த கவிஞர். அவர் தாயும், சகோதரிகளும் பாடகிகள். எனவே மூன்று வயது முதலே ஜுபினுக்கு இசையின் மேல் காதல். அவர் தாயே அவரது முதல் குரு.அவரது நெடிய இசைப்பயணத்துக்கான துவக்கப்புள்ளி இருபதாவது வயதில் ஒரு இளைஞர் விழாவில் மேற்கத்திய இசைக்கான தங்கப்பதக்கம் வென்றது, அதே ஆண்டு அனாமிகா என்னும் அவரது இசை ஆல்பத்தை வெளியிட்டார்,
பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களுக்கு இசை அமைத்ததவர், பின்னர் அசாமில் இசை பாரம்பரியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அசாமின் இசை முகவரியாகவும், அம்மண்ணின் இசையை மேற்கத்திய உலகுக்கு எடுத்துச் செல்பவராகவும் இருந்தார். "என் இசை தேவை என்றால் அசாமுக்கு வாருங்கள்" என்று பாலிவுட்டுக்கு அறைக்கூவல் விடுத்தார்.
நம் நாட்டிலும், அயல்நாட்டிலும் ஜுபீனின் இசை கொடி கட்டி பறந்தது. அவரது இசை ஆல்பங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று, விருதுகளைப் பெற்றன. சிறந்த இசை அமைப்பாளராகவும், சிறந்த பாடகராகவும் இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர். மொழிகள் தாண்டி, கடல்கள் தாண்டி இவர் குரல் ஜெயித்த போதும், அசாமில் தன் வேரினை இறுகப்பற்றி இருந்தவர் அம்மண்ணை நேசித்தவர். சமூக நலனுக்காகவும். சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்தவர். தன் அறக்கட்டளை வழியாக பல உதவிகளைச் செய்து வந்தவர்
அதனால் மக்கள் ஜுபினைத் தம் உயிராக மதித்தனர், இசைக்கடவுளாக துதித்தினர். அவர் உடல் விமானத்தில் வந்தடைந்த போது கண்ணீரோடு காத்துக் கிடந்தனர். இவர் ஒரு நிகழ்ச்சியின் போது "மாயாபினி ராதிர் புகுத்" என்ற அசாமிய திரைப்படப் பாடலை தன் அடக்கத்தின் போது பாடவேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கேற்ப, அவரது சவ அடக்கத்தின் போது மக்கள் அப்பாடலைப் பாடி வழி அனுப்பி வைத்தனர். அரசு துக்கம் அனுசரித்த மூன்று நாட்களும் அப்பாடலும், இவரது பிற பாடல்களும் சாலைகளிலும், வீடுகளிலும் ஒலித்துக் கொண்டே காற்றில் நிறைந்தன.
கடலென மக்கள் திரண்டு வந்து இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். சமீப காலங்களில் நிகழ்ந்த மரணங்களில் மதர் திரேசா, எலிசபெத் மகாராணி போன்ற பிரபலங்களுக்குத் திரண்ட கூட்டத்தைப் போல மக்கள் லட்சக்கணக்கில் வந்து இவரது அடக்கத்தில் கலந்துக் கொண்டனர். இப்படி ஒரு இசைக்கலைஞன் இருந்ததை உலகம் அவர் இறப்பின் பிறகு அறிந்துக் கொண்டது.
ஜூபின் தா (zubin da) என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாடகனுக்கு அரசு தக்க மரியாதை செலுத்தியது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது
இசைக்கு இறப்பில்லை என்பதால், ஜுபின் கார்க் என்னும் மாகலைஞன் என்றும் வாழ்வான்.
Leave a comment
Upload