
திருமலை எம்பெருமான் புராதன காலத்து நகைகள் எங்கே என்று சென்னை பிரஸ் மீட்டில் கடந்த வாரம் அதன் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கேள்வி எழுப்பி இருந்தார்! ஆந்திர பிரதேச துணை முதல் மந்திரி கிருஷ்ணமூர்த்தி அதற்கான பதிலை சொல்லாமல் தவிர்த்திருந்தார்!
இதற்குள் ஆந்திர அரசு தனது வேகமான செயல்பாட்டால் 65 வயதான திருமலை அரச்சகர்களுக்கு கட்டாய ஒய்வு என அதிரடியாக அறிவித்து உடனே செயல்படுத்தியது! இதில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் உட்பட ஒரு டஜனுக்கு மேற்பட்ட பரம்பரை அர்ச்சகர்கள் ஒரே இரவில் கட்டாயப் பணி ஒய்வு கொடுக்கப்பட்டு தங்கள் பணியினை இழந்தனர்!

ஆந்திர அரசு ஏன் இந்த அவசர கோலத்தில் பரம்பரை அர்ச்சகர்களை இரவு 12 மணிக்கு நீக்கியது என்று திருமலை அர்ச்சகர்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பதற்குள் திருமலை தலைமை தீட்சிதராக வேணுகோபால தீட்சிதரை அவசர அவசரமாக கடந்த வெள்ளியன்றே திருமலை தேவஸ்தானம் ஆந்திர அரசின் உத்திரவுப்படி நியமித்தது! இதற்கு ஆந்திர அரசு சொன்ன காரணம் இளம் அர்ச்சகர்களுக்கு திருமலை கோயிலில் பணி செய்ய கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும் என கூலாக அறிவித்தது! இந்த புதிய தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், ரமண தீட்சிதரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!.
திருமலை ஏழமலையான் கோயிலில் இருந்து ஒரே நாளில் கட்டாய பணி ஒய்வு பெற்ற ரமண தீட்சிதர் தீடீரென பத்திரிக்கையாளர்களை மீண்டும் சந்திக்கிறார் என்ற செய்தி வந்ததும் அனைத்து ஊடகங்களூம் ஆஜர்!

மெல்லிய புன்னகையுடன் வந்த டாக்டர் ரமண தீட்சிதர் பேச ஆரம்பித்தார்.
"திருமலை எம்பெருமான் கோயில் பிரசாத தயாரிப்பு அறை உக்கிராணம் என்றழைக்கப்படும்! இது திருமலை எம்பெருமான் கோயில் ஆனந்த நிலையம் அருகே உள்ளது. இந்தப் பிரசாதக் கூடத்தில் திருமலை எம்பெருமானுக்கு ஆகம விதிப்படி வேத விற்பனர்கள் மேற்பார்வையில் எம்பெருமானுக்கு பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு தினமும் நைவேத்யம் செய்யப்படுவது வழக்கம்.
இந்தப் பிரசாத கூடத்தை கடந்த 25 நாட்களாக திடீரென மூடி விட்டு யாருக்கும் தெரியாமல் அந்த பிரசாத கூடத்தின் தரையினை மிக ஆழமாக தோண்டியுள்ளனர்! இந்தப் பிரசாதக் கூடம் தோண்டும் பணி மிக ரகசியமாக இருந்ததாகவும் இதில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் மன்னர்கள் திருமலை ஏழுமலையானுக்குக் கொடுத்த அரிய வகையான ஆபரணங்கள் புதைத்து வைக்கப்பட்டு பாதுகாப்புடன் இருந்ததாகவும் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்! அந்த அரிய, எம்பெருமானின் பெரும்பாலான விலை மதிக்கமுடியாத ஆபரணங்கள் அவசரமாகத் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது! கடந்த 1000 வருடங்களில் இதுபோன்று ஒரு நாளும் பிரசாதக் கூடம் மூடப்பட்டதில்லை’’ என்றவர் அடுத்து ஒரு திகில் குற்றசாட்டை கண்களில் சோகம் ததும்பக் கூறினார்.
"கடந்த 2001-ல் திருமலை எம்பெருமான் வருடாந்திர பிரமோற்சவத்தின் பிரதான நிகழ்ச்சியான ஏழுமலையான் கருடோற்சவம் நடைப்பெற்றது! அதில் திருமலை மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த பிளாட்டின மாலை கருட சேவையில் செல்லும் உற்சவருக்கு மாட்டி அனுப்பப்பட்டது! அப்போது திருமலை நான்கு மாட வீதிகளில் ஏழுமலையான் ஊர்வலம் வந்தபோது இந்த பிளாட்டின மாலையிலிருந்து விலை மதிப்பற்ற வைரக்கல் மாடவீதிகளில் விழுந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டது! இந்த ப்ளாட்டின மாலை 2001 க்கு பிறகு திருமலை ஏழுமலையானுக்கு அணிக்கவிக்கப்படுவதில்லை!
திருமலை எம்பெருமானுக்கு இந்த ப்ளாட்டின மாலையில் ஒரு விலை மதிப்பற்ற வைரக்கல்லை பதித்து மைசூர் மகாராஜா நன்கொடையாக வழங்கினார்! இந்த வைரக்கல் ஒரு கைக்கடிகாரத்தின் டயல் அளவில் இருக்கும்! இந்த ப்ளாட்டின மாலையில் இருந்து விழுந்த வைரக்கல் அண்மையில் பிரேசில் நாட்டில் நடந்த ஒரு வைர ஏலத்தில் இந்திய மதிப்புப்படி ரூ500 கோடிக்கு ஏலம் போனதாக தெரிகிறது! " என்று முடித்தார் திருமலை கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர்!
இதற்குள் திருமலை தேவஸ்தான அதிகாரிகள் புதையல் எடுத்ததாக திருமலை முன்னாள் ஆலய தலைமை அர்ச்சகர் சொன்ன விவரங்கள் திருமலை முழவதும் பரவியது!
இதைத் தொடர்ந்து திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் (அது கீழ்திருப்பதியில் இயங்கி வருகிறது) முன் இந்து சம்ரட்சண சமதி அமைப்பினர் ரமண தீட்சதரின் குற்றசாட்டை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடக் கோரி கடும் போராட்டம் நடத்தினர்!
2001 திருமலை எம்பெருமான் கருடசேவையில் செல்லும் போது அவர் அணிந்திருந்த ப்ளாட்டின மாலையில் இருந்த ரோஸ்பிங்க் வைரக்கல் மிகவும் அரிதான ராஜ் பிங்க் வைர (Raj Pink Diamond) வகையை சேர்ந்தது! இந்த வித வைரக்கற்கள் மன்னர் காலத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த விலைமதிப்பற்ற வைரம் ஆகும்! இந்த வைரக்கல் 37.3 காரட் அளவில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவிலும் அதன் பின் Sotheby’s ஏல நிறுவனத்திலும் இது ஏலம் விடப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறியிருந்தார்!.
இது சர்வ தேச ஏலத்திற்கு எப்படி, யார் மூலம் சென்றது? இதனை எடுத்துச் சென்றது நிச்சயம் தனி நபராக இருக்க இயலாது! 2001 ல் அப்போதைய திருமலை சீப் விஜிலென்ஸ் அதிகாரி ஒரு ஐஏஎஸ் அதிகாரி! 2001 திருமலை பிரமோற்ச ஊர்வலங்களில் உற்சவ ஆண்டவர் மீது பக்தர்கள் தங்கள் கைகளிலிருக்கும் காசுகளை வீசுவார்கள்.. 'அது எம்பெருமான் அணிந்திருந்த ப்ளாட்டின நெக்லஸ் மீது பட்டதால் ரோஸ் பிங்க் வைரம் உடைந்து கீழே விழுந்துவிட்டது' என அப்போதைய அதிகாரி தேவஸ்தான பதிவேட்டில் குறிப்பு எழுதியுள்ளதாக தெரிகிறது!
இந்த வைரக்கல் சுத்தி கொண்டு உடைத்தாலும் உடையாது என சோத்பீஸ் ஏல நிறுவன வைர மதிப்பீட்டாளர்கள் ஆச்சரியப்பட்டு தெரிவித்ததாக உலக இதழ்களில் செய்தியாக வந்தது! இந்த வைரம்தான் ப்ளாட்டின மாலையிலிருந்து தரையில் விழுந்திருக்கும் அல்லது ஊர்வலம் முடிந்ததும் அதனை வைரத்தொழில் தெரிந்த பணியாளர் மூலம் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது!

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருமலை எம்பெருமானுக்கு மன்னன் தொண்டைமான், அதன் பின் வந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மைசூர் மன்னர், கிருஷ்ண தேவராய மன்னர், கோல்கொண்டா சுல்தான், ஆற்காடு நவாப்கள், பிரிட்டிஷ்காரர்கள் ஆகியோர் அளித்த விலையுயர்ந்த ஆபரணங்கள் தற்போது எங்கு உள்ளன என்பது கேள்விக்குறியாகி உள்ளது! இதனை உரிய விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டுமென ஆந்திரா பாஜக செய்தித் தொடர்பாளர் அஞ்சநேய ரெட்டி கூறுகிறார்.
ஆந்திர அரசு அவசர கோலத்தில் ஏன் இந்த பரம்பரை அரச்சகர் கட்டாயப் பணி ஒய்வை அமுல்படுத்தியது? அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தோம். அதில் முன்னாள் திருமலை தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரும் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று தெரியவந்தது! ரமண தீட்சீதர் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்! ஆந்திர முதல்வர் திருமலை வரும்போதேல்லாம் ஏழுமலையான் கோயில் பிரதான கோயிலின் உள்ளே இருக்கும் ரங்க நாயகி மண்டபத்தில் வைத்து ரமண தீட்சிதரே உள்ளன்போடு ஆந்திர முதல்வரும் தனது நண்பருமான சந்திரபாபு நாயுடுவிற்கு மரியாதை செய்வார்! சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் ரமண தீட்சதரிடம் மிகுந்த அன்பாக இருப்பார்க்ள்! ரமண தீட்சீதர் ஆந்திர முதல்வரிடம் நெருக்கமாக இருப்பதை எப்படியாவது புறம் சொல்லி பிரிக்க வேண்டும் என ஒரு கூட்டம் கோயிலின் உள்ளே செயல்பட்டதாம்!

கடந்த வாரம் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தை முடித்து தேர்தலுக்கு முன் நாள் அமித் ஷா திருமலை தரிசனத்திற்கு வந்தார் ! திருமலை ஆலய தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் அமித் ஷாவை எம்பெருமான் முன்பு நிறுத்தி ஆராதனை முதலிய சம்பிரதாயங்களை செய்தார் ! ரங்கநாயகி மண்டபத்திற்கு அமித் ஷா அழைத்து வரப்பட்டு அங்கு ஆலய மரியாதை அவருக்கு செய்யப்பட்டது! .சிறிது நேரம் அமித் ஷா தலைமை அர்ச்சகருடன் பேசிக்கொண்டிருந்தார்! அவ்வளவுதான். தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கோயிலின் ஆகமவிதி முறைமீறல் மற்றும் விலைமதிக்க முடியாத பழங்கால எம்பெருமான் ஆபரணங்கள் மாயமானது போன்ற விவரங்கள் குறித்து அமித் ஷாவிடம் சொல்லிவிட்டார் என்று ஆந்திர முதல்வருக்குத் தகவல் பரப்பப்பட்டது! திருமலையில் நடக்கும் முறைகேடுகளை எப்படியும் உடனே பிரதமர் மோடி கவனத்துக்கு அமித் ஷா கொண்டு சென்றுவிடுவார் என்று ஆந்திர அரசுக்கு தகவல் சொல்லப்பட்டதாம்! ஏற்கெனவே மத்திய அரசுடன் சுமுகமான போக்கு இல்லாத ஆந்திர அரசுக்கு இது என்ன புதுத் தலைவலி என்று யோசித்து அவசர அவசரமாக '65 வயதான ஆலய அர்ச்சகர்கள் கட்டாய ஒய்வு' என்ற சட்டத்தினை ஒரே இரவில் அவசரமாக அமல்படுத்தியது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

கட்டாயப் பணி ஒய்வு சட்டம் கொண்டு வந்ததும் ஆலய தலைமை அர்ச்சகர் அமைதியாகிவிடுவார் என்ற ஆந்திர அரசின் எண்ணத்தில் மண் விழுந்தது! தற்போது இந்தத் திருமலை விவகாரத்தை சிபிஐ மூலம் விசாரணை செய்வதா அல்லது அதிகாரிகள் மூலம் விசாரணை செய்வதா என்பது மத்திய அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
ரமண தீட்சிதருடன் மற்ற மூன்று பரம்பரை அர்ச்சகர் குடும்பங்களும் கடந்த 2000 ஆண்டுகளாக திருமலையில் பரம்பரை வழியாக அர்ச்சகர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்! ‘தங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது! ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள கட்டாய பணி ஒய்வு சட்டம் செல்லாது. ஆந்திர அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என முன்னாள் தலைமை அர்ச்சகர் மற்றும் அவருடன் பணி ஒய்வு கொடுக்கப்பட்ட பரம்பரை அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறும் நடவடிக்கையில் இருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன !

இந்தக் களேபரங்கள் அடங்குவதற்குள் ஞாயிற்றுக்கிழமை திருப்பதி அன்னமய்யா பவனில் திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி அசோக்குமார் சிங்கால் பிரஸ்மீட் நடத்தினார். ஆலய அர்ச்சகர் ஒய்வு வயது 65 என அரசாணை எண்கள் 1171 மற்றும் 611 படிதான் செயல்படுத்தப்பட்டது! இதில் ரமண தீட்சீதர் மீது தனிப்பட்ட எந்தவித பழிவாங்கும் நோக்கத்தில் பணி ஒய்வு அமல்படுத்தபடவில்லை! ஆலய நித்திய பூஜைகள் ஆகமவிதிப்படி திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், வேத விற்பன்னர்கள் அறிவுரை மற்றும் முன்னிலையில் நடைப்பெறுகிறது! ஆகம விதிகள் அனுமதித்தால் திருமலை எம்பெருமானுக்கு நடக்கும் அனைத்து சேவைகளும் நேரலையாக சேனல்களில் ஒளிபரப்ப தேவஸ்தானம் தயார்! புதிய மேனேஜ்மெண்ட் கமிட்டி கடந்த 1 மார்ச் 1979 படி தான் பூஜைகள் மற்றும் பக்தர்களின் தரிசன முறை நடை பெற்று வருகிறது! ஆலய ஆபரணங்கள் குறித்து ஆலய திருவாபாரண ரிஜிஸ்தரில் முறையாக பதிவு செய்யப்பட்டு பாதுக்காக்கப்படுகிறது! அதில் உடைந்த நகைகளின் கற்கள் கூட முறையாக துணியால் கட்டி எந்த ஒளிவு மறைவின்றி பாதுக்காக்கப்பட்டு வருகிறது! ஜஸ்டிஸ் வாத்வா கமிட்டி அறிக்கைப்படி அனைத்து ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளன. ஆகம விதிமுறைகளின்படியும் உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்தில் எம்பெருமானின் அனைத்து ஆபரணங்களும் கண்காட்சிப்படுத்தப்படும். அத்துடன் ரமண தீட்சிதர் சொல்வது போன்று 2001ல் கருட சேவையின் போது பிங்க் டைமண்ட் காணவில்லை என்பது தவறு! அன்றைய தினம் காணமல் போனது சாதாரண ரூபிதான். பிங்க் வைரம் இல்லை என்பது ஜஸ்டிஸ் ஜெகன்னாதராவ் கமிட்டி அறிக்கையிலுள்ளது! இந்த ரூபி பதிக்கப்பட்ட ஆபரணம் மைசூர் மன்னர் 1945-ம் வருடம் நன்கொடையாகக் கொடுத்த போது அதன் மதிப்பு ரூ. 50 மட்டுமே ஆகும்! இந்த அறிக்கையை 2010 ல் அப்போதைய நிர்வாக அதிகாரி கிருஷ்ணராவ் அரசிற்கு அறிக்கை அளித்துள்ளார்! ஆகம விதிகள்படி அதன் வல்லுநர்கள் கொண்டு பிரசாத கூடம் (உக்கிரணம்) சீரமைக்கப்பட்டது! என பல விவரங்களும் நிருபர்களிடம் சொல்லப்பட்டது.
இப்படிக் கூறியவரிடம் நிருபர்கள், "பணி வயது 65 அதன்பின் ஒய்வு என சட்டம் அமுலில் உள்ளதென்றால் பணி ஒய்வு வயது கடந்த பின்னும் அர்ச்சகர் டாலர் சேஷாத்திரி மட்டும் திருமலையில் எப்படி தொடர்ந்து பணி செய்கிறார்?" என்றபோது "அவர் சிறப்புப் பணி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார் (Officer on Special Duty) "என்றவர் "ரமண தீட்சதர் மற்றும் இதர பணி நீக்கம் செய்யப்பட்ட அர்ச்சகர்களை அரசு உத்தரவோ அல்லது நீதிமன்ற ஆணையோ மீண்டும் பணி அமர்த்த உத்திரவிட்டால் திருமலை தேவஸ்தானம் அவர்களை மீண்டும் உடனே பணி அமர்த்தும்!" என்றார்!

கடந்த 2009ம் வருடம் ஆந்திர நீதிமன்றத்தில் திருமலை நகைகள் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் திருமலையில் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பொதுநல வழக்கு ஒன்று ஆந்திர பக்தர் ஒருவரால் தொடரப்பட்டது! அப்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தான் சேர்மன் ஆதிகேசவலு ‘திருமலை நகைகள் குறித்து உரிய ஆவணங்கள் உள்ளது! எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை’ என்றார்! அப்போதும் இதே டாலர் சேஷாத்திரி தான் சிறப்புப் பணி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டிருந்தார். எம்பெருமானின் அனைத்து ஆபரணங்களூம் இவரின் கட்டுபாட்டில் தான் இருந்தது! ‘எம்பெருமானின் அபூர்வ வகை நகைகள் அடங்கிய பொக்கிஷம் பாதுகாப்பாக இருந்தது’ என்றார் அதிகாரி! அப்போது உயர்நீதிமன்றம் "திருமலை எம்பெருமான் நகைகள் அனைத்தும் லிஸ்ட் செய்யப்பட்டு செப்டம்பர் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும்" என உத்திரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு ரமண தீட்சிதர் புயலைக் கிளப்பியுள்ளார். ஆக மொத்தத்தில் உண்மையில் திருமலை எம்பெருமானுக்கு பழங்கால நகைகள் எவ்வளவுதான் தற்போது இருப்பு இருக்கிறது என்பது ரகசியமாகவே இருக்கிறது! மத்திய அரசுதான் விசாரணையை தொடங்கி உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!
கோவிந்தா … தலையே சுத்துதுப்பா…!!! உண்மையை சீக்கிரம் வெளிக் கொண்டு வாங்கப்பா...

Leave a comment
Upload