
தொகை நூல்கள் என்று ஒரு இலக்கிய வகைமை உண்டு. ஏனைய நூல்களில் இருந்து தேர்ந்த சில செய்யுள்களின் தொகுப்பையே தொகை நூல் என்பர். அவற்றுள் ஒன்றான ‘விவேக சிந்தாமணி’யிலிருந்து பாடல் ஒன்றை இன்று பார்ப்போம்.
ஜென்மத்தோடு பிறந்த புத்தி போகாது என்பார்கள். சிலருக்கு என்ன தான் நன்மைகளையும் உதவிகளையும் நாம் செய்தாலும், பதிலாக அவர்களுடைய இயல்பான குணமே வெளிப்படும். அவர்களுக்கு நம்மால் நிகழ்ந்த மேம்பாடு ஒரு பொருட்டே அல்ல. செய் நன்றியோ விசுவாசமோ அவர்களிடம் துளியும் இருக்காது.
நீரில் இருந்து காப்பாற்றிய துறவியின் கையையே கொட்டும் தேளைப் போல, அவர்களின் துர்க்குணமே பிரதியாக வெளிப்படும்.
இத்தகையவர்களின் இயல்பை விவேக சிந்தாமணியின் இந்தப் பாடல் அற்புதமாக எடுத்துச் சொல்கிறது.
இனி பாடல் ;
கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன்
குணத்தைப் பொருந்தக் காட்டும்;
சொற்பேதை யருக்கு அறிவிங்கினிதாக
வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராதங்கு அவர்குணமே
மேலாக நடக்குந் தானே!
இந்தப் பாடலின் பொருள் ;
எரிந்து முடிந்த பின்னும் மணக்கும் கற்பூரம் கொண்டு சுற்றிலும் பாத்தியாக அமைத்தும் ;
மணம் மிகுந்த திரவியமான கஸ்தூரி தனை எருவாகப் போட்டும்;
நறுமணம் கமழுகின்ற நீர் தனைப் பாய்ச்சியும் ;
நேர்த்தியாக வெங்காயத்தை விதைத்து வைத்தாலும்,
அது வளர்ந்த பின்னே தனது இயல்பான நாற்றத்தையே கொண்டிருக்கும்
அதுபோல, சொல்லும்படியாக அறிவு இல்லாதவர்களுக்கு இங்கு பேச்சும் இனிதாகவே வரும் என்றெண்ணி அவர்களுக்கு அறிவுரை சொன்னாலும் நல்ல புத்தி வராது.
மாறாக அவர்களுடைய இயல்பான குணம் தான் மேலோங்கி இருக்கும்.
அவ்விதமான குணம் கொண்ட மனிதர்களுடனான நட்பும் உறவும் நாம் கொண்டிருந்தால் நமக்கு ஏமாற்றமும் மன உளைச்சலுமே மிஞ்சும்.

Leave a comment
Upload