
திருமணத்திற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுவது தமிழ் பாரம்பரியத்தில் மிக முக்கியமான முதல் சடங்காகும்.
பெரியோர்களால் சுற்றம் சூழ நடத்தப்படும் திருமணம், அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதைக் குறிப்பதற்காகவே, திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால்
வீட்டின் முன்பாக ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் நடப்படும். இந்நிகழ்வு வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பந்தக்கால் நடப்பட்ட பிறகு எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் உள்ளது.
பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரம், துளிர்விடும் பலா மரம், கல்யாண முருங்கை போன்றவைகளில் ஏதாவது ஒன்று பயன்படுத்துவார்கள். தம்பதியரின் வாழ்க்கை மூங்கில் போல உறுதியாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும், தொடர்ச்சியான வளர்ச்சியுடனும் அமைய வேண்டும் என்பதைக் குறிக்க பெரும்பாலும் மூங்கில் கம்பம் பயன்படுத்தப்படுகிறது.
சில மரபுகளில் கல்யாண முருங்கை அல்லது பலா மரக் கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவை புதிய உயிர்ப்பையும், குடும்பத்தின் வம்ச விருத்தியையும் குறிக்கின்றன.
பந்தக்கால் நடும் நாளில் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாவைத் தொடங்குகிறார்கள்.

ஆணைக்கோல் ஆசீர்வாதம்:
இன்றைய திருமண விழாக்களின் போது குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல், முற்காலத்தில் திருமணம் ஆகப் போகிறது என்றால் அந்நாட்டு அரசனுக்கு மரியாதை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை அரசனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், அரசனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாது.
அதற்காக அவர் தனது ஆணைக்கோலைத் திருமண விழாவிற்கு அனுப்பி வைப்பார். அரசனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டாலே அத்திருமணம் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது என்று அர்த்தம். அந்தக் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆணைக்கோலை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து வணங்குவார்கள். காலப்போக்கில் "அரசு ஆணைக்கோல்" என்ற சொல் மருவி "அரசாணைக்கால்" என்றும், பின்னர் "பந்தக்கால்" என்றும் அழைக்கப்பட்டதாகப் பாரம்பரிய விளக்கங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஒரு மன்னனின் அங்கீகாரத்தைக் குறித்த அடையாளம், பின்னர் இறைவனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் வேண்டி நடத்தப்படும் மங்கலச் சடங்காக மாறியது.
மும்மூர்த்திகள் வழிபாடு:

இந்த பந்தக்கால் நடுவது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்டுத் தொடங்குவதாக தாத்பரியமாகும். அதாவது முகூர்த்தக் காலின் அடிப்பாகத்தில் பிரம்மாவையும், நடு பாகத்தில் விஷ்ணுவையும், உச்சியில் பரமேஸ்வரனையும் தியானித்து, ஆவாஹணம் செய்து அந்த விழா நடந்தேறும் வரை இவர்கள்தான் துணையிருந்து காத்தருள வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்துத்தான் பந்தக்கால் நடுவது நடப்படுகிறது.
இன்றும் பலர் திருமண விழாக்களை எளிமைப்படுத்தினாலும், பந்தக்கால் சடங்கை மட்டும் தவறாமல் நடத்துகிறார்கள். அதனால்தான் இன்று வரை பந்தக்கால் சடங்கு தமிழ்க் கலாச்சாரத்தின் உயிரோட்டமுள்ள அடையாளமாகத் திகழ்கிறது.


Leave a comment
Upload