தொடர்கள்
கலீல் ஜிப்ரான் - லெபனான் முறிந்த சிறகுகள் - 6 (தொடர்ச்சி..)

20181121181150659.png

38


ஒரு துளி பனித்துளியையாவது
சொட்டவில்லையென்றால்?
கடலில் கலப்பதற்கும் முன்பே
வழிதவறிப்போய் விடும்
ஆறுதான் என்ன ஆறு சொல்?
செல்மா விழிகளை உயர்த்தி
விண்ணை நோக்கினாள்
அங்கே தேவநட்சத்திரங்கள்
சொர்க்கத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன
அவள் கரங்கள் விண்ணை நோக்கி நீண்டன
விழிகள் விரிந்தன
உதடுகள் நடு நடுங்கின
வெளுத்துப்போயிருந்த அவளது முகத்தில்
துயரமும் துடிப்பும் அவநம்பிக்கையும்
வேதனையும் ஒருங்கே கண்டேன்


“ஓ தேவனே
இந்த கொடும் தண்டனை தரும் அளவிற்கு
ஒரு பாவப்பட்ட பெண்
உனக்கு என்ன தீங்கு இழைத்துவிட்டாள் சொல்?
மீளமுடியாத விளிம்பிற்கு அவள் தள்ளப்பட


39


என்ன பாவம் எவருக்கு செய்து விட்டாள்?
ஓ கடவுளே நீயோ பலமானவன்
நானோ பலவீனமானவள்
ஏன் என்னை வேதனையில் வீழ்த்துகிறாய்?
நீயோ மகா வல்லமையாளன்
நானோ உன் ஆற்றல் மிக்க அரியணைக்கு முன்பு
ஊர்ந்து செல்லும் ஒரு மிகச்சிறிய உயிரினம்
உன் வலிமையான கால்களால்
ஏன் என்னை நசுக்கிச்சிதை சிதைக்கிறாய்?
நீயோ சினம் மிக்க பெரும் புயல்
நானோ தூசியிலும் சிறு தூசி
ஏன் என்னை குளிர்ந்த பூமியில் வாரியிறைக்கிறாய்?
வலிமையிலும் வலிமை மிக்கவன் நீ
பலவீனத்திலும் பலவீனமானவள் நான்
ஏன் என்னோடு சரிநிகராய் சண்டையிடுகிறாய்?
நீயோ பருப்பொருள் கருணையாளன்
நானோ நுட்பமானவள்
ஏன் என்னை அழிக்க நினைக்கிறாய்?
என் தேவனே
நீ தானே பெண்ணை அன்பினால் படைத்தாய்


40


பின்பு ஏன் அதே அன்பினாலேயே அவளை அழிக்கிறாய்?
உனது வலது கையால் அவளை உயர்த்தும் நேரம்
ஏன் உனது இடது கையாலேயே அவளை
புழுதியில் வீழ்த்துகிறாய்?
அவளது வாயில் உயிரின் மூச்சை ஊதிய நீயே
ஏன் அவளின் இதயத்தின் மரணத்தின் விதைகளை
விதைக்கிறாய்?
நீயே அவளுக்கு ஆனந்தத்தின் பாதையை காட்டுகிறாய்
ஆனால் துயரத்தின் சாலையில் அவளை
வழி நடத்துகிறாய்?
ஒரு இனிமை ததும்பும் பாடலை
அவளுக்கு அளித்தவனும் நீதான்
ஆனாலும் அவளது இதழ்களை
துயரத்தினாலே மூடிவைத்தவனும் நீ தான்
அவளது நாவை வேதனையால் கட்டி வைத்தவனும் நீதான்
உனது புதிரான விரல்களால்
அவளது காயத்திற்கு மருந்திடுகிறாய்
ஆனால் உனது கைகளாலேயே
அவளது மகிழ்ச்சியை சுற்றி
வேதனையால் கீறுகிறாய்


41


அவளது படுக்கையைச்சுற்றி
மகிழ்ச்சியையும் அமைதியையும்
மறைத்து வைத்த நீயே
பக்கவாட்டில் தடைகளையும் பயத்தையும்
ஏன் நிறைத்து வைத்திருக்கிறாய்?
உனது கருணையினால் அவள் உயிரில்
நேசம் வளர அனுமதித்தாய்
அனுமதித்த நீயே ஏன் அதை அவமானமாகவும்
மாற்றி வைத்தாய் சொல்?
என் தேவனே உன் கருணையாலே
அவளுக்கு படைப்பின் அழகை காட்டினாய்
ஆனால் அவள் அழகையே அவளுக்கு
அவள் அழிவாய் ஏன் மாற்றி வைத்தாய்?
நீ ஏன் அவளை மரணத்தின் கோப்பையில் வாழ்வையும்
வாழ்வின் கோப்பையில் மரணத்தையும்
பருக வைத்தாய்?
நீ தானே அவளை கண்ணீரால் பரிசுத்தப்படுத்தினாய்
பின்பு அந்த கண்ணீராலேயே
அவள் ஏன் அடித்துச் செல்லப்படுகிறாள்?
ஓ தேவனே


42


காதலாலேயே என் கண்களை திறந்தாய்
பின்பு ஏன் அதே காதலாலேயே
ஏன் என் கண்களை
குருடாக்கி விட்டாய்?
உனது மென்மையான இதழ்களால்
எனக்கு ஒரு முத்தம் தந்தாய்
பின்பு நீயே ஏன் உன் வலிமை மிகுந்த கரங்களால்
என் முகத்தில் அறைந்து விட்டாய்?
நீ தான் உள்ளத்தில் ஒரு ரோஜாவைப் பயிரிட்டாய்
ஆனால் அதை சுற்றி ஏன் முள்ளால் வேலியிட்டாய்?
நான் நேசிக்கும் இளைஞனின் ஆன்மாவோடு
என் நிகழ்காலத்தை கட்டி வைத்துவிட்டு
நான் முகம் காணாத ஒரு அன்னியனோடு
ஏன் என் வாழ்க்கையை கட்டி வைக்க நினைக்கிறாய்?
என் தேவனே எனக்கு வலிமை தா
இந்த மரணப்போராட்டத்தில் நான் மீண்டுவர
வலிமை தா
என் தேவனே எனக்கு உதவிடு
மரணம் வரையிலும்
நான் உண்மையோடும் கற்போடும் வாழ்ந்திட


43


நீ எனக்கு உதவிடு
இந்தவரம் மட்டும் எனக்கு அளித்திடு என் தேவனே"
அமைதி தொடர்ந்தது
செல்மா தரையை நோக்கினாள்
முகம் வெளுத்திருந்தது
வேதனையில் உடல் நடுங்கியது
அவளது முகமோ தலைகுனிந்திருந்தது
பின்பு வேதனையில் குலுங்கியது
புயல் ஒடித்த ஒரு மரக்கிளை
தரையில் தன் அழிவைத் தானே
தேடிக்கொண்டிருப்பது போல்
அது அசைந்தத வண்ணமிருந்தது
நான் அவளது குளிர்ந்த கரங்களை எடுத்து முத்தமிட்டேன்
நான் அவளை ஆறுதல் படுத்த முனைந்தபோது
உடைந்து அழுதேன்
அவள் வந்து என்னை ஆறுதல் படுத்தும்படிக்கு
நீண்ட மௌனம்
எங்கள் விதியின் காலடி ஓசையையும்
எங்களின் இதயத்துடிப்பையும்
நான் ஒரே சேரக் கேட்டுக்கொண்டிருந்தேன்

(தொடரும்)

மூலம்: கலீல் ஜிப்ரான்

மொழி பெயர்ப்பு: தங்கேஷ்