பொது
கொரோனா பாடங்கள்..மக்கள் பேட்டி!- ஸ்வேதா அப்புதாஸ்...

கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் எங்கோ சீனாவில் உருவாகியுள்ளது... என்ற கேள்வி டிசம்பர் மாதத்தில் நம் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்குள் அந்த வைரஸ் நம் நாட்டினுள் அதுவும் கேரளா வழியாக நுழைந்து விட்டது என்ற அதிர்ச்சி நம் ஒவ்வொருவரையும் உறைய வைப்பதற்குள், உலகம் முழுவதும் அந்த தொற்றுப் பரவி பல உயிர்களை சர்வசாதாரணமாக காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.

20200329211730296.jpg


உலகமே நிலை குலைந்து போய் நின்று கொண்டிருக்கிறது... எங்கோ உள்ள அமெரிக்கா.. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சீனா என்று உலக நாடுகள் ஏதோ நம் பக்கத்து ஊர் போல நமக்கு தோன்றிக் கொண்டிருக்கிறது.

20200329225224992.jpg


சர்வாதிகாரம்... அரசியல்... ரௌடி ராஜ்ஜியம்.. கொலைகாரர்கள்... அதிகார வர்கம் என்று ஆணவத்தில் தழைத்த எந்த ஜாம்புவானும் தற்போது காணவில்லை.. தலையை வெளியே காட்டினால் அவ்வளவுதான் என்று யாரோ ஒருவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார்... அவர் தான் கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கன்..!

20200330003117400.jpg


இன்று உலகமே வெறுமையாக தென்படுகிறது. உயர் அதிகாரிகள்... அரசியல் பிரமுகர்கள், பணக்காரர்கள், தாதாக்கள் எவரையும் காணவில்லை... அவர்களுக்கு பதிலாக ஒரே நபர் உலகை தன் கட்டுப்பாட்டில் நிறுத்தியுள்ளது அது தான் கொரோனா என்ற கொடிய வைரஸ்.

பிரபல ஜோசியர்கள் கூட தங்களின் ராசிபலன் ரூட்டை மாற்றி தொற்றில் இருந்து எப்படி உங்களை காத்துக்கொள்ளலாம் என்ற டிப்ஸை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

20200329225831245.jpg


மனிதனின் ஆணவம்.... அப்பப்பா.... சொல்லவே வேண்டாம்.. பதவிக்காக மக்களை எப்படியெல்லாம் பந்தாடி வந்தனர். எல்லா வேலையிலும் அடிமைத்தனம் தலைவிரித்தாடியதை பார்த்துக் கொண்டிருக்கின்ற நாமும் அடிமைகளாக இருக்கிறோம் என்று உணர முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

20200330000412861.jpg


கல்வி என்ற பெயரில் பகல் கொள்ளை... அதிலும் அரசியல் விளையாட்டுகள்.. இளம் மாணவர்களை பகடை காயாக வைத்து, ஆசிரியர்களை அடிமைகளாக நடத்திவரும் நிர்வாகிகள். மாணவர்களின் அறிவு மற்றும் திறமைகளை ஒதுக்கிவிட்டு, சென்டம் ரிசல்ட் மட்டுமே பாடமாக ஏற்றுக்கொண்டு, மாணவர்களை புளியாக பிழிந்து எடுக்கும் கல்வி நிறுவனங்கள்... மாணவர்களுக்கு தீபாவளி, ரம்சான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கூட மறக்கடித்த சிறப்பு வகுப்புகள்... புனித வெள்ளி... ஞாயிற்று கிழமைகளில் இறைவனை மறக்கச் செய்து சிறப்பு வகுப்புக்குள். இளம் மாணவ சமுதாயத்தை பூட்டி வைத்த பள்ளிகள்... இன்று தேர்வுகள் நடத்த முடியாத நிலைமை... நடந்து முடிந்த தேர்வு விடைத்தாள்களை திருத்த முடியாத சூழல்.....?!


அதிகாரிகள் என்ற பெயரில் பணியாளர்களை கேவலமாக நடத்தி, மனித அபிமானத்தை நசுக்கி சாகடித்து, போராட்டங்களை உருவாக்கின அனைவரும் இன்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

20200329230846752.jpg


துப்புரவு தொழிலாளர்களை அந்தத் துறை அதிகார வர்க்கம் கேவலமாக நடத்திவந்ததின் விளைவு.... இன்று அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இன்று தூய்மைப் பணியாளர்கள்.


நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்.. சுகாதார அமைச்சர்.. பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் தான் இப்பொழுது கண்ணுக்கு தெரிகிறார்கள்.

20200329231123576.jpg


கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் எல்லாம் பூட்டப்பட்டு ஆன் லைன் வழிபாடுகளை காணக் கூடிய நிலைமை.


இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் ஒரே இடம் மருத்துவமனைகள் மட்டுமே. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..... இதற்கு எல்லாம் காரணம், கண்ணுக்கு தெரியாத வைரஸ். அதற்கு மனிதன் வைத்த பெயர் கொரோனா... சற்று மேலே போய் கோவிட் 19 என்ற பெயர் சுடப்பட்ட ஒரு கொலைகார வி.வி.ஐ.பி... அதே சமயம் இந்த வைரஸ் உலகத்திற்கு கற்று கொடுத்த பாடங்கள் ஏராளமாக தொடர......


கொரோனா கற்று கொடுத்த பாடங்களை பற்றி விகடகவிக்காக சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்......

20200329231248610.jpg


திருஅவை செய்தி ஆசிரியர் கே .எம். செல்வராஜ் கூறும்போது, “திடீர் விருந்தாளியாக எங்கிருந்தோ வந்த இந்த வைரஸ் கொரோனா, தினமும் நிறைய பாடங்களை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது.. ஊரடங்கு என்று நாமே முடங்கிப் போகும் தருணத்தில் கூட, இயல்பு வாழ்கை பாதிக்கப்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். காய்கறி, பால், முட்டை அனைத்தும் கிடைக்கின்றது, நாம் தான் சமூக இடைவெளிவிட்டு வாங்க வேண்டும். சோம்பேறித்தனம் காணாமல் போயிட்டது. முக நூல், தூக்கம்.. வாட்சப் என்று இருந்த நான்... தற்போது உடற்பயிற்சி, யோகாவில் பிஸி. இதை விட நிறைய பழைய புத்தகங்களை எடுத்து படிக்க வைத்துவிட்டது கொரோனா. பைபிள் படிக்கவும், பிரார்த்தனை செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக... சாதாரண பொது ஜனத்தை பற்றி யோசிக்க வைக்கிறது...

20200329231604335.jpg

கொரோனவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைய வேண்டும். மருத்துவர்கள்.. செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் தினமும் என் கண் முன் வந்து போகிறது. அரசு பணியாளர்கள், செய்தியாளர்கள் பாஸ் வைத்து கொண்டு வெளியே போய் வருவது கடமையென்றாலும், அவர்களும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஒரு வருத்தமும் உண்டு. ஏராளமான புதிய பாடங்களை கற்றுக் கொடுக்கும் கொரோனாவால் நாம் யாரையும் சந்திக்க முடியவில்லை, மனம்விட்டு உரையாடி சிரிக்க முடியவில்லை, நம்மை சக மனிதர்களிடமிருந்து விலகி இருக்கச் செய்து விட்டது. பலரின் உயிரை பறித்துவிட்டது என்ற வருத்தமும் கோபமும் ஏற்பட்டுள்ளது.


எது எப்படியோ நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் இந்த கொரோனா எப்பொழுது மறையும்..... என்று இந்த உள்ளிருப்பு எப்பொழுது முடிவுக்கு வரும் என்ற அறிவிப்புக்காக பதைபதைப்புடன் நாள்தோறும் காத்துக் கொண்டிருக்கிறேன்...”

20200329232109457.jpg

மைசூர் யூகோ ட்ரீஸ் இயற்கை ஆர்வலர் ஷங்கர் நம்மிடம் பேசியபோது, “எங்கிருந்தோ வந்த கொரோனா நம்மை பல வழிகளிலும் மாற்றிவிட்டது இந்த இரண்டு மாதத்தில்! கை, கால் கழுவாத நாம், இப்பொழுது கழுவாமல் வீட்டினுள் வருவது இல்லை.. இந்த ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்துள்ளது கொரோனா.. ஜப்பான் நாடு பல ஒழுக்கத்தை கடைபிடித்து வருவதால் தான், இன்று பாதுகாப்பாக இருக்கின்றது. நம்முடைய இயற்கை முழுவதும் அழித்துவிடும் அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டது. மனிதன் இயற்கையை சூறையாடிக் கொண்டிருக்கின்றான். தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தாவரங்கள், மிருகங்கள் சுதந்திரமாக எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கின்றதை பார்க்க முடிகிறது. யானைகளின் கூட்டம் சுதந்திரமாக இருக்கிறது. புலி போன்ற மிருகங்கள் தங்களின் வனத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவது இந்த கொரோனவால் தான்... இப்படி ஒரு லாக் டவுன் வருடத்தில் ஒரு முறை வந்தால், மனிதன் நடந்து சென்ற பாதைகளில் புதிய செழிப்பான புல் விளைய ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்...!

20200329232225706.jpg


மனிதாபிமானம் என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது... குடும்பத்தில் எல்லோருக்கும் போட்டி பொறாமை... ஏன், அம்மா, அப்பா, பிள்ளைகள் என்று போட்டி, பேராசை. அது சமுதாயத்தை பாதித்துவிட்டது. மேலும் ஆசை பல கெட்ட விஷயங்களை அரங்கேற்றிவிட்டது. பயோலாஜிக்கல் வாரை சந்தித்து கொண்டிருக்கிறோம்... இப்பொழுது தான் நாம் செய்தது எது நல்லது.. எது கேட்டது என்று உணரத் துவங்கியுள்ளோம். இந்த கொரோனா, மனித வர்கத்தை மாற்றியுள்ளது.

ஒரு விஷயம் பெரிய பணக்காரர்கள் இதன் தாக்குதலை சமாளித்து விடுவார்கள்... ஏழை எளிய மக்களுக்கு கூட பல உதவிகள் கிடைத்துவிடும்.. ஆனால் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்துக்குத்தான் சிக்கல்... அதனால் இனி செலவு செய்வது அளவுக்கு மீறி இல்லாமல், அளவாக இருக்க கற்று கொள்ளவேண்டும். அடுத்த இரண்டு மூன்று வருடத்திற்கு சிக்கனத்தை கடைபிடிக்க கற்றுக் கொடுத்துள்ளது இந்த கொரோனா.. ஒழுக்கத்தை கடைபிடிக்க கற்று கொடுத்துள்ளது... யார் சொன்னாலும் கேட்கமாட்டோம்... அப்படி இருக்க... யாரோ கண்ணுக்கு தெரியாத வைரஸ், நம்மை அழித்தாலும் ஏராளமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளதை நாம் உணர தான் வேண்டும்.”

2020032923242535.jpg

இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆனந்தி நம்மிடம் கூறும்போது, “கோவிட் 19 நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தாலும், நிறைய யோசிக்க வைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். வேலைக்காரி இல்லாத வீடுகள் உருவாகிவிட்டது. எல்லா வேலையும் நாமே செய்துகொள்ள யாரோ உத்தரவை பிறப்பிக்கிறார்கள். வழக்கமாக நான் பிஸியாக என் வேலை விஷயமாக சென்றுவிடுவேன்... தற்போது நோ சான்ஸ்... வீட்டு வேலை... கார்டெனிங்.. படிக்காத புத்தகங்களை படிப்பது என்று பிஸி தான். இதை விட... எல்லா வீடுகளும் சூப்பர் கிளீனாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் வந்த தொற்று நோய்களான மலேரியா... சின்னம்மை போன்றவை கூட நம்மை தனிமை படுத்திக்கொள்ள கூறியது. அதே சமயம் இந்த சமூக இடைவெளி... தனிமை இதனால் எந்த தீய விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

20200330001325216.jpg


ஆனால், நாம் டி வியை ஆன் செய்தால் பயமுறுத்துகிறார்கள்... ஒரு பாசிட்டிவ் நியூஸ் கிடையாது, எல்லாம் நெகடிவ் தான்.. என்ன செய்ய?! அந்த டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடலை புதைக்க அப்படியொரு கஷ்டம். ஒரு சேவை செய்யும் டாக்டருக்கு இப்படி என்றால் இன்னும் கொரோனா கற்று கொடுக்கும் பாடங்களை சென்னைவாசிகள் கற்றுக்கொள்ளவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு பக்கம் இயற்கை நல்ல காற்றை சுவாசிக்கத் துவங்கியுள்ளது... காட்டு விலங்குகள் சுதந்திரமாக தங்களின் வனத்தில் சுற்றித் திரிகிறது. அதை பொறுக்க முடியாத மிருக வேட்டைக்காரர்கள் தங்களின் வேட்டை அநியாயத்தை துவக்கியுள்ளது வேதனையான விஷயம், மான்களை கொல்வதை என்னவென்று சொல்வது?!

20200329232624282.jpg


ஒரு விஷயம்தான் உறுத்துகிறது. காலையில் குப்பை எடுக்க வரும் வாகனத்தில் ஒரு அறிவிப்பை தினமும் கேட்கிறேன். அதாவது சீனாவுக்கு போகாதீங்க என்று. இது வேடிக்கையாக இருக்கிறது... அங்கு இருந்து வந்த கொரோனாவால் தானே இத்தனை தலைவலி... யாரும் அங்கு செல்ல கனவு கூட காணமாட்டார்களே..! அப்புறமும் ஏன் இப்படியொரு தேவையற்ற அறிவிப்பு!”

20200329232750244.jpg

கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியர் இலியாஸ்....

“இந்த கொரோனா ஒரு கண்டிப்பான ஆசிரியர் போல பல விஷயங்களை நமக்கு மறைமுகமாக கற்றுக் கொடுத்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும். தற்போது ஊரடங்கு அடுத்த மூன்று மாதத்திற்கும் தொடரும் என்றாலும் நாம் ரெடி தான்... காரணம், கொரோனா நமக்கு உத்தரவை போடுகிறது... இல்லை என்றால் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. கொரோனா ஒரு மோசமான நோய்தான் ஒரு பயங்கர வில்லனும் கூட...

20200329232847423.jpg


என்றாலும் இந்த கொரோனாவை ஒரு மறுமலர்ச்சி போல தான் நான் பார்கிறேன்... பழைய வீட்டை இடித்துவிட்டு புதுப்பிப்பது போல தான் உள்ளது இந்த லாக் டவுன் காலம்.


ஆச்சிரிய குறி போல வந்த கொரோனா, ஒரு கேள்விக்குறியாகவும் உள்ளது. அதனுள் நிறைய பதில்கள் குவிந்துள்ளன என்று தான் தோன்றுகிறது. இந்த பாதிப்பு முடிந்த பிறகு, நிறைய பதில்கள் கிடைக்கும்.


அறிவியல் நிறைய அர்த்தங்களை கொடுக்கும் இந்த வைரஸின் பாதிப்பை பற்றி... மதங்கள் வேறு கோணத்தில் இதை பற்றி கூறும்.

20200329233007282.jpg


மனிதன் எப்படியெல்லாம் வாழ்ந்து வந்தான். பணம், தங்கம், சொத்து என்று அலைந்து வந்தான். வரதட்சணை என்ற பேரில் மிருகமாக மாறிவிட்டான்... ஒரு கல்யாணம் என்று எடுத்துக் கொண்டால், அதுவும் எங்க கேரளாவில்.... சாப்பாட்டில் ஏகப்பட்ட வெரைட்டிஸ் போட்டு திணற அடிப்பார்கள். யாராலும் முழுமையாக சாப்பிட முடியாது... பாதி குப்பைக்கு தான் போகும்... இப்படி பலவித ஆடம்பரங்கள்... தற்போது திருமணமே செய்ய முடியாத சூழ்நிலை... அப்படியே செய்தாலும் பத்து பேர் தான் அலவுட்.... என ஒரேயடியாக மாற்றிவிட்டது கொரோனா.. அதிலும் கடன் வாங்கிக் கல்யாணம்.... கொடுமை.. கடந்த முறை கேரளா வெள்ளம் ஒரு சிறந்த படத்தை சொல்லிச் சென்றது..... திருந்தினர்களா என்றால்... பாதி பேர் தான் மாறினர், மீதி பழையபடி தான்... வெள்ள நேரத்தில்... குடிசை வாசியுடன் சேர்ந்து ஒரே பந்தியில் உணவு உட்கொண்ட பணக்காரன், தத்துவம் பேசி பின் வெள்ளம் முடிந்து நார்மல் ஆனவுடன் தன் பழைய கௌரவத்தை தொடர்வது... தான் கேரளாவில் நடக்கிறது.

20200329233150147.jpg

இந்த கொரோனா சவூதி அரசனையும், பெரிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் விடவில்லை. சாதாரண மனிதனையும் விடவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
மக்களுக்காக வாழ்ந்த ஆப்ரஹாகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அம்பேத்கார், நேரு, மகாத்மா காலத்தில் இப்படி ஒரு வைரஸும் வரவில்லை.... காரணம், அவர்கள் உண்மையாக மக்களுக்காக வாழ்ந்தார்கள். இப்பொழுது கூட ஒரு மகாத்மா நமக்கு தேவை என்பதை கொரோனா உணர்த்துகிறது...

20200329233434728.jpg

இந்த ஊரடங்கால் சுற்றுசூழல் அருமையாக இருக்கிறது.. அதே சமயம் கேரளாவில் சூடு அதிகம். அடுத்து மழையும் வரும்... இந்த கொரோனா கற்றுக் கொடுக்கும் பாடத்தை புரிந்து, அதை பின்பற்றினால் இந்த பூமி செழிக்கும்... இல்லை என்றால் பழைய குருடி கதவை திறடி கதையாக மீண்டும் எல்லாம் தலைகீழாகி அடுத்த அழிவை நோக்கி செல்லவேண்டியது தான்”

20200329234056409.jpg


“இந்த மக்கள் போட்ட ஆட்டம் என்ன சாதாரணமா?” என்று ஆவேசத்துடன் துவங்கினார் கோவையை சேர்ந்த தேவராஜ் சந்தானம்... “நீ ஒன்றுமே இல்லை.... தூசி என்று சொல்லிவிட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா. நான் தான் பணக்கார நாடு ஆயுத பேரத்தில் நான் டாப் என்று மார்தட்டிக்கொண்ட அமெரிக்காவின் நிலைமை உங்களுக்கு தெரியும். இயற்கையை அழித்து நம் நாட்டு கலச்சாரத்தை நாமே இழந்து எங்கோ போய்க்கொண்டிருக்க... ‘அடே அரைவேக்காடே கொஞ்சம் நில்’ என்று கூறி நம்மை வீட்டினுள் அடைத்து வைத்துள்ளது இந்த கொரோனா. அரசியல், தாதா, பெரிய மனிதர்கள் எல்லாம் இன்று ஜீரோ தானே சரியா.. இதை யார் சொன்னது கொரோனா தான்!

20200329234456656.jpg


கோவையை பொறுத்தமட்டில் வெட்டி பந்தா, ஜாதி, மதம், பணம்.. என்று கொடிகட்டி இருந்த அனைத்து பிஸ்னஸ்களும் இன்று தலைகீழ்... மீண்டும் எழ இரண்டு வருடம் ஆகும்.. திருப்பூர் ஏற்றுமதி தற்போது ஒரு கேள்விக்குறி மட்டுமே! மனிதனை மனிதனாக பார்க்கக்கூடிய நேரத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த பயங்கர கொரோனா என்ற வைரஸ்.”

20200329234609548.jpg

ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரி மாணவி மரியா கூறும்போது... “லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா... ஆல்வேஸ் பி ஹாப்பி... இந்த கொரோனா நிறைய பாடங்களை சொல்கிறது... மக்களை அன்பு செய்யவேண்டும். கர்வம், தற்பெருமை, வருத்தங்கள்.... அனைத்தையும் அறவே ஒழிக்கவேண்டும்... முக்கியமாக பகைமையை... எல்லாவற்றிற்கும் ஆசைப் படக்கூடாது... சொத்து, நகை, நிறைய வீடு தேவையற்றது. இப்பொழுது என்ன சொத்து இருந்து என்ன... நோ யூஸ்... இப்பொழுது உயிர் தானே முக்கியம். இந்த ஊரடங்கு என்னுள் இருந்த நிறைய திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது... குக்கிங், ஆர்ட், பெயின்டிங் என்று நானே பிஸியாகிக் கொள்கிறேன். To make bitter things better... என்று தோன்றுகிறது இப்போது. எங்க ஊட்டியில் யாரும் வெளியே வருவது இல்லை. ஒரு மாதம் கழித்து

20200330002057916.jpg


கடந்த வாரம்தான் ஜஸ்ட் ஒரு ரவுண்டு போனேன், ஊரே வெரி சைலன்ட்... சற்று பயமாக இருந்தது... வீட்டுக்கு போனாலே போதும் என்று இருந்தது. முன்பு எல்லாம் நிறைய பிளானிங் செய்வோம்... இப்போ what next? என்று தான் தோன்றுகிறது. எப்பொழுது நார்மல் ஆகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம்

20200329235109420.jpg


எங்க நீலகிரி கோவிட் ஃபிரீ ஆகிவிட்டது. இதற்கு காரணம் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா தான்.... அவங்களின் ஸ்பீட் ஆக்ஷன் தான், மாவட்டத்தை விட்டு கோவிட் 19ஐ வெளியேறச் செய்துள்ளது. அவங்களுக்கு என்னுடைய ராயல் சல்யுட்..!” என்கிறார் மரியா.

20200329235328999.jpg

பெங்களூரை சேர்ந்த ஐ.டி பணியாளர் டொமினிக் ராஜேஷ் “இப்பொழுது எல்லாவற்றையும் விட, மனிதனின் உயிர் தான் முக்கியமான ஒன்று என்பதை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது. எது அவசியமனதோ அது தான் முக்கியம். உணவு, காய்கறி மட்டுமே தேவையானதாக மாறியுள்ளது. வேறு எதுவும் தேவையும் இல்லை, அவசியமும் இல்லை என்றுஆகிவிட்டது.

20200329235443411.jpg


பெங்களூரை பொறுத்தமட்டில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கும். தற்போது அனைத்தும் காணாமல் போயிட்டது என்று தான் சொல்லவேண்டும். அவையெல்லாம் தேவையில்லை, நம் தனிப்பட்ட பாதுகாப்பு தான் முக்கியம் என்று உணரத் துவங்கிவிட்டனர் எங்க ஊர் வாசிகள்.

20200329235607194.jpg


ஐ.டி. பணியாளர்களை பொறுத்தமட்டில் Work from home என்பதில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் பணி அலுவலகத்திற்கு வந்து செய்வதை விட மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள் என்று தான் சொல்லவேண்டும். நாங்கள் எந்த கண்காணிப்பும் இல்லாமல் சுதந்திரமாக எங்களின் வேலையை செய்து வருகிறோம். கம்பெனி என்ற பேரில் பெரிய கட்டிடம் உபகரணங்கள் பராமரிப்பு, போக்குவரத்து என்று ஏகப்பட்ட செலவுகள் செய்வதை விட்டுவிட்டு, பணியளர்களுக்கு ஒரு லேப்டாப் மற்றும் இன்டர்நெட் தொடர்பு மட்டும் போதுமானது.

தற்போது பெரிய நிறுவனங்கள் Work from home திட்டத்தை அமுல்படுத்த முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. TCS நிறுவனம் 2020 முதல் 2025 ஆம் வருடத்திற்குள் 75 சதவிகிதம் பணியளர்களை Work from home என்று மாற்றம் செய்யப் போகிறார்களாம். அதாவது இந்தியாவை பொறுத்தமட்டில், மூன்றுலட்சம் பணியாளர்கள் உள்ளனர். பெருபாலான ஐ.டி. நிறுவனங்கள் இதை பின்பற்றுவதாக உறுதி செய்துள்ளன.


ஏற்கனேவே வங்கிகளில் நெட் பாங்கிங் மூலம் பணப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் மூலம் சமூக இடைவெளி கொரோனா வருவதற்கு முன்பே பின்பற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

20200330000820829.jpg


அதே போல CTS நிறுவனம், தன்வசமுள்ள முப்பதாயிரம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களை அப்புறப்படுத்திவிட்டு, லேப்டாப் வழங்கி Work from home திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் சமூக இடைவெளி தானாக பின்பற்ற முடியும்... தொற்று என்று எந்தப் பிரச்சனையும் இல்லை. பள்ளி, கல்லுரிகளிலும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கியுள்ளனர். அதுவும் நடைமுறைக்கு வந்தால், சமூக இடைவெளி வழக்கத்திற்கு வந்து, தொற்று காணாமல் போய்விடும்.. எப்படியோ, கொரோனா பல புதிய பாடங்களை அமுல்படுத்தி வருகிறது பாருங்கள். பெங்களூர் ரொம்பவே சைலண்டாக இருக்கிறது......

20200330001111620.jpg

பணம் மற்றும் ஆடம்பரம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய துவங்கிவிட்டனர் எங்க ஊர் வாசிகள்” என்கிறார்.


ஆபத்தான உயிர் பறிப்பு வேலை பார்க்கும் கொரோனாவால் மனித குலத்துக்கு ஒழுக்கப் பாடங்கள் கிடைத்தது நலம்தான்!