பொது
சென்னையை மிரட்டும் கொரோனா! – ஆர் .ராஜேஷ் கன்னா.

20200401142914326.jpg

கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் ஊரடங்கில் வீட்டில் முடங்கி கொண்டது. சென்னையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், வடசென்னை பகுதிகளில் நாளுக்கு நாள் இளைஞர்கள் நடமாட்டமும், பைக்கில் செல்வதுமாக ஏகத்துக்கும் எதை பற்றியும் கவலைப்படாமல் சுற்றித் திரிந்தனர்.

சென்னை காவல்துறையினர் வெளியே சுற்றாதீர்கள் என கெஞ்சிப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை! சென்னை மெரினா பீச்சில், விலையுயர்ந்த ரேஸ் பைக்குகளை எடுத்துக்கொண்டு இளைஞர்கள் பட்டாளம் விர்ரென்று வேகமாக சென்று கொண்டிருந்தது.

இப்படி வடசென்னைவாசிகள் ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இஷ்டத்திற்கு சுற்றி திரிய ஆரம்பித்தனர். ஏப்ரல் மாதத்தின் இறுதியில், வடசென்னை - ராயபுரம் ஏரியாவில் சத்தியம் டிவியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தமிழக சுகாதார துறை நடத்திய பிரஸ் மீடிங்கிற்கு சென்று வந்த பின் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவருடன் பணிபுரிந்த 26 சத்தியம் டிவி ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. சுகாதார அதிகாரிகளால், சத்தியம் டிவி சீல்வைக்கப்பட்டு... பின் கொரனா வைரஸ் பாதிக்கபட்டவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வடசென்னையில் இருக்கும் ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திருவிக நகர் என சென்னை கார்ப்பரேஷனின் 3 மண்டலங்களில் தான் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, சென்னையை மிரள வைத்துள்ளது. அண்ணா நகரிலும் தொற்று வேகமாக பரவியது. வெள்ளிக்கிழமை காலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேர் கொரோனா காரணமாக அட்மிட் செய்யப்பட்டனர்.

கீழ்பாக்கம் கொரோனா தனிவார்டு நிரம்பி வழிகிது.தற்போது சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டதட்ட ஆயிரத்தை நெருங்கி விட்டது. தேனாம்பேட்டை, மந்தைவெளி, மைலாப்பூரில் இருக்கும் குடிசைவாசிகளையும் கொரோனா நோய் தொற்று பாதித்து வருகிறது...

20200401144502762.jpg

420 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சென்னை நகரத்தில், பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ள மூன்று மண்டலங்களில், ராயபுரத்தில் குறுகலான வீதிகளும் ஒரே கட்டிடத்தில் அடர்த்தியாக பல குடும்பங்களாக மக்கள் வாழ்வதும் அரசிற்கு பெரிய சவாலாக இருக்கிறது.

ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீன்வளத்துறை மந்திரி ஜெயக்குமார், ‘சமூக பரவலாக ராயபுரத்தில் கொரோனா மாறவில்லை. இருப்பினும், தற்போது இது சவாலான சூழல். மிகவும் தீவிரமாக அதிகாரிகள் பணியாற்றி வருவதால், மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை’ என நிருபர்களிடம் தெரிவித்தார்.

2020040115115759.jpg

சென்னையில் - தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கொரனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து இருப்பதால், இதனை கட்டுபடுத்த 10 ஐபிஎஸ் அதிகாரிகள், 10 கோட்டாட்சியர்கள், 10 மருத்துவ வல்லுநர்கள் என 40 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, தண்டையார்பேட்டை - நேதாஜி நகரில் வசிக்கும் முஸ்லிம் தம்பதியினருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சுகாதாரத் துறையினர் அவர்கள் வசித்த தெருவிற்கு சீல் வைத்து தடுப்புகளை அமைக்க வந்த போது, 300-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு குழுவாக வந்து, சுகாதார மருத்துவ பணியாளர்களை சீல் வைக்க விடாமல் விரட்டிவிட்டனர். அதன் பிறகு, அதே தெருவில் 2 சிறுவர்கள் உட்பட மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மீண்டும் சுகாதாரத்துறை துறையினர் அந்த ஏரியாவிற்கு சீல் வைத்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க ஏரியா காவல்துறை அதிகாரி மூலம் பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அப்படி தெருவிற்கு சீல் வைக்க கூடாது என்றும்.... தங்கள் குழவில் இருக்கும் தன்னார்வலர்களையே இரவு பகலாக காவலுக்கு அமர்த்தி வெளிஆட்கள் உள்நுழையாமல், உள்ளே இருப்பவர்களையும் வெளியே நடமாட விடமாட்டோம் என ஏரியாவாசிகள் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். சென்னையில் கொரோ னாபாதித்த அனைத்து பகுதிகளையும் தெருக்களையும், சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி சீல் வைத்து கிருமி நாசினிகளை அடித்து வருகிறது. தண்டையார்பேட்டை தெருவில் மட்டும் சீல் வைக்க எதிர்ப்பு கிளம்பியதால் விதிவிலக்கு கொடுக்கப்பட்டது எப்படி என்று சென்னைவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

வடசென்னையின் பிரதானமாக இருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளி ஒருவர், தீடீரென மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு தப்பி ஒடிவந்து விட்டார். போலீசார் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றனர். தன்னை யாராவது நெருங்கினால், கட்டிப்பிடித்து விடுவேன் என அவர் மிரட்டியதால் காவல் துறையினர் நெடு நேரம் போராடிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை, மருத்துவக் குழுவினருடன் வந்த காவல்துறையினர் லோக்கல் ஆட்கள் மூலம் நோயாளியிடம் சாமாதானம் பேச வைத்து ஒருவழியாக, அவரை மீண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சென்னை கோயம்பேடு... காய்கறி, பழ மற்றும் பூ மார்க்கெட்டில் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலுடன் வியாபாரம் நடந்து வந்தது. மாநகராட்சியும் கடந்த ஒரு மாத காலமாகவே உரிய மருத்துவர்களை வைத்து இங்கு கொரோனா பரிசோதனையை செய்து வந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பவர் மற்றும் லோட்மேன் இருவருக்கும் தொற்று உறுதியானதால், சென்னை மாநகர காவல்துறை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் 250 கடைகள் மட்டுமே திறந்து, மொத்த காய்கறி வியாபரம் செய்ய அனுமதி அளித்தது. சில்லறை காய்கறி வியாபார்த்தினை முற்றிலுமாக தடை செய்து விட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மற்றும் கனிகள் மார்கெட் மாதவரம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு வந்து சென்றவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அனைவரையும் பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை - எஸ்பிளேனேடு, கோயம்பேடு, பரங்கிமலை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசாருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டு தனி வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 27 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தின் இறுதியில் தாயும் சேயும் மரணம் அடைந்துவிட்டனர். இறந்த பெண்மணியின் இறுதி சடங்கில் 40 பேரும், இறுதி ஊர்வலத்தில் 5 பேரும் கலந்துகொண்டுள்ளனர். தற்போது இறந்த கர்ப்பிணி பெண்ணிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரசவம் பார்த்த 10 டாக்டர்கள் 25 மருத்துவமனை ஊழியர்கள், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

2020040115002663.jpg

சென்னையில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சென்னையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும்,கடந்த ஒரு வாரமாகவே நிலைமை சற்று மோசம்தான். அதிலும் கடந்த இரு நாட்களாக, கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடிக்கிறது. சென்னையில் வியாக்கிழமை மட்டும் 13 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனைகள் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து 1258 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற செய்தி மட்டுமே ஒரே ஆறுதலாக உள்ளது.

கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தில் இருப்பதால், மே 3ந் தேதி முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. .

20200401150106134.jpg

ஆக இப்போதைக்கு ஊரடங்கு விலகல் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இனிவரும் காலத்திலாவது வீட்டிலிருந்தபடியே ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடித்தல் மட்டுமே சென்னைவாசிகள் தப்பிக்க முடியும்!!