ஆன்மீகம்
மகான் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர்... - ஆரூர். சுந்தரசேகர்.

20200401161531439.jpg

மகான்களும், சித்தர்களும் பெருகித் தழைத்தது நம் பாரதம். அவர்கள் அவதரித்து தவசீலர்களாக விளங்கி, மக்களை ஆன்மீக வழியில் நடத்திய மகாபுருஷர்கள் ஆவார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, ஜீவ சமாதியான போதும் அவர்களின் செயல்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், நல்வழி படுத்துவதிலும் இருந்தது. அத்தகைய மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும் தரிசிப்பது சகல நன்மைகளையும் நமக்கு தரும்.

திருவண்ணாமலை, சித்தர்கள், மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஶ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் மகான் என்று கூறுகின்றார்கள். திருவண்ணாமலையின் ஈசான்ய மூலையில் இருந்து மக்களுக்கு அருள் செய்ததால், ஈசான்ய ஞானதேசிகர் என்றும் அழைக்கப்பட்டார்.

மகான் அவதாரம்:

பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் வாழ்ந்த திருநீலகண்டர், உமைய பார்வதி தம்பதியினருக்கு இவர் மகனாக 1750-ம் ஆண்டில் அண்ணாமலையார் அருளால் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் கந்தப்பன் என்று பெயரிட்டனர். சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான், குரு கேட்கும் முன்னரே அத்தனை பாடங்களையும் சொல்லும் அளவுக்கு ஞானமும் சக்தியும் பெற்றிருந்தார். இவர் தன் பெரும்பொழுதை தியானத்தில் கழித்தார். இவர் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாது, பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார்.

மகான்கள் சந்திப்பு:

சிவபெருமானிடம் மனம் ஈடுபட்டு இவர் சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்தார். வழியில் பல மகான்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின் சிதம்பரத்தை அடைந்து தில்லை நடராஐரை தரிசித்தார். பின்பு அங்கு வாழ்ந்த பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். அவரிடமே பல ஆண்டு காலங்கள் இருந்து வேத, வேதாந்த உண்மைகள், ப்ரம்ம தத்துவங்கள், உலக வாழ்க்கை ரகசியங்கள் என சகலத்தையும் கற்றுத் தேர்ந்தார். தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் தொடர்ந்தார். தில்லையம்பதி விட்டு புறப்பட்டு திருவாருர் தியாகராஜ சுவாமிகளை தரிசித்து, பின் மடப்புரம் மகான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்று சுவாமிகளுடன் சிலகாலம் வாழ்ந்தார்.

பின் நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு குடிகொண்டுள்ள சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். பின் அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்னும் மகானின் ஆசியையும் பெற்றார். பின் தனது யாத்திரையை தொடர்ந்து, திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்டவலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். இறுதியில் அண்ணாமலை ஸ்தலத்தை அடைந்தார். அங்கே அண்ணாமலையின் ஈசான பகுதியில் தங்கி தவம் செய்து வரலானார். அதனால் ஈசான்ய ஞான தேசிகர் என்று இம்மகான் போற்றப்பட்டார்.

மகான் ஈசான்ய ஞானதேசிகரின் அற்புதங்கள்:

ஜில்லா கலெக்டர் ஐடன் துரை மகானின் சீடரானார்:

ஒரு முறை ஜில்லா கலெக்டராக இருந்த ஐடன் துரை என்ற ஆங்கிலேயர் மகான் ஞானதேசிகரின் மகிமையை கேள்விப்பட்டு தான் படும் காசநோய் அவஸ்தையை குணப்படுத்தும் படி அவரை தரிசித்து வேண்டிக்கொண்டார். மகானின் அருளால் ஐடன் துரை பரிபூர்ண குணமடைந்தார். பின், ஐடன் துரை மகானிடம் சென்று “தங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென” கேட்க, அவரும்... “அப்பா எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு, அதோ அவருக்கு எழுதி வையுங்கள் என அண்ணாமலையாரை நோக்கி கை நீட்டினார். உடனே, தன்னிடம் உள்ள நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் ஸ்ரீ அருணாசலேசுவரர் ஆலயத்திற்கு ஐடன் அளித்ததுடன் அவர் பல உற்சவங்களையும் முன்னின்று நடத்தினார். மற்றும் மகான் ஞானதேசிகரின் தலையாய சீடர்களுள் ஒருவராக மாறினார்.

ஒருநாள்.. அண்ணாமலையாரின் உற்சவத்தை பார்க்க மிக ஆவலோடு தனது குதிரையில் வந்து கொண்டிருந்தார் ஐடன் துரை. பலத்த மழை பெய்ததினால் வரும் வழியில் பென்னை ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றைக் கடந்து தான் திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும். ஆனால் பெருகிய வெள்ளத்தினால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று நேரம் யோசித்த துரை, ‘சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!’ என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்து போய் பின்வாங்கி விட்டனர். அதே சமயம், தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞான தேசிகர் தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அதை கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சர்யத்துடன் அவரிடம் அதற்கு காரணத்தைக் கேட்டனர். ஸ்ரீ ஞானதேசிகரோ அதற்கு, ‘நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாம் தான் காப்பாற்ற வேண்டும்!’ என்று கூறி விட்டு, மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் ஐடன் துரை, மகானை வந்து சந்தித்து, கால்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் ஆற்றலையும், ஐடன் துரையின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.

அருணாசலம் செட்டியாருக்கு குழந்தைப்பேறு கிட்டியது:

அண்ணா மலையைச் சேர்ந்த அருணாசலம் செட்டியார் என்பவருக்கு, நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமலிருந்தது. அவர் ஒருமுறை மகானை தரிசித்தார், மகானும் அவருக்கு அருளாசி கூறி சிறிதளவு விபூதியை ஒரு சிறிய பையில் போட்டு கொடுத்தார். மகானின் அருளால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். பின் அக்குழந்தைக்கு முருகப்பர் என பெயர் சூட்டினார். அருணாசலம் செட்டியாரின் பரம்பரையில் வந்த அவரின் குடும்பத்தார், இன்றைக்கும் தேசிகர் அளித்த விபூதிப் பையை வீட்டில் வைத்து வணங்கி வருகின்றனர்.

மற்றும் புதுப்பாளையம் நாயக்கரின் சூலை நோய், மகான் தன் அருளால் குணமாக்கினார். இதே போல பலப்பல அற்புதங்கள்...

இரண்டு புலிகள் மகானுக்கு காவலாக இருந்தது:

பின்னாளில், அண்ணாமலையாரின் அருள் வாக்குப்படி, ஈசான்ய மூலைக்கு வந்து சேர்ந்த மகான் ஶ்ரீ ஞானதேசிகர். அங்கிருந்த குளக்கரையில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் தனது தவத்தினை தொடர்ந்தார். இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் புலி உருவில் வந்து இவரைக் காவல் காத்தனர் என்பது வரலாறு. அவற்றை ‘அண்ணாமலை அரசே, உண்ணாமுலை அம்மையே’ என்று அழைப்பாராம் மகான். பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கி விடும். சில சமயம் ஸ்ரீஞானதேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் ஞானதேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. இவரது பெருமையைக் கேள்வியுற்று பலரும் அவரை நாடி வந்தனர். மகானும் தன் தவ வலிமையால் தம்மை நாடி வந்த பல பக்தர்களுக்கும், அன்பர்களுக்கும் அவர்களின் துன்பங்களை நீக்கியும், நோய்களைப் போக்கியும் அருள் பாலித்து வந்தார்.

மகான் ஶ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் அருளிய நூல்கள்:

ஈசான்ய தேசிகர் கோரக்கநாதர் குளக்கரையில், ஸ்ரீஅண்ணாமலையாரை தரிசித்து, தோத்திரப்பாமாலை, திவண்ணாமலை வெண்பா, அண்ணாமலையார் வெண்பா, போன்ற பாக்களை இயற்றினார்.

மகான் ஸ்ரீ ஞான தேசிகர் ஜீவசமாதி:

மகான் ஸ்ரீ ஞான தேசிகர், திருவண்ணாமலையை விட்டு வேறு எங்கும் செல்லாது மலையின் ஈசான்ய திசையில் பல ஆண்டு காலங்கள் தவம் செய்து கொண்டும், தமது சீடர்கள் பலருக்கும் வேதபாடங்களும் கற்றுக்கொடுத்தும் வந்தார். தன்னுடைய இறுதிக் காலத்தினை உணர்ந்து தாம் சமாதி ஆகும் காலத்தை ஒரு ஓலையில் எழுதி தமது ஆசனத்தின் கீழ் வைத்திருந்தார். குறித்த நாளில், இம்மகான் 1829 ஆம் ஆண்டு, விரோதி வருடம் மார்கழி மாதம் இருபத்து ஆறாம் நாள் குருவாரம், மிருக சீரிட நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டியபடி, உட்கார்ந்த நிலையில் மகா சமாதி அடைந்தார். அவர் தினமும் ஆசிரமம் பக்கத்திலுள்ள வில்வமரத்தடியில் நின்று அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அந்த இடத்தில் மகானின் சமாதி அமைத்தனர்.

ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் மடம்:

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி கோயிலை அடுத்துள்ள ஈசான்ய குளக்கரையில் ஶ்ரீ ஞானதேசிகரின் ஜீவசமாதி உள்ளது. இவ்விடத்தினை வேட்டவலம் ஜமீன்தார் குடும்பத்தார் ஒரு மடமாக கட்டினார்கள். இதனை ஈசான்ய மடம் என்கிறார்கள். மகான் ரமண மகரிஷி உட்பட பல மகான்களால் புகழப் பெற்ற இந்த ஸ்ரீ ஈசான ஞான தேசிகர் மடம், அளவற்ற ஆன்ம அமைதியையும், அற்புத ஆற்றல்களை தரக் கூடியது. இங்கு தினசரி வழிபாடுகள், மற்றும் பௌர்ணமி தின வழிபாடுகள் நடைபெறுகின்றன. தீபத் திருவிழாவின்போது இங்கு தீபமேற்றி வழிபடுவது மிகப் புண்ணியமாகும். மலை உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபத்திற்கு இந்த மடத்திலிருந்து பிரத்தியேகமாக நெய் வழங்கப்படுகிறது.

உள்ளம் உருகி வேண்டுவோருக்கு, எண்ணம் போல வரம் தரும் ஈசான்ய ஞான தேசிகர், குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்கு மக்கட்செல்வம் அருள்வது இன்றும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்ச்சி ஆகும்.

திருவண்ணாமலை சென்று, மகான் ஶ்ரீ ஈசான்ய ஞான தேசிகரின் ஜீவசமாதியை தரிசித்து அருளினைப் பெறுவோம்!