பொது
பெரிய கோயிலும்... பெரியாஸ்பத்திரியும்... - தில்லைக்கரசி சம்பத்

20200401162235341.jpg

சில நாட்களுக்கு முன் நடிகை ஜோதிகா பேசிய மேடைப் பேச்சை போன வாரம் ஒரு தொலைக்காட்சி ஒலிப்பரப்பியது ...


அதில் அவர் “ஒரு ஷூட்டிங்குக்காக தஞ்சை பெரிய கோயில் போனேன் சுத்தமாக இருந்தது.. உதய்பூர் பேலஸ் மாதிரி இருந்தது.. மறுநாள் ஹாஸ்பிட்டலில் ஷூட்டிங்... அங்க very badly maintained... அத என் வாயால் சொல்ல முடியாது... கோயிலுக்காக அவ்வளவு காசு கொடுக்றீங்க.. செலவு பண்றீங்க.. பெயிண்ட் அடிக்கறீங்க.. மெயிண்டேன் பண்றீங்க.. கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுறீங்க.. அதே காசை ஸ்கூல்ஸ், ஹாஸ்பிடல்ஸ்க்கு கொடுங்க.. ப்ளீஸ்... அந்த ஹாஸ்பிடல் பார்த்த பிறகு ஒரு மாதிரி ஆகிடுச்சு... அப்புறம் அடுத்த நாள் நான் கோயிலுக்கு போகல... (சிரிப்பு) கோயில் போல ஸ்கூல்ஸ், ஹாஸ்பிடல்ஸ் முக்கியம்... அவங்களுக்கும் நன்கொடை கொடுங்க... ” என மழலைத் தமிழில் பேசியிருந்தார். இதில் வெளிப்படையாகவே பெரிய கோயில் என விமர்சித்ததால் அவரின் பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகியது.

சூர்யா சகோதரர்கள் அகரம் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து அவர்கள் வாழ்வை மேம்படுத்தி வருகிறார்கள்...


“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என பாரதி பாடி இருக்கிறார்..


கல்வி என்பது எல்லாவற்றையும் விட முக்கியம்... சூர்யா அதைதான் செய்து வருகிறார்.. மிகப் பெரிய சேவை அதில் சந்தேகமில்லை...


ஆனால் யாராக இருந்தாலும் எந்த இடத்தில் எதை பற்றி எப்படி பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது அல்லவா..!!?

“ஜோ பேசியதில் என்ன தவறிருக்கிறது? கோயில்களுக்கு கொடுப்பது போல் பள்ளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் கொடுங்கள் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்..” என சிலர் ஆதரித்தார்கள்..

“ஏன் கோயில் என்று சொல்ல வேண்டும்... சர்ச், மசூதி என்று சேர்த்து சொல்ல வேண்டியது தானே... இல்லையென்றால் பொதுவான வழிப்பாட்டு தளங்கள் என்று கூற வேண்டியது தானே...” என ஒரு சாரார் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்...


விஷயம் தெரிந்தவர்கள் கோயில் உண்டியலில் போடும் காசெல்லாம் அரசு தானே அறநிலையத்துறையின் மூலம் எடுத்து கோள்கிறது‌... அந்தப் பணமும் அரசின் வருவாயோடு சேர்ந்துதானே இது போல் ஆஸ்பத்திரி, அரசு பள்ளிகள் என பல விஷயங்களுக்கு செலவு செய்யப்படுகிறது.. இந்தக் கேள்வியை நியாயமாக பார்த்தால் அரசை நோக்கி தானே எழுப்பியிருக்க வேண்டும்.. இந்த அடிப்படை விவரம் கூட தெரியாமல் ஏன் மேடையில் பேச வேண்டும் என கூறுகிறார்கள்...

அதாவது மக்கள் உண்டியலில் 5ரூ.. 10ரூ என காசுகள் போட... அதை அந்தந்த கோயில் நிர்வாகமே எடுத்துக்கொண்டு பெயிண்ட் டப்பா வாங்கி கோவில்கள் முழுக்க பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என ஜோ நினைத்துக் கொண்டிருக்கிறார்....


முதலில் தமிழக கோயில்களை பற்றிய சில உண்மைகளை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்...

தென்னிந்தியாவில் ஏராளமான பிரமாண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகளும் இருக்கின்றன. இவற்றை கையாள்வதற்குதான் அரசால் இந்து சமய அறநிலையத் துறையே உருவாக்கப்பட்டது.

அத்துறையின் கட்டுப்பாட்டில் 38,618 கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளும், 17 சமண சமய திருக்கோயில்களும் தோராயமாக இருக்கின்றன.

இந்து அறநிலையத்துறை என்பது மிகப் பெரிய கட்டமைப்பு. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர், ஆணையர் முதற்கொண்டு அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் வரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது இந்து கோயில்கள். இந்து சமய அறநிலையத் துறையின் பணியில் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பெண்களும் ஆண்களும் இருக்கின்றனர்...

கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டதில், ஏராளமான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தப்பட்டதில் இவர்களின் பங்களிப்பு அபரிதமானது.. இவர்கள் அனைவருக்குமே சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவீனங்களும், கோயில்களில் ஈட்டப்படும் வருவாயிலிருந்தே நிர்வகிக்கப்படுகிறது. அந்த வருவாய் கோயிலுக்கு உரிமையான பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விடுவதாலும் கோயிலை சுற்றி கடைகள் போட அனுமதித்து வாடகைக்கு விடுவது போன்ற வழிகளில் வருகிறது.. வெறும் உண்டியல் வருமானத்தை நம்பி இல்லை..

அதே சமயம் ஒரு கோயில் ஈட்டும் மொத்த வருவாயில், வரிக்கு உட்பட்ட வருமானத்தில் இருந்து 14 சதவிகிதம், அரசுக்கு வரியாக செலுத்தப்படுகிறது. அதை எடுத்து அரசுக்கு செலுத்துவது தவிர மற்ற கோயில் வருவாய் எதையும் அந்தந்த கோயில்கள் எடுத்துக்கொள்வது இல்லை..

திருக்கோயில்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. கோயில் வருவாய் அனைத்தும் கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உட்பட்டது.


மற்றபடி குடமுழுக்கு திருவிழா போன்றவை நடக்கும் போது, அவற்றால் ஏகப்பட்ட பாரம்பரிய கலைஞர்கள் பயனடைகிறார்கள். ஸ்தபதிகள், சிற்பக் கலைஞர்கள், தேர் தச்சர்கள், ஓவியர்கள், கட்டட கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்களுடன் ஒவ்வொரு கோயிலும் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறது...


காலமாற்றத்தால் அரிய இக்கலைஞர்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து தடுமாறிக் கொண்டிருந்தாலும், பாரம்பரிய கலைகள் முற்றிலும் அழிந்து போகாத வண்ணம் இக்கோயில்களின் புனரமைப்பின் புண்ணியத்தில் ஏதோ ஒரு வகையில் சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது..இவர்களின் வாழ்க்கை!


தாஜ்மகாலை பராமரிக்க கூட வருடத்தில் சில கோடிகளை அங்குள்ள அரசு செலவு செய்து கொண்டிருக்கிறது.. அதை பற்றி ஜோ இதே போல் பேசினால், உபி முதல்வர் யோகி வேண்டுமானால் ஒருவேளை அதற்கு ஆதரவு தெரிவிப்பார்.. ஆனால் “கோயில்” என்று சொன்னதால் மட்டுமே ஜோவை ஆதரித்த “மதசார்பற்ற” அரசியல் கட்சிகளும் “நடுநிலை” பத்திரிக்கைகளும் தாஜ்மகால் பற்றி ஒருவேளை அவர் பேசியிருந்தால், பேச்சுக்கு ஆதரவு தராததோடு அவரை இந்நேரம் மதவாதி, சங்கி என்று கன்னா பின்னாவென்று வறுத்தெடுத்திருப்பார்கள். அவ்வளவு ஏன்.. கோயிலுக்கு போகும் இந்துக்கள் கூட இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. ஏனெனில் தாஜ்மகால் உலகின் அதிசயங்களில் ஒன்று..

இங்கே யார் வேண்டுமானாலும் இந்து கோயில்கள் பற்றி கருத்து சொல்லலாம்... அதுவே எங்கள் கருத்து சுதந்திரம் என்று சொல்பவர்களிடம்... “சார் அந்த மசூதி, சர்ச் அங்கு வரும் மக்களிடம் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடை, இந்த வெளிநாட்டு பணம் இத பத்தி பேச‌...” என்று ஆரம்பித்தால் “வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. மூச்.. அத பத்தி நாம பேசவே கூடாது..” என பாய்ந்து கேட்டவர்களை அடிக்க வருவார்கள்...

ஆதித் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றான பெரிய கோயில் எப்படி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறதோ, அதை போல் உலகில் பல பாரம்பரிய கட்டிடங்கள் யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படுகிறது.

யுனெஸ்கோவால் அடையாளப்படுத்தப்பட்ட உலக பாரம்பரியக் களங்களில் மிக அதிகமான களங்கள் காணப்படுவது இத்தாலியிலாகும்.... அங்கே மிலானில் உள்ள Santa Maria delle Grazie யின் தேவாலயம் உலக அளவில் மிகுந்த பிரசித்தி பெற்றது. லியொனார்டோ டா வின்சியின் பிரபலமான “The Last Supper” ஓவியமும் அங்கே உள்ளது... பல நூற்றாண்டுகளாக பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து பாரம்பரிய சின்னங்களை புதுபித்தும், பராமரித்தும் வருகிறார்கள்...

அங்கேயும் யாராவது போய் மைக் போட்டு பேசினால், கலை ரசனை இல்லாத காட்டுமிராண்டிகள் என வெள்ளைக்காரன் நம்மை அர்ச்சிக்கலாம் அம்மணி!

ஏற்கனவே டாவின்சி வரைந்த மோனோலிசா 700 மில்லியன் அமெரிக்கன் டாலர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் குத்துமதிப்பாக 5000 கோடிகளுக்கு மேல் அதன் மதிப்பை கணித்து வைத்திருக்கின்றார்கள்... உண்மையில் “இந்த விலைமதிப்பற்ற ஓவியத்தை வெறும் 700 மில்லியன் டாலர்களுக்கு தான் மதிப்பு போட்டு வைத்திருக்கிறோம்” என சங்கடத்துடன் நெளிந்தப்படி தான் ஐரோப்பியர்கள் சொல்கிறார்கள்.. அதாவது மனிதர்கள் விலைமதிப்பிட முடியாத அளவுக்கு அந்த ஓவியம் விலைமதிப்பற்றது என கருதுகிறார்கள்...


நாம் தான் இங்கு கோயில், உண்டியல், பெயிண்ட் டப்பா என அறிவுபூர்வமாக (!) விவாதித்துக் கொண்டிருக்கிறோம்...


கோயில்களை பற்றியும் அங்கே போடப்படுகிற உண்டியல் பணமும் அரசை தான் சேர்கிறது என்றும் சரிவர தெரியாமல் ஏதோ பேசிவிட்டார் என்று கூறி சர்ச்சையை முடிக்காமல், ‘ஜோ கூறியது சரியே... அவர் பக்கம் நான் நிற்கிறேன்’ என்று அவர் கணவர் சூர்யா தடாலடியாக சொல்வது தான் ஆச்சரியமாக இருக்கிறது..

கோயிலுக்கு உண்டியல் பணம் என்பது பெரிதல்ல... பக்தர்கள் கொடுக்கும் உண்டியல் பணத்தை வைத்து கொண்டு பிழைப்பை ஓட்டும் வழிபாட்டு தளமும் அது அல்ல... நேற்றைக்கு பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த கட்டிடங்கள் கிடையாது நம் திருக்கோயில்கள்...1000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயல், இசை, நாடகம் என அனைத்தும் அரங்கேறிய இடம்.

அது மட்டுமா கல்லிலே கலை வண்ணம் கண்ட ஸ்தபதிகள், காலத்தால் அழியாத வண்ண ஓவியங்கள் என அனைத்து கலைகளின் மையமாக விளங்கும் கலை பொக்கிஷங்கள், நம்மை ஆண்ட பழங்கால மன்னர்களை இன்றும் நினைவுப்படுத்தும் வரலாற்று பெருஞ்சின்னங்கள். திருக்குறளையே திருவள்ளுவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து தான் அரங்கேற்றினார்.. ஏன்.. சூர்யாவின் தந்தை சிவகுமார் அவர்கள் பல மேடைகளில் கேட்பவர் நெஞ்சுருக சொற்பொழிவாற்றும் கம்பராமாயணத்தை கூட கம்பர் மீனாட்சியம்மன் கோவில் சங்கபலகையில் வைத்து தான் அரங்கேற்றினார்.. அவைகள் கலை இலக்கியம் வளர்த்த கோயில்கள்... உண்டியல்களால் வளர்ந்தவைகள் அல்ல...

இந்த அற்புதமான கலைச்சின்னங்களை இந்துக்கள் வழிபடும் வெறும் வழிப்பாட்டுத் தளங்களாக நினைத்து பேசுவது சரியல்ல. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு கோயில்களை காக்க வேண்டியது தமிழர்களாக பிறந்த அனைத்து மக்களின் கடமை ஆகும்..


ஒரு அரசாங்கத்தின் பெருங்கடமைகளில் சேர்ந்ததுதான் அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள் பராமரிப்பு...


அதே சமயம்...


இந்து கோயில்களின் வருமானமும் அரசுக்கு தான் போகின்றது, என தயவு செய்து யாராவது நன்கு விளக்கி கூறி, கோயில் என்பது வெறும் பெயிண்ட் டப்பாவும் உண்டியலும் இல்லை‌ என புரிய வைத்தால் புண்ணியமாகப் போகும்...