கவர் ஸ்டோரி
தள்ளுபடியா? தள்ளி வைப்பா? - நடக்கும் தள்ளுமுள்ளூ! - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

20200401164319103.png

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா பயத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வேறு ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.


சென்ற வாரம் கடன் மோசடி தொழிலதிபர்களாக அரசால் அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி, மேகுள் சோக்ஷி உள்ளிட்ட பிரபல முன்னணி தொழிலதிபர்களின் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் நீக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஆர்வலர் சாகோத் கோகலே எழுதிக் கேட்டபோது, ரிசர்வ் வங்கி இந்த தகவலை சொல்லி இருக்கிறது. கடன் கணக்குகள் நீக்கப்பட்ட தொழிலதிபர்கள் மொத்தம் 50 பேரின் பட்டியலை (பிப்ரவரி 11ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு வரையிலான பட்டியலை) ரிசர்வ் வங்கி ஆர்வலர்க்கு அனுப்பி வைத்திருக்கிறது.


பொதுவாக இதுபோன்ற தவணை தவறிய வாராக் கடன்களை ஆண்டு இறுதியின் போது இதை “write off ” என்று அந்த ஆண்டு கணக்கில் இருந்து ஒதுக்கி வைப்பார்கள். இதை ஆடிட்டர்கள் window showing என்பார்கள். காரணம் வாராக்கடன், தவணை தவறிய கடன் இவற்றையெல்லாம் ஆண்டு இறுதி அறிக்கையில் சேர்த்து கொண்டால் வங்கி நிதி நிலைமை மிகவும் மோசம் போன்ற ஒரு தோற்றத்தை நிதிநிலை அறிக்கை ஏற்படுத்தும்.


Write off ஆடிட்டர்கள் கணக்காளர்கள் இந்தக் கடன்களை தனியாக வைப்பதற்கு பயன்படுத்தும் வார்த்தை. அவர்கள் கடன் தள்ளுபடிக்கு waive off என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். ஆனால், பொதுவான ஆங்கிலத்தில் write off என்றால் தள்ளுபடி என்று தான் அர்த்தம். இந்த அர்த்தத்தில்தான் புரிந்து கொண்டு பாரதிய ஜனதா ஆதரவு தொழிலதிபர்களுக்கு இந்த அரசு கருணை காட்டி வருகிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

20200401164345843.jpg


நிதியமைச்சரும் “ அப்படி தள்ளுபடி எல்லாம் இல்லை தள்ளி வைத்திருக்கிறோம், அவ்வளவே..” என்று விளக்கம் சொல்லி இருக்கிறார். Insolvency and bankruptcy code எனப்படும் புதிய திவால் சட்டப்படி கடந்த ஆண்டு 1.57 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் புதிய திவால் சட்ட தாக்குதலை சமாளிக்க முடியாமல் தான் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பி ஓடினார்கள்.


CBLT AND CBLAT என்ற தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் மட்டும் கடந்த வருடம் 3.68 லட்சம் கோடி ரூபாய் பணத்தை வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கும்படி தீர்ப்பாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் 5 லட்சம் வாராக் கடனுக்கு இப்படி தீர்ப்புகள் வந்திருக்கிறது.


இதற்கு அடிப்படை காரணம் வங்கிகள் தம் கட்டுப்பாட்டிலிருந்து இந்த வாராக்கடனை விலக்கி வைத்தது தான். அதாவது வங்கியின் நிதி நிலை அறிக்கையில் write off என்று ஒதுக்கி வைத்ததால் தான் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் சொல்லி இருக்கிறது. இந்த தீர்ப்பாயத்தில் இப்படி பெரும் தொகையை தராமல் இழுத்தடித்துள்ள மோசடி ஆசாமிகள் மீது 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

2020040116462161.jpg


ராஜ்ய சபையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி பேசும்போது “இந்த தீர்ப்பாயத்தில் இன்னும் நிறைய நீதிபதிகளை நியமித்து கடன் வசூல் ஜரூராக வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.


அனில் அம்பானி, எஸ்ஆர் ஸ்டீல், ஜேபி அசோசியேட்ஸ், வீடியோகான் என்று மலை முழுங்கி மகாதேவன்கள் கடனை கட்டாமல் இருக்கிறார்கள் என்று இந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.


இது இப்படியிருக்க... முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் மற்றும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காணொளி மூலம் உரையாடல் நடத்தியபோது, “கொரோனா காரணமாக இந்தியா முடக்கப்பட்டுள்ளது. ரூ. 65 ஆயிரம் கோடி இன்று இந்திய ஏழைகளுக்கு தேவை. இப்படி இருக்கும்போது பணக்காரர்களுக்கு 68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளது இந்த அரசு” என்று தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

2020040116443112.jpg


ஆனால், இந்தத் தள்ளுபடி தலைமறைவு மோசடி தொழிலதிபர்களுக்கு பொருந்தாது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் சொல்லி இருக்கிறார். “கடன் தள்ளுபடிக்கும் கடன் நீக்கத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்திடம் ராகுல் காந்தி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து சொல்லியிருக்கிறார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வேண்டுமென்றே கடனை செலுத்தாதவர்கள் எல்லோரும் காங்கிரஸ் ஆட்சியில் கடன் வாங்கியவர்கள் தான். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் கடன் வாங்கியவர்கள் போன்றவர்கள்தான் தற்போது வாராக் கடனாளிகள் லிஸ்ட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். ராகுல் காந்தி இதுபற்றி மன்மோகன் சிங்கிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று நக்கலாக சொல்லி இருக்கிறார்.

20200401165009162.jpeg


“வங்கி சம்பந்தப்பட்ட பிரபல பொருளாதார நிபுணர்கள், வங்கி பயன்பாட்டு மொழியில் write off என்றால் தள்ளுபடி என்று அர்த்தமில்லை.. தள்ளிவைப்பு என்றுதான் அர்த்தம். தள்ளிவைப்பு என்பது கடன் வழங்கப்பட்ட வங்கிகளில் இருப்பு நிலையிலிருந்து அகற்றப்படுகிறது. அதே சமயம் இந்த கடன்களின் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என்று தான் அர்த்தம்” என்கிறார்கள்.


“உதாரணத்திற்கு... இந்தப் பட்டியலில் உள்ள விஜய் மல்லையாவை எடுத்துக் கொள்ளுங்கள்... அவர் சொத்துக்கள் எல்லாம் வங்கியின் அடமானத்தில் தான் இருக்கிறது. பல சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதனால்தான், அவர் தான் பணத்தை கட்டி விடுகிறேன்... என் சொத்துக்களை திருப்பித் தாருங்கள் என்று வங்கிகளிடம் கெஞ்சுகிறார்” என்கிறார்கள் வங்கி சார்ந்த நிபுணர்கள்.


அதேசமயம் சில பொருளாதார விமர்சகர்கள் “தள்ளுபடிக்கும் தள்ளிவைப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... இதே போன்ற ஏமாற்று பேர்வழிகள், எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நெருக்கமாக இருக்கிறார்கள்... தேர்தல் நிதி தருகிறார்கள்... எனவே, எல்லா ஆட்சியிலும் இவர்கள் மீது நடவடிக்கை என்பது கண்துடைப்பாகவே இருக்கிறது” என்கிறார்கள்.

வங்கிகள், சாமானியர்களிடம் எந்தக் கருணையும் காட்டியதாக தெரியவில்லை. 24 மணி நேரமும் பணம் போடலாம் எடுக்கலாம் என்று பெருமை பேசும் வங்கிகள், அதற்கு சேவை கட்டணமாக ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் எடுத்துக் கொள்வதை சொல்வதில்லை. இதேபோல் உங்கள் வங்கி நடவடிக்கைகளை உடனுக்குடன் உங்கள் செல்பேசியில் என்று சொல்லும் வங்கிகள், அதற்கு நம் அனுமதி இன்றி சேவை கட்டணம் எடுப்பதையும் சொல்வதில்லை. இன்றைக்கும் நாளிதழ்களை திருப்பினால், பக்கம் பக்கமாக வீட்டு வங்கிக் கடன் கட்டாதவர்கள் வீடுகள் ஏலம் என்று விளம்பரங்கள் இருப்பதை பார்க்கலாம். இதேபோல் கொரோனா பாதிப்பிற்கான விசேஷ சலுகையாக மூன்று மாத தவணை தள்ளிவைப்பு என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். ஆனால் அந்த தவணை தள்ளிவைப்பிற்கு கூடுதல் வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கி மேலாளர்கள் சொல்லி வருகிறார்கள்.

வங்கிகள் சாமானியர்களுக்கு பயன்பட வேண்டும் என்றுதான் நாட்டுடமை ஆக்கினார் இந்திரா அம்மையார். ஆனால், அவரே ஸ்டேட் வங்கியில் இருந்து எந்த ஆவணமும் இன்றி நகர்வாலா என்ற மேலாளரிடம் கணிசமான அளவு பணத்தை எடுத்து தரச் சொன்னார். இந்த விஷயம் சர்ச்சையான பிறகு அந்த மேலாளர் மர்மமான முறையில் இறந்து போனார். எல்லா முறைகேடுகளுக்கும் ஆரம்பம் காங்கிரஸ் ஆட்சிதான்.


இப்போதுகூட நலிவுற்ற வங்கிகளை இணைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. அந்த வங்கிகள் ஏன் நலிவுற்றது? இதற்கு யார் காரணம் போன்ற தகவல்கள் மட்டும் இதுவரை வெளிப்படையாக வெளிவரவில்லை.

வங்கிகள் சாமானியர்களிடம் மட்டுமே கடுமை காட்டும்...மோசடி முதலாளிகளிடம் கரிசனம் காட்டும் இதுவே இன்றைய நிஜம். இது எல்லா ஆட்சிக்கும் பொருந்தும்.