ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள்ள விலங்குகள் நல அவசர சிகிச்சை மையத்துக்கு 2 நாட்களுக்கு முன் ஒருவர் போன் செய்து, ‘எனது நாய் ஒரு முள்கரண்டியை விழுங்கிவிட்டது. எப்படியாவது என் நாயை காப்பாற்றுங்கள்’ எனக் கதறினார்.
ஆம்புலன்ஸ் மூலம் நாய் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. நாயின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து டாக்டர்கள் பார்த்தனர். அதில், நாய் முள்கரண்டியை விழுங்கியது உறுதியானது. இதைத் தொடர்ந்து 2 விதமான வழிமுறைகளை கையாள கால்நடை டாக்டர்கள் யோசித்தனர்.
நாய்க்கு ‘எண்டோஸ்கோபி’ வழியாக முள்கரண்டியை அகற்றுவதா அல்லது ஆபரேஷன் செய்து எடுப்பது நல்லதா என்பதே. பின்னர் டாக்டர்கள், எண்டோஸ்கோபி மூலமே நாயின் வயிற்றிலிருந்து முள்கரண்டியை அகற்ற முடிவு செய்தனர்.
அந்நாய்க்கு மயக்கமருந்து அளித்து, சுமார் ஒரு மணி நேரத்தில் எண்டோஸ்கோபி மூலம் வயிற்றுக்குள் இருந்த முள்கரண்டியை மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அகற்றினர். இதுகுறித்து அடிலெய்டு அனிமல் எமர்ஜென்சி அண்ட் ரெஃபெரல் சென்டர் தங்களது வலைதளப் பக்கத்தில் வீடியோ பதிவாக செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து சிலர், ‘அந்த நாய்க்கு, உரிமையாளர் சரியாக உணவு அளித்திருந்தால், அது ஏன் முள்கரண்டியை விழுங்கப் போகிறது?’ என சம்பந்தப்பட்ட நபரை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் பலர், நாயின் வயிற்றில் இருந்த முள்கரண்டியை அகற்றிய மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது செம வைரல்!
Leave a comment
Upload