நெட் ஜோக்ஸ்
வலைக்கள்ளன்!!

பேய்...

20200401225120253.jpg

அப்போது எனக்கு வயது 9 இருக்கும். நண்பர் ஒருவர் இறந்து விட்டார் என அந்த வீட்டுக்கு அப்பா என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற போது ஒரு மூலையில் நின்று கொண்டு பயந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு மனிதர் என்னிடம் வந்தார். என்னை தீர்க்கமாக பார்த்தார். “இருக்கும்போது வாழ்க்கையை அனுபவிக்கணும்டா பையா. ஏன்னா நேரம் பறந்துரும். என்னைப் பாரு என்னத்த அனுபவிச்சேன். ஒன்னும் இல்லை” என்று என் தலையை கோதி விட்டு சென்றார்.

என் அப்பா அங்கிருந்து புறப்படும் முன் இறந்தவர் அருகே போய் வணக்கம் சொல்... இறுதி மரியாதை செய் என்று லேசாக கடிந்து கொண்டார். அருகே சென்று பார்க்கும் போது எனக்கு சில்லிட்டது. என் தலையை கோதி விட்டு சென்ற அதே ஆள். உயிரில்லாமல் சவமாக படுத்திருக்கிறார். ஐயோ……

அன்றிலிருந்து பல வருடங்களுக்கு எனக்கு இரவு தூக்கம் போச்சு. ஒவ்வொரு நாளும் பயங்கர கனவு வரும். நிழலைக் கண்டால் கூட பேய் வந்து விட்டது என்று நடுக்கம். அந்த தீர்க்கமான முகம் என் தலையைக் கோதி அனுபவி என்று சொன்ன அந்த செயல் சில்லிட வைக்கும் அனுபவம். பல மன நோய் மருத்துவர்களைப் பார்க்கும் நிலைக்கு அந்த ஒரே நாள் சம்பவம் என்னை பயங்கரமாக மாற்றி விட்டது.

பின் எப்படி இன்று சரியாகி விட்டேன் என்று கேட்கறீர்களா ?? பல வருடமானது அந்த விஷயம் எனக்கு தெரிய வர.

அந்த செத்துப் போனவன் இரட்டையர்களில் ஒருவனாம். அவனுடைய இரட்டை தம்பி தான் என் தலையை கோதி விட்டுப் போனது.


நெகிழ்ச்சி!!

20200401225327687.png

காலையில் ராமாமிர்தம் எழுந்து வந்து பார்த்தால் காராஜில் நிறுத்தியிருந்த காரைக் காணோம். மனைவியுடன் அடித்துப் பிடித்துக் கொண்டு பக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் கம்பெளையிண்ட் கொடுத்து விட்டு வந்து வழக்கமான வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்கள். ஆனால் துக்கம் முகத்தில் தெரிந்தது.

ஆனால் வாழ்க்கை என்பது விசித்திரமானது. ஒரு நாள் காலை கார் சுத்த பத்தமாக கழுவப்பட்டு வாசலில் நின்றிருந்தது. அவரால் நம்ப முடியவில்லை.

காரைத் திறந்து பார்த்தால் உள்ளே ஒரு கவர் வேறு இருந்தது. அதில் ஒரு கடிதமும் நான்கு சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன.

லெட்டரை படித்தார்... “ஐயா நான் திருடனல்ல. என்னுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணி திடீரென வலி வந்து விட்டது அவளுக்கு. உடனடியாக அவளை மருத்துவமனை கொண்டு செல்ல எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் உங்கள் காரை கராஜை உடைத்து எடுத்துச் செல்வது போல் ஆகி விட்டது. மேலும் காரில் போய்க் கொண்டிருக்கும் போதே அவளுக்கு பிரசவம் ஆவது போல் ஆகி விட்டது. அதனால் தான் வண்டியை நன்றாக சர்வீஸ் செய்து விட்டிருக்கிறேன். இந்த அவசர உதவியை என்றும் மறக்க மாட்டேன். உங்கள் குடும்பம் குதூகலிக்க இத்துடன் சினிமா டிக்கெட் வைத்துள்ளேன். உங்கள் பிரார்த்தனையில் என் மனைவியையும் குழந்தையையும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்படிக்கு உதயகுமாரன்.”

ராமாமிர்தத்துக்கு இப்படியும் மனிதர்களா என்று கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. மனைவியிடம் சொன்னார். குடும்பத்துடன் சினிமாவுக்கு மன நெகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

திரும்ப வீட்டுக்கு வந்ததும் வாசக் கதவு திறந்திருந்தது. வீட்டில் இருக்கும் நகை நட்டு தட்டு முட்டு சமான்கள் அத்தனையும் சுத்தமாக காலி...

அது மட்டுமல்ல வாசலில் ஒரு கடிதம் இருந்தது.

கடிதத்தில்…

“படம் பிடித்திருந்ததா??”

-உங்கள் உதயகுமாரன்.