
‘கர்நாடக சங்கீதம் தெரியாதவர்கள் வாழ்வில் பாதியை இழந்தவர்கள்’ என்பார் எழுத்தாளர் சுஜாதா.
அப்படி இழந்த கூட்டத்தில் அடியேனும் ஒருவன். அதற்காக இசை பிடிக்காது என்பதல்ல. இசையை தொழில்நுட்பமாக அலசுவது ஒரு கொடுப்பினை. அது இல்லை.
அது இல்லாமல் இருந்தால் என்ன?
சென்ற வாரம் விகடகவியில் மறு ஜென்மம் இருக்கிறதா என்ற தெளிவு தரும் இந்து மதம் பார்க்கையில் தான் எனக்கு நிகில் ரவிச்சந்திரன் நினைவுக்கு வந்தான்(ர்).
ஐந்து வயது வரை தாத்தாவிடம் வளர்ந்ததால் (வித்வான் மன்னார்குடி ராஜகோபாலன்) அவருடைய சங்கீத ஞானம் வந்ததா அல்லது பூர்வ ஜென்ம பலனா தெரியாது. கலைவாணி அருள் பொழிந்தது நிகில் மேலே.

இயற்கையிலேயே நிகிலின் சங்கீத ஞானம் இருந்தது, அவனது தாத்தாவிற்கே ஆச்சரியம் தான். அவருடனேயே ராகங்கள் குறித்த விவாதங்கள் அந்த வயதில் செய்தான். அப்படியே அவனது குரு ஹொசஹல்லி ரகுராம் மாஸ்டரிடம் வயலினோடு கொண்டு போய் விட்டார்கள்.

நிகிலின் அரங்கேற்றம் நடந்தது ஹாங்காங்கில் 17 நவம்பர் 2018.
ஹாங்காங்கில் ஒரு மாலை வேளையில் நிகில் ரவிச்சந்திரனை வயலினோடு வரச் சொல்லி சந்தித்த போது நடந்த உரையாடல் கீழே.
காணொளியில் என்ன இருக்கிறது என்றால், சபரி மலைக்கு போகின்றவர்களுக்கு தெரியும். பதினெட்டு படிப்பாட்டை கடைசியில் பாடுவார்கள். அனைத்துப் படிகளும் ஒரே ராகத்தில் பாடப்படும். அதை நிகிலை வைத்து பதினெட்டு ராகங்களில் வயலினில் இசைக்க வைத்தால் என்ன என்று தோன்றியது.
இந்தக் காணொளி என்னைப் போன்ற ராகம் தெரியாதவர்களுக்கு ஒரு பயன். பதினெட்டு ராகங்களின் போக்கு ஓரளவு புரிபடுவது போல இருக்கிறது.
கொஞ்சம் மெனக்கெட்டால் ராகங்களை அடையாளம் காண்பதும் கைகூடும் என்றும் ஒரு நம்பிக்கை வருகிறது. அதற்காகவேனும் நிகிலுக்கு ஒரு பிரத்யேக நன்றி சொல்ல வேண்டும்.
மழலை மேதை, ஒரு நாள் உலகறியும் இசைக்கலைஞனாக வாழ்த்துக்கள்!
இனி நிகிலும் வயலினும்…….

Leave a comment
Upload