‘ஓடு…ஓடு....’

புரிபடாத பல விஷயங்களின் தொகுப்பே வாழ்க்கை!
எதிர்பாராத சம்பவங்களின் ஒருங்கிணைப்பே வாழ்க்கை!
அநுபவித்திராத அம்சங்களின் அணிவகுப்பே வாழ்க்கை!
பெரிய - பிரம்மாண்ட - அழகான - வியப்பூட்டும் இந்த வாழ்க்கைக் கட்டடத்தின் அஸ்திவாரம் முழுக்க என்னென்னவோ mystic things!
இன்னும் எதற்கும் தீர்மானமான theory கிடைத்தபாடில்லை.
ஆத்திகவாதிகளின் குழப்பத்திற்கு ஆன்மிகம் உறுதுணையாயிருக்கிறது.
நாத்திகவாதிகளின் குழப்பத்திற்கு அறிவியல் உறுதுணையாயிருக்கிறது.
மனிதப் பிறப்பே, தன் வசத்தில் தீர்த்து வைக்கப்படாத பல முடிச்சுகளோடு தான் ஆரம்பித்து - தொடர்ந்து - முடியப்போகிறது!
இருக்கிற அறிவின் மூலம் எள்ளளவு புரிந்துகொண்டு, கடலளவு குழம்பிக் கிடக்கிறோம்!
‘நேற்று தொடங்கி, இன்று வாழ்ந்து, நாளை முடியப்போகும் ‘நமக்குள் தான் எத்தனை பிரிவினைகள், கௌரவம், சுய பச்சாதாபம், கர்வம், விட்டுக்கொடுக்காத சுபாவம், முணுக்கென்றால் கோபம், எதிராளியை எதிரியாகக் கருதிவீழ்த்தும் இலாவகம், புன்சிரிப்பை ஒளித்து வைத்துவிட்டுப் பழகும் மேதாவித்தனம்… என்று அடுக்கடுக்காய் குறைகளோடு ‘மனிதன்’ எனும் பெயர்ப் போர்வையில் நடமாடுகிறோம்.
எத்தனை சித்தர்களின் பாடல்களை வாசித்தாலும், மனனம் செய்தாலும்... பக்கத்து வீட்டில் ஒருவர் மரணம் அடைந்தாலும்... நேற்று வரை உற்சாகமாய் உலவிக் கொண்டிருந்தவர் கை, கால், முடங்கி படுக்கையிலேயே ‘உணவும் – மலமும்’ என்று சுருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலும், வசதி – வாய்ப்பு - சுகங்களோடு, விமானப் பயணங்களோடு, நட்சத்திர ஹோட்டல் வாழ்க்கையோடு சுகஜீவனம் நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென, வியாபார நட்டத்தில் நொடிந்து - ஒரே ஒரு அறையுள்ள வீட்டிற்குத் தள்ளப்படுவதைப் பார்த்தாலும், நாம் மட்டும் தரையில் கால்படாமல் பறக்கிறோம். நடக்கிறவர்களுக்குத் தட்டுப்படத்தான் செய்கிறது.
வாழ்வின் அந்தரங்க ஆச்சரியங்களோடு, காலம் எத்தனையோ காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ரசம் – ஒவ்வொரு கரு – ஒவ்வொரு தொனி – ஒவ்வொரு நீதி !
அப்படி தரிசனம் கிடைத்துவிட்ட காட்சி, ஒவ்வொரு திருப்பத்திலும் நினைவுக்கு வரும். நமக்கு நம்மை நினைவு படுத்தும்.
எனக்கும் கிடைத்தது அப்படியொரு தரிசனம்!
எனது இயக்குநரின், ‘இவன்’ பட ஷூட்டிங்! - நான் உதவி இயக்குநர்.
‘இரும்புக்கடை Area – backside’
இப்படித்தான் Location details –ல் குறிப்பிடுவேன்.
……. அன்று, ‘உலகமே…நீ’ என்ற பாடலுக்கான Montages shooting.
மதியம் Lunch break.
அதன்பிறகு எடுக்க வேண்டிய shot–களுக்காக அந்த Ground– ஐ, 200 பேர் நிற்கிற அளவிற்கு வசதியாகக் கல், முள், புதர், கண்ணாடித்துண்டு, இரும்புக்கம்பிகள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும். Rain effect –ம் உண்டு. Art department அடுத்த நாள் காட்சிக்காக வேறு இடத்திலிருக்க, அந்த ஏரியா சிறுவர்களோடு Ground -ஐச் சீர்படுத்த மண்வெட்டியோடு தயாரானேன்.
கொத்த ஆரம்பித்தேன்... ஒன்று, ரெண்டு, மூன்று... ‘ணங்’ என்று சத்தம்!
God! மண்டை ஓடு..
அங்கே இன்னொரு சிறுவனுக்கு... இன்னொரு மண்டை ஓடு.
அங்கொன்றும், இங்கொன்றுமாய் மண்டை ஓடுகள்!
…ஓ… இது முன்பு இடுகாடா? – உறைந்தேன்!
உடனிருந்த சிறுவர்களுக்கோ உற்சாகம் பிடித்துக்கொண்டது.
மண்வெட்டியைப் போட்டுவிட்டு, மண்டை ஓடுகளோடு மணல்மேட்டில் கூடி விட்டார்கள்.
“செய்வியா? செய்வியா?
தப்பு செய்வியா?
இனிமே தப்பு செய்வியா?
எவ்ளோ அட்டூழியம் பண்ணினே?
இந்தா வாங்கிக்கோ… இந்தா !”
‘டப்... டப்... டப்’ என்று கையிலிருந்த வேப்ப மரக் கம்பால் அந்த மண்டை ஓட்டை அடி அடி அடி என்று அடிக்கிறான் ஒருசிறுவன்.
…இன்னொருவன், கையால் தொடப் பிடிக்காமல், காலாலேயே மிதிக்கிறான் – புரட்டுகிறான். நடு மண்டையில் ஒரு மிதி.
நீட்ட நீட்டமாய் இறுகி – விகாரமாய் இருந்த பற்களைப் பெருவிரலால் அழுத்தி... ஒரே உதை!
“போ!”
மண்டை ஓடு பறக்கிறது தரையோடு.
…ஒருவன் கையால் தூக்கி, அதன் தலையில் ‘படார்... படார்’ என்று அடிக்கிறான். குட்டுகிறான்.
எல்லாச் சிறுவர்களையும் அழைத்து,
“போதுமாடா… இந்த ஆளை வேறு ஏதாவது பண்ணணுமா? ” என்கிறான்.
ஏதோ ‘குசு குசு’ பேச்சிற்குப் பிறகு சேர்ந்து நின்றார்கள்.
“ஓடு… ஓடு” “ஓடு.. ஓடு” என்று சொந்த ராகத்தில் பரிகாசமாக ஒருவன் பாடிக்கொண்டிருந்தான்.
அதிர்ச்சியாய் - எதற்கோ சாட்சியாய் அங்கே மண்ணில் உட்கார்ந்துவிட்டேன்.
“ஏம்பா... விட்டிருங்கப்பா... முடிஞ்சா இங்கே வந்து இடத்தை சரி பண்ணுங்க, இல்லேன்னா கிளம்புங்க” என்றேன்.
“அண்ணே... இது முன்னாடி புதைச்ச இடம். அடிக்கடி வந்து விளையாடுவோம்” என்றான் ஒருசிறுவன். (பழக்கப்பட்ட விளையாட்டோ?)
நகர்ந்து வந்தார்கள். முடிந்தவரை கூடஇருந்து விட்டுக் கிளம்பிப்போனார்கள்.
Lunch break முடிந்ததும் unit–ல் எல்லோரும் இருக்கும் இடத்திற்கு whistle ஊதக் கிளம்பினேன்.
…அதற்கு முன், அந்த மண்டை ஓடுகளைப் புதைத்து விட்டுப் போகலாமா ? – என்று அவர்கள் விளையாடிய திசை நோக்கிப் போனேன்.
கிடைத்த எல்லா மண்டை ஓடுகளையும் ஒன்றாகப் போட்டு, சிறுநீர் கழித்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அவர்கள்.
உள்ளே ஏதோ இம்சையானேன்.
யார் இந்த மண்டை ஓட்டினர்? யார் இவர்கள்?
ஏன் இப்படி உயிர் போன பிறகும் அடி வாங்கினார்கள்?
இறந்த பிறகும் ஏன், எவன் சிறுநீரிலோ நனைய வேண்டும்?
எஞ்சிய ஓடாய்க் கிடந்தாலும் – கம்பால் இப்படி வலிக்க (?) வலிக்க (?) அடி வாங்க வேண்டுமா?
எந்த ஊர்?
எந்த வருடம் பிறந்தவர்கள்?
குடும்பம்?
என்ன தொழில் செய்தவர்கள்?
நிறம்?
உயரமா? குள்ளமா?
வசதியானவர்களா? ஒன்றுமில்லாமல் இருந்தவர்களா?
காதல் - கயமை – கோபம் – வலி - பொறாமை – சாதனை – புளகாங்கிதம் - கற்பனை – பசி – ஆசாபாசம் – தத்துவம் – கலவி என எல்லாமும் கலந்து வாழ்க்கை நடத்திய ஜீவன்கள் தானே!
யோசனை...! யோசனை...! யோசனை...!
அவர்களை (அவைகளை) அந்தக் கோலத்தில் பார்க்கப் பார்க்கக் கேள்விகள் மட்டுமே எழுந்தன.
…யாருக்கும் சொல்லவில்லை! இப்போதுதான் சொல்கிறேன்.
படப்பிடிப்பு அன்று முடிந்து... இதோ இன்று வரை,
அந்த “டப்… டப்… டப் “,
அந்த “படார் “ “படார் “,
அந்த அடி – அந்த மிதி…
அந்த உதை – அந்த குட்டு…
அந்த சிறுநீர் நாற்றம்…
உயிரைக் குமட்டுகிறது!
என்னுள் காரணங்களைத் தோண்ட வைத்த கால தரிசனம்!
ஓடு.. ஓடு... என்.குமாரின் குரல்வழிச் செய்தி...

Leave a comment
Upload