தொடர்கள்
கதை
“கணபதி தாத்தா...” - வெ. சுப்பிரமணியன்

2020061719290649.png

“என்னோட ‘பாஹீரதி பாட்டி, கணபதி தாத்தா’ இரண்டு பேரும், இந்த அக்கிரஹாரத்திலதான், முப்பது வருஷங்களா குடித்தனம் செய்தார்களாம். ஒரு நாள் காலையிலே காவேரி ஆற்றுக்கு குளிக்கப் போன தாத்தா, வெள்ளத்தில் மூழ்கி இறந்து போயிட்டாராம். அதுக்கப்புறம், பாட்டி எங்கப்பா கூடவே சென்னைக்கு வந்துட்டாங்களாம். பாட்டி செத்துப் போய் பத்து வருஷம் ஆயிடுத்து”, மனைவி ரேஷ்மாவிடம் சொல்லியபடியே, காரை ஒரு மரத்தடியில் நிறுத்தினான் டாக்டர் ராஜேஷ்.

முழுவதுமாக மாறிப்போயிருந்த அந்த அக்கிரஹாரத்தில், ‘கணபதி குருக்களை’ யாருக்குமே தெரியவில்லை. அக்கிரஹாரத்தை ஒட்டியிருந்த சிவன் கோவிலுக்கு, மனைவியுடன், போனான்.

“ஆயிரம் வருஷம் பழமையான இந்த சிவன் கோவிலில்தான், என் தாத்தா முப்பது வருஷமா பூஜை கைங்கரியம் செய்தாராம். பாட்டி சமைத்துப் போடும் ஒரு வேளை சாப்பாட்டைத் தவிற, நாள் முழுவதும், வேறு எதையும் எங்கேயும் சாப்பிடவே மாட்டாராம். எப்போதாவது, பாட்டிகிட்டே, ‘ரவா கேசரி’ பண்ணித்தரச் சொல்லுவாராம்”.

“இப்போ மருத்துவர்கள் கான்ஃபெரன்ஸுக்காக வந்திருக்கிற நாம, தங்கியிருப்பது, இந்த கோவிலின் அன்றைய, ‘பரம்பரை டிரஸ்டியாக’ இருந்த, டாக்டர் தேவராஜ் தாத்தாவோட வீட்டிலதான். என்னோட தாத்தாவும், இவரும், நெருங்கிய பால்ய சினேகிதர்களாம். தேவராஜ்-தாத்தாதான் எங்க அப்பாவையும் பெரியப்பாவையும் படிக்கவைத்து. எங்க குடும்பச்செலவு, கோவில் செலவு என எல்லாத்தையும் பார்த்துண்டாராம்.’

‘ஒருதடவை கணபதி-தாத்தா, ‘எதுக்குடா தேவராஜ் என்னை கடனாளியாக்கிறேன்னு’ கேட்டதுக்கு, “டேய் கணபதி, பத்து தலைமுறைக்குத் தேவையான செல்வத்தை, என் மூதாதையர்கள் எனக்கு குடுத்துட்டாங்க. ஆனா, நீ செய்கிற ஆத்மார்த்தமான கோவில் பூஜையால, என் பரம்பரைக்கே கிடைக்கிற புண்ணியத்தை, நான் எப்பிடிடா உனக்கு திருப்பித் தருவேன்? பாஹீரதி என் கூடப் பிறக்காத தங்கை. அவளுக்கு பிறந்த வீட்டு சீதனமா நான் கொடுப்பதை வேண்டாம்னு சொல்லற உரிமை உனக்கில்லை” என்றாராம்.

‘பணம் பக்தியை கொன்றுவிடும்’ என்று சொல்லி, அதனாலேயே, தாத்தா, கோவிலில் உண்டியல் வைக்கவோ, தட்டுல காசு போடவோ வேண்டான்னுட்டார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தப்போ, பாட்டி அவளோட வலது கையில் தாத்தாவோட பேரையும், தாத்தா அவரோட வலதுகையிலே ‘ஓம் நமசிவாய’ என்றும், பச்சை குத்தி கொண்டார்களாம். இதெல்லாம் பாட்டி சொல்லித்தான் எனக்கு தெரியும்” எனச்சொன்ன ராஜேஷ், “நேரமாச்சு, போகலாம் ரேஷ்மா, நாளைக்கு காலையில் சென்னைக்கு கிளம்பவேண்டும்” என்றான்.

அடுத்தநாள் ஊருக்கு கிளம்புமுன், டாக்டர் தேவராஜ், ராஜேஷிடம், “உன்னோட தாத்தா கணபதி காவேரியில் மூழ்கி இறந்து விட்டான் என்றுதான் நானும் நாற்பது வருஷமா நம்பிக் கொண்டிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்னால், என் ஹாஸ்பிட்டல் நம்பருக்கு, ஶ்ரீரங்கத்திலிருந்து ‘கணபதியே’ என்னிடம் ஃபோனில் பேசினான். இத்தனை வருஷமா காசியிலிருந்தானாம்.

அவன் முந்தாநாள் எனக்கு போஸ்ட் செய்த கடிதத்தை தரேன். சில விஷயங்களை நான் நேற்றிரவு, ஒரு பேப்பரில் எழுதி சேர்த்து-பின் பண்ணியிருக்கேன், நீ படி”, என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

தேவராஜ் கொடுத்த கடிதத்தை, இரயிலில் போகும்போது படித்தான் ராஜேஷ். கடிதத்தை படிக்கையில், காலச் சக்கரத்தில், கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்று, நிகழ்வுகளை அறியலானான்.


ஒருநாள் காலையில், சிவன் கோயிலில் பூஜையை முடித்துவிட்டு பிரஹாரத்தில் அமர்ந்திருந்த கணபதி குருக்களிடம், “சாமீ, நான் மோசம் போயிட்டேன். கல்யாணமாகாத என் பொண்ணு ‘சின்னாத்தா’, இப்போ முழுகாம இருக்கா. பாவிமக நேத்துதான் எங்கிட்டே சொல்லி அழுவுறா. அவ நிலைமைக்கு யாரு காரணம்னு சொல்லமாட்டேங்கிறா. அவ தெய்வமா மதிக்கிற நீங்கதான், அவகிட்டே உண்மையை கேட்கணும்” என புலம்பினான் சின்னாத்தாவின் அப்பன் வெள்ளையன்.

அன்று மாலையில் சின்னாத்தாவிடம், “சிவன் மேல பக்தியும், என் மேல நம்பிக்கையும் உனக்கு இருந்தா, உன் தாய்மைக்கு யார் காரணம்னு மறைக்காம சொல்லு”. என்றார் கணபதி குருக்கள்.

“ஆனித்திருமஞ்சனம் முடிந்த மூன்றாம் நாள் ராத்திரி, கோவிலோட உள் சன்னதியை பூட்டிட்டு, தேவராஜ் ஐயாவை பார்க்க நீங்க டவுணுக்கு போயிட்டீங்க. பிரஹாரத்தின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு, நான் கோவிலோட தோட்டத்திலிருந்து, வந்து பார்த்தேன். நம்ப ஊர் நாட்டாமை நல்லதம்பியின் மகன் சேகர்தான் பூட்டை உடைச்சுக்கிட்டிருந்தான். நான் கூச்சலிடவும், ஆத்திரத்தில், அந்த சேகர்தான் என்னை, கோவில் கிணத்தடிக்கு தள்ளிக்கிட்டு போய், என் குரலை அடக்கி, என்னை பிழையாக்கிட்டான்”, என்று சொல்லிக் கதறினாள் சின்னாத்தா.

ஓரமாக நின்று கேட்டுக்கொண்டே, மகளை அடிக்க கையை ஓங்கிய வெள்ளையனை, ‘டேய் முட்டாள், ஒருத்தர் தெரிஞ்சு செய்கிற தவறுக்குத்தான் தண்டனை. இது அவளை மீறிய தப்பு. இதுக்கு பிராயச்சித்தம்தான் வழி. சின்னாத்தா, கவலைப்படாதே, நீ மாசமாயிருக்கிற விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும், யாருக்கும் தெரியவேண்டாம், நான் பார்த்துக்கிறேன்’ என்று சமாதானம் சொல்லியனுப்பினார் குருக்கள்.

மறுநாளே, கோவிலிலுக்கு வந்த நல்லதம்பி, ‘என்னைய்யா கணபதி, என்னமோ பேசணும்னு வரச்சொன்னியாமே’ என அலட்சியத்துடன் கேட்டுக்கொண்டே வந்தார். “வாங்கோ நாட்டாமை, உங்களை எதுக்கு பார்க்கணும்னு’- என்று குருக்கள் ஆரம்பிக்கும் முன்னரே; ‘அதாவது கெட்டுப்போன அந்த பொண்ணுக்கு, என் பையனைவிட்டு வாழ்க்கை கொடுக்கணும்னு சொல்லப்போறே’, என்றார் நல்லதம்பி. அவரை, இடைமறித்த குருக்கள், ’நீங்க தப்பா பேசரேள், அந்த பெண்ணைக் கெடுத்தது உங்க பையன்’ என்றார்.

‘சரிய்யா, இருக்கட்டுமே, எப்படி வேணும்னாலும் வச்சுக்க. ஏற்கனவே சாந்திமுகூர்த்தம் நடந்த அவங்களுக்கு, இதே கோவிலில் கல்யாணத்தை, பண்ணிடுவோம். பொண்ணுக்கு சீதனமா நீ என்ன தருவே?’ என்றதும் அதிர்ந்து போனார் குருக்கள். ‘நான் கேட்பதை குடுத்துட்டு, உன்னோட வளர்ப்பு மகளை தாரைவார்த்து குடுக்க சம்மதமா?” என்று கேட்ட நல்லதம்பியிடம், ‘சரி கேளுங்கோ, என்னால முடிஞ்சதை தரேன்’ என வாக்குக் கொடுத்தார் குருக்கள்.

‘யோவ் நீ என்னத்தை குடுப்பே? மிஞ்சிப்போனா அழுகின தேங்காமூடியும், இரண்டு நசுங்கின வாழைப்பழமும், கொஞ்சம் விபூதி குங்குமம், அவ்வளவுதானே?. நான் சீதனமா கேட்பது, ‘பஞ்சலோக நடராஜர் சிலை’, அதான்யா உற்சவமூர்த்தி சிலை. அதுக்கு பதிலா டூப்பிளிகேட் சிலையை செஞ்சு மாத்தி வைக்கலாம். என்ன சொல்லறே?’ பேரம் பேசினார் நல்லதம்பி.

ஆத்திரத்தில் குருக்கள், ‘வெளிய போடா நாயே. “சிவன் சொத்து” மேல ஆசைப்பட்ட உனக்கு, அந்த ஈசனே தண்டனை குடுப்பாருடா’, என நல்லதம்பிக்கு சாபமிட்டுவிட்டு, சன்னதிக்குள்ளே போய்விட்டார்.

அன்று மாலையில், தன் பண்ணைவீட்டுக்கு, வெள்ளையனை வரச் சொன்னார் நாட்டாமை. சிலைத்திருட்டு முயற்சிக்கு பயந்து சிலையை பாதுகாக்க எண்ணி, திருச்சியிலுள்ள சினேகிதர் தேவராஜோட காரில், சிலையை எடுத்து வைக்க, குருக்களுக்கு தான் உதவியதை, வெள்ளையன் நல்லதம்பியிடம் போதையில் உளறிவிட்டான்.

வெள்ளையனை தன்வயப்படுத்திய நல்லதம்பியும், குருக்களை முந்திக்கொண்டு, அடுத்தநாளே பஞ்சாயத்தைக் கூட்டினார். ஐம்பது வயதான கணபதி குருக்கள் மனதுக்குள் ‘ருத்திரம்’ மந்திரத்தை ஜெபித்தபடியே ஓரமாய் நின்று கொண்டிருந்தார். அவரது மனைவி பாஹீரதியோ தன் வீட்டு சுவாமியறையில், விம்மியபடி கிடந்தாள்.

பஞ்சாயத்தில் ‘முந்தாநாள் சாய்ங்காலமா, சின்னாத்தாகிட்டே இந்த குருக்கள் ‘நீ மாசமாயிருக்கிற விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும், யாருக்கும் தெரியவேண்டாம், நான் பார்த்துக்கிறேன்னு’ கோவிலில் சொன்னதை, நானும் அவ அப்பனும், எங்க காதாலையே கேட்டோம்”, என சொல்லிவிட்டு, நல்லதம்பி எல்லோர் முகத்தையும் பார்த்தார்.

‘முப்பது வருஷமா நம்ப ஊர் சிவன் கோவிலை, தன் உயிராட்டுமா நினைச்சு, பக்தி சிரத்தையோட, காலம் தவராம பூஜை செய்யற ஒரு சிவபக்தன் மேல பழிபோட, வேற காரணம் கிடைக்கிலையா’, கோபத்தோடு குருக்களுக்காக குரல் கொடுத்தார், அந்தஊர் போஸ்டுமாஸ்டர்.

விறகுகடை வீராச்சாமியின் சம்சாரமோ, ‘யோவ் நல்லதம்பி, கணபதி குருக்களை பழி சொல்லறதும், நம்ப சிவன்கோவில் மூலவரை, பழி சொல்லறதும் ஒண்ணுதான், ஜாக்கிறதையா பேசு’ என்றாள்.

நல்லதம்பியோ, ‘நம்ம கோவில் உற்சவ மூர்த்தி ‘பஞ்சலோக நடராஜர் - சிலையை’ குருக்கள், யாரோ வெளியூரானுக்கு வித்து காசாக்கிட்டார். அது இப்போ கோவில்ல இல்லை. என்ன ஆச்சுன்னு கேளுங்கப்பா. கோவில் சிலை விஷயத்தில, கிராம சபையில கேக்காம, இவரே எப்படி முடிவெடுக்கலாம்?’. நல்லதம்பியின், பிரம்மாஸ்திரத்திற்கு பதில் சொல்ல முடியாமல் சிலையாகிப் போனார் குருக்கள்.

‘என்ன குருக்களே, எல்லாத்துக்கும் வாயை மூடிகிட்டிருந்தா? எதுனாச்சும் பேசுங்க’, ஆங்காங்கே குரல்கள் எழுந்தன. ‘தன் பதில் எதுவுமே இப்போது எடுபடப் போவதில்லை. எல்லாவற்றையும் ஈசனே பார்த்துப்பான்’, என, தொடர்ந்து மௌனம் காத்தார் கணபதி குருக்கள்.

குருக்களின் மௌனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட நல்லதம்பி, “அறுப்புக் காலத்தில நாம குடுக்கிற சொற்ப நெல்லையும், கிராமத்தில தரும் துளியூண்டு வருமானத்தையும் வைத்துக்கொண்டு, இரண்டு பசங்களையும் டவுன்ல படிக்கவைக்க முடியுமா? இல்லே அவரோட சம்சாரந்தான், புடி நகையை மாட்டிகிட்டு ஒய்யாரமா ஊர்வலம் வரமுடியுமா?” வார்த்தைகளை விஷமாக்கி கக்கினார்.

‘இந்த காலத்தில, நாட்டாமை சொல்லற மாதிரி, எந்த நண்பனும், ஆதாயம் இல்லாம, அடுத்தவன் பிள்ளைகளை படிக்கவைச்சு, அவன் பெண்டாட்டிக்கும் நகை வாங்கிக் குடுப்பானா?’ கூட்டத்திலிருந்த சில பெண்கள் பாஹீரதியை ஜாடையாகவும் அசிங்கமாகவும் பேசினார்கள்.

கடைசியாக ஊர்த்தலைவர், “குருக்கள் தன்னோட மகளாட்டமா வளர்த்து வர சின்னாத்தாவை, அவரோடவே சேர்த்து கேவலமா பேசறது சரியில்லை. குருக்களோட வீட்டாளுங்களைப் பத்தி, வாய்புளிச்சுதோ, மாங்காய் புளிச்சுதோன்னு, ஆளாளுக்குப் பேசுவது தர்மமேயில்லை.

அதேபோல, குருக்களும், வாயைத்தொறந்து ஒரு வார்த்தையும் பேசாதது தப்புதான். நல்லதம்பி பஞ்சாயத்தைக் கூட்டினது ‘ஐம்பொன் நடராஜர் சிலை’ எங்கேன்னு கேட்டுதான். குருக்களுக்கு இரண்டு நாள் அவகாசம் தருவோம். அவர் சிலையை கோவிலில் கொண்டுவந்து வைக்கலேன்னா, போலீஸில், நானே ஊர் சார்பா, அவர்மேல புகார் கொடுக்கிறேன்”, என்றதும் பஞ்சாயத்து கலைந்துவிட்டது.

பஞ்சாயத்து முடிந்து, வீட்டுக்கு வந்த கணவனை, வார்த்தைகளால் சுட்டெரித்தாள் பாஹீரதி.

“இன்னிக்கு எல்லோரும் என்னை இவ்வளவு கீழ்தரமா, நடத்தை கெட்டவள்னு பேசறதுக்கு நீங்கதான் காரணம். பஹவானே, இவர் உனக்கு பண்ணற பூஜை சத்தியம்னா, இந்த தாலியை இவர் கட்டினது வாஸ்தவம்னா, இனி என் உயிர் இருக்கும்வரை இவர் மூஞ்சியிலேயே என்னை முழிக்காம பண்ணிடுப்பா’, என ஆத்திரத்தில் பாஹீரதி பண்ணிய சத்தியத்தால் நிலைகுலைந்தார் குருக்கள்.

‘காவேரி முழுவதும், மூணுநாளா வலைவீசி, நல்லாத்தேடிப் பார்த்தாச்சு. குருக்களோட அடையாளமா எதுவுமே கிடைக்கவில்லையாம்’. தண்டோராப் போட்டு சொன்னதும், பித்துப் பிடித்தவளானாள் பாஹீரதி. அன்று நடுநிசியில், ஊரே அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனது.

போதையிலிருந்த நல்லதம்பியும், சேகரும், பண்ணை-வீட்டில் அறிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்தனர். வெள்ளையனோ, விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால், அவனது வீட்டிலேயே செத்துக்கிடந்தான். கோவிலுக்கு எதிரே இருந்த புளிய-மரத்தில் சின்னாத்தா தூக்கில் தொங்கியிருந்தாள்.

‘சார், நீங்க மெடிக்கல்-டாக்டர் தானே? ‘D2’கோச்சுல வயசானவர் ஒருத்தர் மயங்கிட்டாராம். எமர்ஜென்ஸியாம், கொஞ்சம் போய்பாருங்க சார்”- டிக்கட் எக்ஸாமினர் சொன்னதும், கையிலிருந்த கடிதத்தை மடித்து, பையில் வைத்துக்கொண்டு, ராஜேஷ் கிளம்பிவிட்டான்.

“டிரெயினுக்குள்ளேயே வித்துக்கிட்டு வந்த சூடான கேசரியை வாங்கி சாப்பிட்டாருங்க. திடீர்னு என்மேல விழுந்துட்டாரு. பேச்சு மூச்சு இல்லீங்க” என மயங்கியவரின், எதிரே அமர்ந்திருந்த வாலிபன், ரயில்வே போலீஸிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

மயங்கியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ‘காலமாகிவிட்டார்’ என்று ராஜேஷ் சொன்னான்.

‘டி.டி.ஈயோ தன் மொபைலில், ‘தாம்பரம் ஸ்டேஷன் மாஸ்டரா? சார், டி2 கோச், பாசஞ்சர் பேரு ‘கணபதி’, வயது தொண்ணூறு, ஶ்ரீரங்கத்தில் ஏறியிருக்கார். மயங்கியவரை, வண்டியிலேயே ஒரு டாக்டர் செக்பண்ணிட்டு, ஆள் அவுட்டுன்னு சொல்றார்” என்றார்.

அதைக் கேட்டபடியே, தற்செயலாக இறந்தவரின் வலது கையில் ‘ஓம் நமசிவாய’ என்று பச்சை குத்தியிருந்ததை, பார்த்து, அதிர்ச்சியில் உறைந்தான் ராஜேஷ். அவன் உதடுகள் ‘கணபதி தாத்தா’ என்று உச்சரித்தன.