தொடர்கள்
தொடர்கள்
மகேந்திர பல்லவர் - 72 - சுதாங்கன்

20200617205449537.jpg

மகேந்திரனின் இறுதிக்காலம் வரையில் சினிமா பற்றிய சிந்தனையே அவர் மனதில் இருந்தது. அதை அவர் பதிவும் செய்திருக்கிறார்.

அதற்கு அவர் கொடுத்த தலைப்பு ‘தமிழ் சினிமாவின் இன்றைய புதிய அலைகள்’!

‘தனக்கென ஒரு தனித்துவமான அடையாளம், அங்கீகாரம், காலம் காலமாகப் பழகிப்போன பலவீனமான சம்பிரதாயங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற வேட்கை, புதிய பாதைகளில் பயணிக்க வேண்டும் என்கிற அழுத்தமான தீர்மானம், இப்படி மாறுபட்டு சிந்திப்பவர்கள்தான் நாம் நிமிர்ந்து பார்க்கும் சாதனைகளைச் செய்து காட்டுகிறார்கள். இது தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும்.

தமிழ் சினிமாவில் அப்படி சாதிப்பவர்கள், தமிழ் சினிமாவின் குழந்தைப் பருவத்திலிருந்து அதன் இன்றைய பருவம் வரை இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இனியும் வருவார்கள்! ஆனால், அதில் ஒரு சோகம். வருடம் தோறும் பொங்கல் வரும், போகிப் பொங்கல் தினத்தில் வீட்டிலிருக்கும் உபயோகமற்ற, குப்பை கூளங்களை எல்லாம் தீயிட்டுப் பொசுக்குவார்கள்.

வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வெள்ளை அடித்து வீட்டின் மொத்தத் தோற்றமே அதிசயப்படுகிற மாதிரி பிரகாசமாகிவிடும். வீட்டில் வசிப்பவர்களும் சரி, அல்லது வீட்டைக் கடந்து போகிறவர்களும் சரி, வீட்டின் புதிய அழகிய மாற்றத்தைக் கண்டு குதூகலிப்பார்கள்.

ஆனால், அந்த மகிழ்ச்சி வீட்டின் அழகிய தோற்றம், வீட்டில் சுத்தம் எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். ஒரு சில மாதங்களிலேயே வீட்டினுள் தேவையற்ற, பாடாவதி சாமான்கள் எல்லாம் மீண்டும் கூடாரம் கட்டிவிடும். வீட்டில் வெளிப்புற உட்புறச் சுவர்கள் எல்லாம் கருமை அடைந்து, அழுக்கேறி, பழைய நிலைக்கே திரும்பிவிடும். பிறகு அடுத்த பொங்கல் வரும்போதுதான் அந்த வீடு மீண்டும் சுத்தமாகி வெள்ளை வெளேர் என்று காட்சி தரும்.

இதுதான் எல்லாக் காலத்திலும் தமிழ் சினிமாவின் நிஜ நிலவரம். பொங்கலாவது வருடத்துக்கு ஒரு முறை என்பது நிச்சயம். ஆனால், தமிழ் சினிமாவின் பொங்கல் எப்போது என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அப்படி ஒரு போகிப் பொங்கல் தமிழ் சினிமா வரலாற்றில் வரும்போதுதான், நமது சினிமா வீட்டுக்கு வெள்ளை அடித்து, வீட்டின் குப்பைகளை தீயிலிட்டுப் பொசுக்கியவர்களை நாம் ‘சாதனையாளர்கள் என்கிறோமா?’ ட்ரெண்ட் செட்டர்ஸ் என்கிறோமா?’

இது குறித்து நான் பலமுறை யோசித்திருக்கிறேன். வீட்டின் ஒழுங்கற்ற அமைப்பையே முற்றிலும் மாற்றிவிட்டு, தொடர்ச்சியாகக் காலம் பூராவும் தமிழ் சினிமா என்ற வீடு, குப்பைகளற்ற வீடாக பார்ப்பதற்கு மரியாதை உள்ள வீடாகக் காட்சி தர முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

ஒரு புதிய படைப்பாளியிடமிருந்து வெளியாகும் புது வகையான தமிழ் சினிமாவைத் தொடர்ந்து மற்ற படைப்பாளிகளும், அது போல், வழக்கமான தமிழ் சினிமாக்களில் இருந்து மாறுபட்ட புதுவகை தமிழ் சினிமாக்களை தருவதற்கு முன்வருவது கிடையாது. அந்தப் புதிய சாதனையாளர்கள் மனோபாவத்தையும், அவர்களுக்கு மக்களிடம் கிடைத்த உற்சாகமான வரவேற்பையும் மற்ற படைப்பாளிகள் பார்த்த பிறகும் கூட அவர்கள் உத்வேகம் கொள்வதில்லையே ஏன்?

அதே சமயம் தரமற்ற தமிழ்ப் படம் ஒன்று வியாபார ரீதியாக வெற்றி பெற்றுவிட்டால், அந்தப் பாடாவதிப் படம் போலவே தாங்களும் படம் எடுக்க பூஜை போட்டு,ஷூட்டிங் ஆரம்பிக்கக் கணக்கற்றவர்கள் அவசரப்படுவார்கள். படுதோல்வியும் அடைவார்கள். இந்த ரீதியில் ஒரு பொங்கலன்று வெள்ளை அடிக்கப்பட்ட வீடு, மீண்டும் குப்பைகளால் நிரம்பி, அழுக்கேறி.. புகைபடர்ந்து மறுபடி பார்க்கச் சகிக்காத ஒன்றாக தமிழ் சினிமாவின் நிலைமை மாறிவிடும்.

தமிழ் சினிமாவில் நமக்கென்று கிடைத்துள்ள நிரந்தர அடையாளம் இப்படிப்பட்டதுதான்.

சமீப காலத்தில் தமிழ் சினிமாவுக்கு வெள்ளையடித்து புதிய தோற்றத்தையும், பொலிவையும் தந்த இயக்குனர்களில் பாலா குறிப்பிடத்தக்கவர். அவரது பாதையிலிருந்து அவர் இன்னும் மாறவில்லை என்பது அவரது தனிச்சிறப்பு. அறிமுகப் படத்திலேயே புதிய சிந்தனைகளுடன் வெற்றி பெரும் அறிமுக இயக்குனர்களை சில சமயம் என்னால் சுடச்சுட பாராட்ட முடிவதிலை. அவர்களது தொலைபேசி எண்ணோ, முகவரியோ கிடைக்காது. அப்படிப்பட்டவர்களை நேரில் சந்திக்கும்போது மனதாரப் பாராட்டுவான். சிலரைத் தொலைபேசியிலேயே அழைத்தும் பாராட்டி இருக்கிறேன். அவர்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இத்தகைய இயக்குனர்களில் சிலர் தங்களது அடுத்த படத்திலேயே நம்மை ஆழமாக ஏமாற்றி விடுவதையும் பார்க்கிறோம். அவர்கள், தங்களது அடுத்தடுத்த படங்களிலும் புதுப் புது கதைக் களங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. ‘எக்காரணம் கொண்டும் எந்த வித சமரசத்துக்கும் ஆளாகாமல் மாறுபட்ட படங்களையே தருவோம்’ என்று தீவிரமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தமிழ் சினிமாவில் நித்தம் நித்தம் போகி கொண்டாட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

மிகவும் பாராட்டுக்குரிய இன்னோர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்குவது பெரிய பட்ஜெட்டுக்கான பிரும்மாண்டமான படங்களை. ஆனால் ஒரு படத் தயாரிப்பாளராக இவர் இயங்கும் விதம்தான் நிஜமான பிரும்மாண்டம். புதிய சிந்தனைகளோடு வரும் இளம் இயக்குனர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, அவர்களைக் கொண்டு புது வகை தமிழ்ப் படங்களை தன் கம்பெனியின் பெயரில் தயாரிக்கிறார் ஷங்கர். தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றிய கனவை செயல்படுத்துகிறார். தமிழ் சினிமாவுக்கு இவர் செய்து வரும் உன்னத சேவையை, நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்” -

இவ்வாறு மகேந்திரன் பதிவு செய்திருக்கிறார்.

20200617205528911.jpg

இன்று மகேந்திரன் நம்மோடு இல்லை. ஆனால் அவரும் வெள்ளையடிக்கப்படாத குப்பை வீடுகளான படங்களுக்கு ஆரம்பத்தில் நிறைய கதை வசனம் எழுதியிருக்கிறார். ஆனால் ஒன்று. இவர் இயக்குனரானதும், தமிழ் சினிமாவே மிரண்டது என்பதுதான் உண்மை.

இவர் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையும் மேன்மையாக இருந்தது. அது இயக்குனர்களின் சினிமாக் காலம். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் பெயர் திரையில் காட்டப்ப்டும் போது கைதட்டல் வாங்கிய முதல் இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை. ஸ்ரீதரின் நெஞ்சில் ஒர் ஆலயம். ஸ்ரீதரின் மீண்ட சொர்க்கம், ஸ்ரீதரின் புனர்ஜென்மம், ஸ்ரீதரின் எதிர்பாராதது. என்றுதான் விளம்பரங்களில் வரும். ஸ்ரீதருக்காகவே படம்
விற்றது. அதில் நடித்த நடிகர்களுக்காக அல்ல! அதே போலவே தான் கே.பாலசந்தரும். அவருக்கென்றே படங்கள் ஓடியது. அவரது பிராண்ட் வேல்யூவே படத்திற்கான நன்மதிப்பாகியது.

அந்த நிலை தமிழ் சினிமாவில் மீண்டும் 1976ல் வந்தது. பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, மகேந்திரனின் உதிரிப்பூக்கள் என்று தான் விளம்பரங்கள் வந்தது.

இப்போது தமிழ் சினிமா என்பது நடிகர்களின் கைக்கு போய்விட்டது. எது எப்படியோ தமிழ் சினிமா சரித்திரத்தில் மகேந்திரனுக்காக பல பக்கங்கள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்படவேண்டும். காரணம்,

அவர் நம் மனதில் என்றும் உதிராத பூ!

(முற்றும்)