
அந்த பங்களா போன்ற வீட்டின் உச்சியில் பச்சைக் கொடி பறந்தது. வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர். சுவரின் ஆங்காங்கே திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. வீட்டின் பிரதான வாசலின் இடப்பக்கம் கறுப்பு நிற சதுரம் பண்ணப்பட்டிருந்தது.
அந்த கறுப்பு சதுரத்தில் அல்லது கரும்பலகையில் கீழ்க்கண்ட அறிவிப்பு காணப்பட்டது, சைக்கிளில் செல்வோர் நடந்து செல்பவர் அறிவிப்பை வாசித்துக் கொண்டே சென்றனர்.
இந்த வீட்டில் இலவச பிரார்த்தனை அனைத்து மதத்தினருக்கும் செய்யப்படும்.
உங்களது பிரச்சனை என்ன என்பதனை இக்கரும்பலகையில் முழு முகவரியுடன் எழுதுங்கள். அல்லது பிரச்சனையை எழுதி சாதாரண தபாலிலோ தூதஞ்சலிலோ அனுப்புங்கள் அல்லது டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் ஸாஜி. உமர் 90 டாட் இன் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் உங்களது பிரச்சனை தீர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
மாஷா அல்லாஹ்!
தாழ்மையுடன் இறையடியான்
ஸாஜித் உமர்
மஹ்ஜபீன் (மனைவி)
வாசிக்கும் சிலர் ஆணியடித்தாற் போல் நின்று அறிவிப்பு வாசகங்களை வெறித்தனர். சிலரின் கை அவர்களது சட்டைப் பைக்கு சென்று பேனாவை துழாவியது.
‘ஓசின்னு போட்டுட்டு கடிதம் எழுதுனா ஈமெயில் அனுப்ச்சா சர்வீஸ் சார்ஜ் கேப்பானோ?’
‘கிறிஸ்துவர்கள் தானே ஜெபவீடு என்றெல்லாம் நடத்துவார்கள் முஸ்லிம்களுமா?’
‘பொதுவாக முஸ்லிம்கள் தானுண்டு தன் வயிறுண்டு என்றுதானே இருப்பார்கள். இந்த ஸாஜித் உமர் எப்படி விதிவிலக்காக முளைத்தான்?’ -இப்படி வழிப்போக்கர்கள் பலவாறு யோசித்தனர்.
ஸாஜித் உமர் தேநீர் உறிஞ்சியபடியே கணினி திறந்து புதிதாக வந்திருக்கும் மின்னஞ்சல்களை சேகரித்தான். ஐம்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களை மனைவி நீட்டினாள்.
“நாளுக்கு நாள் பிராத்தரனை செய்யச் சொல்லும் விண்ணப்பங்கள் கூடிக்கொண்டே போகின்றன. என்ன நிவாரணம் காணப் போகிறீர்கள்ஜி?”
கனத்த சிவந்த குறும்தாடிக்காரன் சிரித்தான். “ஒரு நாளை தொழுகைக்கு பத்து விண்ணப்பங்கள் தினம் பத்து இண்டு அஞ்சு அம்பது பேருக்கு பிராத்தனை செய்வேன். பெண்டிங் அடுத்த நாளைக்கு!”
“கேட்டா கோபித்துக் கொள்ளக்கூடாது. நீங்க துஆ பண்ணி யாருக்காவது நல்லது நடந்திருக்குமா? நிவாரணம் பெற்றவர்கள் உங்களுக்கு நன்றிக்கடிதம் அனுப்புகிறார்களா? நன்றியை தொலைபேசியிலாவது தெரிவிக்கிறார்களா?”
“தெரியாத மாதிரி கேக்ற நூற்றுக்கணக்கான நன்றி கடிதங்கள் எனக்கு வந்திருக்கின்றன. மனசு மகிழ்ச்சியால் மேலே மேலே பறக்குது”
“நான் தெரியாமத்தான் கேக்கிறேன், நீங்க என்ன ஆன்மிகப் பெரியவரா, சூபித்துவ ஞானியா, மார்க்கத்தில் மூழ்கி திளைக்கும் முல்லாவா? உங்களுக்கு முப்பது வயசாகுது. வயதுக்கும் உயரத்துக்கும் பொருந்தாத எடை. பாக்க கோதுமை மூட்டை மாதிரி இருக்கீங்க. சாதாரண மனிதனுக்கு இருக்கும் எல்லா ஆசாபாசங்களும் உங்களிடமும் இருக்கின்றன. நீங்க துஆ பண்ணி நூத்துக்கணக்கானவங்க நிவாரணம் பெறுவதாக நீங்க நினைக்றது சொல்றது கிங் சைஸ் ஈகோ கொஞ்சம் அடக்கி வாசிங்கஜி!”
“எனக்கு எதிரி வீட்டுக்குள்ளேயே இருக்கு போல!”
“சரி, உங்களது நேற்றைய 5 இண்டு 10 பிரார்த்தனைகளை பட்டியலிடுங்க பார்ப்போம்!”
“அதிகாலைத் தொழுகையில் கீழ்க்கண்ட பத்து துஆக்கள் செல்லம் 1. கொரோனா உலகை விட்டு தலைதெறிக்க ஓட வேண்டும். 2. இருதய நோய் அறுவை சிகிச்சைக்கு செல்லும் ஆறு வயது சிறுவன் விரைவில் குணமாக வேண்டும் 3. தூத்துக்குடி விசாலாட்சியின் தந்தை மரணபடுக்கையிலிருந்து எழ வேண்டும். 4. நீட் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ் சீட் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காட்டுமன்னார் கோயில் முஸ்லிம் மாணவிக்கு சீட் கிடைக்க வேண்டும் 5. எம்.ஏ.சாகுல் ஹமீது ஜலாலீயின் சிறுசிறு சுகவீனங்கள் அகன்று அவர் தனது இமாம் பணியை செவ்வனே செய்ய வேண்டும்...” தொடர்ந்தான்.
“பால்தினகரன் அளவுக்கு போயிட்டு இருக்கீங்க கணவரே. உள்ளூர் விஷயங்கள் தவிர வெளியூர் விஷயங்களுக்கும் துஆ பண்றீங்க போல. எரிபொருள் தாகத்துக்காக உலக நாடுகளுக்கிடையே நிம்மதியின்மையை உருவாக்கும் அமெரிக்காவுக்கு நல்ல புத்தியக் கொடு அல்லாஹ்வேன்னு கேக்கறீங்களே, அரபுநாடுகள் கேட்கச் சொன்னதா?”
“சர்வதேச விஷயங்களுக்கு நிவாரணத்தை நானே இறைஞ்சுவேன். பத்துவிஷயம் வேண்டுனா பத்துக்கு அஞ்சு விஷயம் நடக்காமயா போய்டும்?”
“உன்னை பத்தி நம்ம தெரு முஸ்லிம்கள் எல்லாம் என்ன பேசிக்கிராங்க தெரியுமா?”
“என்ன பேசிக்கிராங்க?”
“பெரிய பக்திமான் மாதிரி ஷோ காட்டுகிறாயாம். விளம்பரம் தேடுறதில் கவனத்தை செலவழிக்காம தொழிலில் இறங்கினாய் என்றால் குடும்பம் உருப்புடுமாம். பிறருக்காக துஆ செய்ய யாரிடம் லைசென்ஸ் பெற்றாய் எனவும் கேட்கிறார்கள்!’’
“அவர்கள் கேட்கிறார்களா, அவர்கள் பெயரால் நீ கேட்கிறாயா?”
“இரண்டும்தான்!”
“துஆ செய்ய யாரிடம் உரிமம் பெறவேண்டும்? துஆ தனக்காகவும் பிறருக்காகவும் செய்ய அனைத்து ஜீவராசிகளுக்கும் மானசீக உரிமம் கொடுத்துள்ளான் இறைவன்!”
“பிரார்த்தனையில் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற மனோபாவம் தேவை. பேராசை கூடாது”
“எனக்காக வேண்டினால்தான் தன்னலம் பேராசை எனலாம். நான் பிறருக்காகத்தானே வேண்டுகிறேன். இதில் தவறேதுமில்லை!”
“எனக்கு புருஷனாக இருங்கள், மதபைத்தியமாக இருக்காதீர்கள். நமக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. நமக்கு குழந்தை இல்லை!”
“உண்மைதான்!”
“எனக்கு கொலஸ்டிரால் 310 இருக்கிறது. உங்களுக்கு சுகர் 240 இருக்கிறது. கடந்த வருடத்தில் நீங்கள் செய்த வியாபாரத்தால் நீங்கள் அடைந்த நஷ்டம் 16 லட்ச ரூபாய். போன வருட ஹஜ் யாத்திரைக்கு உங்களது தந்தையும் தாயும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தபாலில் எம்பிஏ பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து பெயிலானீர்கள். போன மாதம் உங்க தம்பிக்கு ரோட் ஆக்ஸிடென்ட், எங்கம்மாவுக்கு தூக்கமின்மை நோய். எங்கத்தாவுக்கு ஹைபிபி, என் தம்பிக்கு இன்னும் வேலை கிடைக்கல. என் தங்கச்சிக்கு இன்னும் நல்ல மாப்பிள்ளை கிடைக்கல!”
“போதும் மஹ்ஜபீன்!”
“யாரைக் கேட்டு அறிவிப்பு பலகையில் என் பெயரையும் போட்டீர்கள்?”
“கணவனின் இடக்கை மனைவிதானே?”
“இடக்கையின் பிரதான உபயோகம் என்ன என்பது எனக்கு தெரியாதா?”
“சொந்த பிரச்சனைகளுக்கு சோகங்களுக்கு நிவாரணம் கேட்டு துஆ பண்ணப்போவதில்ல நான். நமது துன்பங்களை எப்ப தீர்க்கனும்னு இறைவனுக்கு தெரியும்!”
“பிறரின் துன்பங்களையும் எப்ப தீர்க்கனும்னு அவனுக்கு தெரியுமே. பின்ன எதுக்கு பிறருக்கு துஆ!”
“படபடன்னு மனசில தோணினது எல்லாத்தையும் பேசாதே. உனக்கு ஒரு நபிமொழி சொல்றேன் கேளு... !”
“போச்சுரா!”
“எந்த முஸ்லிமான அடியாராவது நம் இஸ்லாமிய சகோதரருக்கு தெரியாமல் அவருக்காக இறைஞ்சுவாராயின் உமக்கும் அது போன்று கிடைக்கும் என்று வானவர்கள் கூறுகிறார்கள் என நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்!”
“நீங்கள் பிறமத சகோதரர்களுக்கும் வேண்டுகிறீர்களே...”
“வேண்டுவது என் பணி. அது தகுதியானதா இல்லாததா என பார்ப்பது இறைவன் பணி. எவர் நல்லவராக இருக்கிறாரோ அவர் இஸ்லாத்திற்கு நெருக்கமாக உள்ளார் என நம்புகிறேன்!”
“அப்படியெல்லாம் அய்யா நம்புகிறீங்களா, சவாசு!”
“கொஞ்சம் யோசிச்சு பாரு செல்லம். தினமும் எனக்கு அதைக் கொடு இதைக்கொடு என் சொந்தக்காரர்களுக்கு அதைசெய் இதை செய்னு வேண்டினா, இறைவனுக்கு அலுப்பு புளிப்பு சலிப்பு வந்திரும். அதனால முழுக்க முழுக்க பிறருக்கு வேண்டுகிறேன். அல்லாஹ் பாப்பான். பரவாயில்லையே நம்ம பய்யன்... வெரிகுட்னு பாராட்டுவான். நான் வைக்ற துஆல பாதிய நிறைவேத்தித் தருவான். அத்தோட நாம் கேக்காத நம்ம அடிப்படை பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பான்...”
“அதற்கு ஆதாரம்?”
வாசலின் அழைப்புமணி சிணுங்கியது. போய் கதவைத் திறந்து விட்டான். ஸாஜித் உமர். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“நான் உள்ளே வரலாமா?”
“வாங்க பாய்!” வரவேற்பறையில் இருவரும் அமர்ந்தனர்.
“சொல்லுங்க பாய்!”
“நான் திருத்துறைபூண்டியை சேர்ந்தவன். போஸ்ட்மாஸ்டராக பணிபுரிகிறேன். போன மாதம் என் தந்தைக்கு சிறுநீரக மாற்றுஅறுவை சிகிச்சை செய்தோம். அவருக்காக வேண்டச் சொல்லி நான் உங்களுக்கு கடிதம் அனுப்பினேன். நீங்களும் துஆ செய்தீர்கள். துஆ செய்தததை பதில் மின்னஞ்சலில் தெரிவித்தீர்கள். என் தந்தையாருக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. தற்போது என் தந்தையார் பூரண நலமாயிருக்கிறார். நன்றி சொல்லிப் போக நேரில் வந்தேன்!”
“நன்றியை அல்லாஹ்வுக்கு சொல்லுங்க பாய்!”
“உங்களைப் பற்றி நான் சில நாட்களுக்கு முன் உங்க தெரு நண்பரிடம் போனில் விசாரித்தேன். நீங்கள் பிறருக்காக துஆ செய்வதை கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருவதாக கூறினார். வெட்கிப் போனேன். சுயநலத்தை மூட்டை கட்டி எறிந்துவிட்டு நானும் பிறருக்காக துஆ செய்ய ஆரம்பித்துள்ளேன்!”
“எக்ஸலன்ட்!”
“பிறருக்காக துஆ உங்களிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்து உங்களுக்கு என்னென்ன ஆவலாதி இருக்கிறது என தெரு நண்பரிடம் கேட்டேன்!”
“என்ன சொன்னார்?”
“உங்களுக்கு எட்டு வருடங்களாக குழந்தை இல்லை என சொன்னார். உங்களுக்கு நான் தரும் சிறப்பு பரிசு என் வேண்டுதலே”
“இப்படி எல்லா முஸ்லிம்களும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும்? உங்க துஆவினால் நான் நல்லா இருப்பேன். என் துஆவினால் நீங்க நல்லாயிருப்பீங்க. அவங்க துஆவினால் இவங்க நல்லாயிருப்பாங்க. இவங்க துஆவினால் அவங்க நல்லாயிருப்பாங்க. மொத்தத்துல உலகம் நல்லாயிருக்கும்”
உமர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளறையில் ஓங்கரிப்புடன் கூடிய வாந்தி சப்தம் எழுந்தது.
உமர் ஓடினான்.
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் மஹ்ஜபீன்.
திருத்துறைப்பூண்டிகாரர் அங்கிருந்தே குரல் கொடுத்தார். “என்னை விருந்து உபசரிக்கிறது அப்றம் பாத்துக்கலாம். சகோதரியை மகப்பேறு மருத்துவர்கிட்ட கூட்டிப்போய் செக் பண்ணுங்க!”
பரிசோதித்து விட்டு மருத்துவர் இறைவனின் குரலில் அறிவித்தார். “கங்கிராட்ஸ். உங்க துணைவியார் கர்ப்பமாயிருக்காங்க!”
பேரானந்தித்தான் உமர். “நீ பிறருக்காக துஆ செய்ததற்கான மீதி நன்மைகளை ஒவ்வொன்றாய் நிறைவேத்தித் தருவேன் ஆதத்தின் மகனே!” என்றான் இஸ்முல் அஃலம் எனவும் பெயர் கொண்ட அல்லாஹ்.

Leave a comment
Upload