
சொல்லகராதியிலும் வேண்டாமே
உளைச்சலென்ற சுடு வார்த்தை
வழக்கொழிந்து போகட்டும்
மனவுளைச்சலென்னும் கொடுவார்த்தை
கல் பட்டால் தெறித்து விழும்
ரசம் பூசிய கண்ணாடி
சொல் பட்டால் தெறித்து விழும்
மனமென்னும் கண்ணாடி
பேசத்தெரிந்த மிருகமென்ற
பேரிருக்க அதனாலே
சுடுவார்த்தை கொடுவார்த்தை
முட் கிரீடம் எதற்காக…?
சிரிப்பு மருந்து புண்ணாற்றும்
இனிப்பு வார்த்தை ரணமாற்றும்
நலம் விசாரிப்பும் நல்ல வார்த்தையும்
புத்துணர்வூட்டும் புது வாக்கும்
சிந்தனையை செப்பனிட்டு
மகிழ்ச்சிக்கு அடிகோலும்
வார்த்தைகளைப் பண்படுத்தி
எண்ணங்களில் களையெடுப்போம்
படைப்போம் புது உலகம்
சச்சரவுகள் இலா உலகம்
இன்சொல் அமுதமதை
எல்லோர்க்கும் பங்கிடுவோம்
சொல்லேருழவரின் சீர்பட்ட பேச்சதனால்
நேர்மறை எண்ணங்கள் வளரட்டும்
ஊக்கமூட்டும் பேச்சுக்கள் தொடரட்டும்
உலகம் மகிழ உவகை பொங்கட்டும்...

Leave a comment
Upload