தொடர்கள்
அனுபவம்
சப்பாத்தி விற்கும் கலைஞர்... - மாலாஸ்ரீ

20200617192646380.jpg

கொரோனா, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒரு புரட்டி போட்டுவிட்டது. இதில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

ஒவ்வொருவரும், பிழைக்க புதுவழி தேடுகிறார்கள். திருப்பத்தூரில் கோயில் மற்றும் திருமண விழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு கலைஞர், தற்போது வீடு வீடாக சென்று சப்பாத்தி விற்றுக் கொண்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ளது திருத்தளிநாதர் யோகபைரவர் கோயில். இங்கு மூன்று தலைமுறையாக நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபுசங்கர் (42). இவர் கோயில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள், திருவிழா காலங்களில் நாதஸ்வர இசை மூலம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தவர்.


தற்போது கடந்த 4 மாதங்களாக கொரோனா நோய்தொற்று மற்றும் தொடர் ஊரடங்கினால் கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட எவ்வித சுபநிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. இதனால் பிரபுசங்கரின் குடும்பம் உரிய வருமானமின்றி வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி தவித்தது.

இந்நிலையில், தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரபுசங்கர் சப்பாத்தி வியாபாரத்தில் களமிறங்கியுள்ளார். இதனால் நாதஸ்வரம் பிடிக்க வேண்டிய அவரது கைகள், நாள்தோறும் சப்பாத்தி மாவை பிசைந்து உருட்டி, அவற்றை அப்பளம் போல் இட்டு வேகவைத்து, பாக்கெட் செய்து வருகிறார். அத்துடன், ஒவ்வொரு நாளும் ஒரு காய்கறி குருமாவை தயாரித்து, டூ-வீலரில் எடுத்துச் சென்று, வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். தற்போது அவரது கைவண்ணத்தில் உருவான சப்பாத்திக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் உருவாகி, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து ‘கொரோனா ஊரடங்கில் யாரிடமும் கையேந்த மனமில்லை. பின்னர் எனது மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த சப்பாத்தி விற்பனை நடக்கிறது. இதன்மூலம் எனக்கு ஒரு நாளைக்கு ₹1000 வரை சம்பாதிக்க முடிகிறது. கோயில் பக்தர்களின் ஆதரவினால், எனது குடும்பத்தினர் பசியின்றி வாழ்வதே சந்தோஷமாக இருக்கிறது’ என பிரபுசங்கர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.