தொடர்கள்
தொடர்கள்
டேஞ்சர் தேசம் - 73 - சுதாங்கன்

20200617210606625.jpg

தமது எலும்பால் மட்டுமே ஆனது போன்ற உள்ளங்கையை மவுண்ட்பேட்டனின் முழங்காலின் மீது வைத்து அழுத்திய ஜின்னா, ‘ஆண்டவனுக்கு நன்றி உங்களை உயிருடன் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்’ என்றார்.

மவுண்ட்பேட்டன் அடங்கா ஆச்சரியத்துடனும், திகைப்புடனும் ஜின்னாவைப் பார்த்தார். ‘என்ன கொழுப்பு இந்த மனிதனுக்கு?’ என்றெண்ணிய அவர், ‘நீங்கள் என்னை உயிருடன் கொண்டு வந்து சேர்த்தீர்களா? என்ன தைரியம்! நான்தான் உங்களை இங்கு உயிருடன் கொண்டு வந்து சேர்த்தேன்’ என்றார்.

மவுண்ட்பேட்டன் கூறியதுதான் உண்மை. ஜின்னாவின் காரில் குண்டை எறிய நியமிக்கப்பட்ட பலர் வாய்ப்பான இடங்களில் நின்றிருந்தார்கள். ஆனால் இவர்கள் குண்டை எறியலாம் என்பதற்கு சிக்னல் கொடுக்க வேண்டிய ஆசாமி, காரில் மவுண்ட்பேட்டனுடன் இருப்பதைக் கண்டு தமது எண்ணத்தை
மாற்றிக்கொண்டார்கள். ‘காரில் குண்டு எறியப்பட்டால், ஜின்னாவுடன் மவுண்ட்பேட்டனும் சாவது உறுதி. மவுண்ட்பேட்டனுக்கும் அவர்களுக்கு எந்த விரோதமும் இல்லை. அவரோ இந்தியாவின் வைஸ்ராய். பிரிட்டிஷ் ராஜ குடுமத்தைச் சேர்ந்தவர். இவரை சேர்த்துக் கொல்வதினால் ஏற்படும் விபரீதங்களுக்குக் பெரும் விளைவுகளுக்கு காரணமாகி விடக்கூடும். வேண்டாம்’ என்று முடிவு செய்த குறிப்பிட்ட சிக்னல்களை காட்டாமல் ஒதுங்கிப் போய்விட்டார்கள், குண்டுகளை எறிய நியமிக்கபட்டவர்கள். சிக்னல் வராததால் குண்டுகள் எறியப்படவில்லை.

மவுண்ட்பேட்டன் அன்று அந்தக் காரில் பிரயாணம் செய்யாமலிருந்தால் இந்திய உபகண்டம் இரத்தத்தில் குளித்திருக்கும் என்பது முதல் விஷயம். அடுத்ததாக இந்தியாவின் அரசியல் முகமே வேறுவிதமாக மாறியிருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து.

எதைச் செய்தாலும் நாளும் கோளும் பார்த்து செய்கிற இந்த நாட்டில், அந்நாட்டின் சுதந்திர உதயத்தைக் குறிக்க எந்த நாள் சிறந்த நாள் என்று ஜோசியம் பார்க்க வேண்டாமா? விஷயம் தெரியாமல் தனக்கு சிறந்த நாள் என்று அவர் நினைத்த ஒரு தேதியைக் குறிப்பிட்டுவிட்டு, மவுண்ட்பேட்டன் பிரபல ஜோசியர்களிடம் வகையாகச் சிக்கிக்கொண்டார். கடைசியில் என்ன நடந்தது?

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினம் என்று லார்ட் மவுண்ட்பேட்டன் அறிவித்தது, அவர் தற்செயலாக எடுத்த முடிவு. அவர் இந்தத் தேதியைக் குறிப்பிடப் போகிறார் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லிக்கோ, அவரது அந்தரங்க ஆலோசகருக்கோ கூட அந்த நிமிஷம் வரையில் தெரியாது.

இந்தியா, பாகிஸ்தான் இவற்றுக்குச் சுதந்திரம் அளிப்பது பற்றிய விவரங்களை அறிவிக்க அவர் கூட்டி இருந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகப் பத்திரிகையாளர்கள் கூடி இருந்தார்கள். மவுண்ட்பேட்டன் எல்லா விவரங்களையும் கூறிப் பேசி முடித்ததும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கடைசிக் கேள்வியாக ஒரு நிருபர் கேட்டார். ‘வெகுவிரைவில் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க நீங்கள் முடிவு செய்திருப்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அது என்றைக்கு? ஒரு குறிப்பிட்ட தேதியை நீங்கள் முன்னதாகவே நிர்ணயித்திருப்பீர்கள் அல்லவா?’ என்று கேட்டார்கள்.

அதுவரையில் அது என்றைக்கு என்று நினைத்திராத மவுண்ட்பேட்டன், ‘என்றைக்கானால் என்ன? ஏதாவது ஒரு தேதியைக் குறிப்பிடுவோம் என்று முடிவு செய்து, ‘ஆம், ஒரு தேதியை முடிவு செய்திருக்கிறோம்’ என்றார். ‘அப்படியானால் தேதியைத் தெரிவிக்கலாமே’ என்று கேட்டார் ஒரு நிருபர்.

எந்தத் தேதியைக் குறிப்பிடுவது? சில வினாடிகளில் அவர் உள்ளம் வேகமாகப் பல கணக்குகளைப் போட்டது.

பஞ்சாப் கிராமம் ஒன்றில் அவர் கண்ட வெட்டிச் சிதைக்கப்பட்ட மனித உடல்களும், லாகூரில் பார்த்த முற்றிலும் எரிந்து போன கடைத்தெருவும், தீயினால் அடையாளம் தெரியாமல் கருகிப்போன சடலங்களும் அவர் நினைவுக்கு வந்தன. ‘வெடித்துச் சிதற தயாராயிருக்கும் இந்தியா என்கிற வெடிமருந்துக் கப்பலில் உட்கார்ந்திருக்கிறோம் எவ்வளவு விரைவில் சுதந்திர தினத்தை தீர்மானிக்கிறோமோ, அதனைப் பொறுத்து பல விளைவுகளைத் தவிர்க்க முடியும். ஆனால் அது ஏதாவது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேதியாக இருக்க வேண்டும். எந்தத் தேதி...’ என்று தீவிரமாகச் சிந்தித்த அவருக்கு திடீரென்று ஏழரை லட்சம் ஜப்பான் ராணுவத்தினரின் சரணாகதியை தான் ஏற்றுக்கொண்ட தேதி நினைவிற்கு வந்தது. ஆகஸ்ட் 15. பல சிரமங்கள், தோல்விகள், ஏராளமான இழப்புக்களுக்குப் பின் அவர் ஒரு வெற்றி வீரராக ஜப்பானியர்களின் சரணாகதியை ஏற்றுக்கொண்ட தேதி அது! இதைவிடப் பொருத்தமான தேதி வேறு எது இருக்க முடியும்? என்றெண்ணிய அவர் ‘ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்’ என்று அறிவித்தார்.

அவருக்கு சிறந்த தினமாகத் தோன்றிய அந்த 1947 ஆகஸ்ட் 15ந்தேதி இந்தியாவின் மிக முக்கியமான ஒரு பிரிவினருக்கு அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அது, இந்நாட்டின் அவசியமான ஒரு அங்கமாக இருந்த ஜோதிடர்கள்.

இந்தியாவின் நகரங்களிலும், அதன் ஆறு லட்சம் கிராமங்களிலும் ஜனத்தொகையைப் பொறுத்து ஏராளமான ஜோதிடர்கள் உண்டு. அப்போதிருந்த 565 இந்திய மகாராஜாக்கள், மன்னர்கள் போன்றவர்களிடம் ஆஸ்தான கவிஞர் என்பது போல ஆஸ்தான் ஜோதிடர்களும் உண்டு.

வீடு வாங்குவது, கட்டுவது, மாடு வாங்குவது, குடிபோவது, வியாபாரம் ஆரம்பிப்பது, கொடுக்கல் வாங்கல், பிரயாணம் புறப்படுவது ஆகிய எல்லாவற்றிற்கும் ஜோதிடர்கள் நாளும் நேரமும் குறித்துக் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. அப்படிப்பட்ட ஒரு நாட்டின் சுதந்திர உதயத்தை நாள் நட்சத்திரம் பாராமல் முடிவு செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

அங்கே தான் மீண்டும் குழப்பம் வந்தது.

(தொடரும்)