
இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தனிநபர்களுக்கு இடையே சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மற்றும் குடும்ப உறவுகளை தொட்டுக்கூட பார்க்க முடியாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதுவகையான ‘கட்டிப்பிடி வைத்தியம்’ பிரபலமாகி வருகிறது. அதாவது, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் டென்ஷன் மற்றும் நோய் பீதியுடன் இருப்பவர்களை கமல்ஹாசன் கட்டிப் பிடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவாரே!.. அதேபோல், இஸ்ரேல் நாட்டில் மக்கள் கொரோனா டென்ஷனை குறைக்க, இயற்கை மற்றும் பூங்காக்களை நிர்வகிக்கும் ஒரு அமைப்பு, அங்குள்ள மரங்களை கட்டிப் பிடிப்பதன் மூலமாக கொரோனாவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை மக்களிடம் விரட்டலாம் என தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அபோலோவியா தேசிய பூங்காவின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் ஓரிட் ஸ்டெய்ன்பெல்ட் கூறுகையில், ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இயற்கையிடம் சரணடைய வேண்டும். தீவிர மனஅழுத்தம் உள்ளவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு நாம் மூச்சு பயிற்சி செய்து, அங்குள்ள மரங்களை கட்டிப் பிடித்து, அதன்மீது நமது அன்பை செலுத்தலாம்’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இஸ்ரேல் நாட்டில் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள மரத்தை கட்டியணைக்கும் புதிய நடைமுறைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. .
கடந்த ஏப்ரல் மாதம் ஐஸ்லாந்து வனத்துறை அறிமுகப்படுத்திய மரங்களை கட்டி அணைப்போம் என்பதன் தொடர்ச்சியே, இஸ்ரேல் நாட்டிலும் தொடர்ந்தது என குறிப்பிடலாம்.

Leave a comment
Upload