
சாலைகள் அல்ல சோலைகள்...
வஞ்சி நகரில் மணிமேகலையின் பயணம் தொடர்ந்தது .கோட்டையின் மதிலைக் கடந்து, நகரின் முக்கியத் தெருக்களின் வழியே அவள் கால்கள் விரைந்தன. அந்த வீதிகளை அழகு மிளிர காட்சிப்படுத்தியுள்ளார் மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் . இப்பகுதி வஞ்சி நகரின் எழில் மிக்க வீதிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
மணிமேகலை நடந்து செல்கையில், வணிகர்களும், பலவித தொழில் புரிவோரும் வாழ்ந்து வந்த அந்த நகரின் தெருக்களைக் கண்டாள் . அகன்ற வீதியில் அரசனின் கடைவாயிலில் காவல் புரியும் காவலர்கள் வாழ்ந்து வந்தனர் .அதன் பின் நீளும் தெருக்களில் 'விலைஞர் ' என்னும் சிறு வணிகம் செய்பவர் வாழ்ந்து வந்தனர். பலவகையான மீன்களை விற்பவர் , வெண்மையான உப்பு விற்பவர்கள், பிட்டு விற்பவர்கள், அப்பம் விற்பவர்கள், ஆட்டிறைச்சி விற்பவர்கள், வெற்றிலை விற்பவர்கள் பஞ்சவாசம் (ஐந்து மணப்பொருட்களான ஏலக்காய் , தக்கோலம், இலவங்கம் , சாதிக்காய் , கற்பூரம்) விற்பவர்கள் ஆகியோர் வாழும் தெருக்கள் விரிந்தன.
இந்த வீதிகளைக் கடந்த பின்னர் பல்வகைத் தொழில் செய்வோர்கள் வாழும் தெருக்கள் வந்தன . மண்பாண்டம் செய்யும் குயவர்களும் , செப்புப் பாத்திரம் செய்பவரும், வெண்கலப்பாத்திரம் செய்பவரும், பொன்வேலை செய்யும் தட்டாரும் ,மரத்தொழில் செய்யும் தச்சரும், மண்ணைப் பிசைந்து வேலைகள் செய்யும் கொத்தனார்களும் , வரம் தரும் தெய்வ உருக்களை வரையும் ஓவியக் கலைஞர்களும் , தோல் வேலைகள் செய்யும் செம்மாரும், தையல் தொழில் செய்பவரும், மாலைகள் கட்டுவோரும் , காலத்தைக் கணக்கிட்டு சொல்வோரும் ,பண்ணிசைக்கும் பாணரும் வாழும் வீதிகளைக் கடந்தாள் மணிமேகலை .
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும்
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
(கச்சி மாநகர் புக்க காதை 31-43)
பின்னர் அரம் கொண்டு சங்குகளை அறுத்து கை வளையல்கள் செய்பவரும், ஒளிசிந்தும் நவமணிகளைக் கொண்டு ஆபரணங்கள் செய்பவரும் வசிப்பிடங்கள் உள்ள தெருக்களைக் கடந்தாள் அவள். அரசருக்குகென்று 'வேத்தியல் ' நடனமும், மக்களுக்கென்று 'பொதுவியல் ' நடனமும் ஆடும் ஆடல் மகளிர் வாழும் தெருக்கள் அங்கு இருந்தன. எட்டுவகையான தானியங்களை தத்தம் பகுதிகளில் தனித்தனியாக குவித்து வைத்திருக்கும் கூலவாணிகர்கள் வாழும் பகுதிகள் வந்தன. அவற்றைத் தொடர்ந்து அரசனின் அவையில் நின்று கொண்டு அவன் புகழ் பாடும் 'மாகதர்கள்' , அமர்ந்து கொண்டு பாடும் 'சூதர்கள்' , நாழிகைகளை அறிவிக்கும் 'வேதாளிகர்' ஆகிய பிரிவினர்கள் வாழும் வீதிகள் இருந்தன.
பொன்னுக்கும் ,பொருளுக்கும் பதிலாக போகத்தைத் தரும் பொது மகளிர் இருப்பிடங்கள் உள்ள தெருவும் , கண்ணால் இழைகளைக் காண இயலாத மென்மையான நூலால் ,பல வண்ண ஆடைகளை உருவாக்குவோர் வாழும் தெருவும் , பொன்னின் மாற்றினை உரசி உரைப்போரின் தெருவும், மறையோர்கள் வாழும் தெருவும், அரசனின் பரந்து அகன்ற தெருவும், அமைச்சர்கள் வாழும் தெருவும் ஏனைய அரசியல் பணி செய்வோர் வசிக்கும் தெருவும் என வளம் மிக்க வீதிகள் வஞ்சி நகரில் இருந்தன .
மேலும் அந்நகரில் ஊர் மன்றங்களும் , அம்பலங்களும், சந்திகளும் , சதுக்கங்களும் இருந்தன . புதிதாக அழைத்து வரப்பட்ட யானைகளைப் பயிற்றுவிக்கும் யானைப்பாகரும் , பொன்மாலை அணிந்த குதிரைகளைப் பழக்கும் குதிரை 'வாதுவர்களும்' வாழும் வீதியும் மணிமேகலை கண்களால் கண்டவாறே வஞ்சி மாநகருள் நடந்து சென்றாள் .
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
(கச்சி மாநகர் புக்க காதை 51-61)
புகார் நகரும், மதுரை நகரும் சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டது போல மணிமேகலையில் வஞ்சி நகரும் , காஞ்சி நகரும் மணிமேகலையில் சிறப்பிக்கப்பட்டுள்ளன . பலவகை தொழிற் செய்யும் மனிதர்கள் தனித்தனியான வீதிகளில் வாழும் சமூக அமைப்பு அக்காலத்தில் இருந்துள்ளதை இரண்டு காவியங்களும் விவரிக்கின்றன.
தவிர , அங்கு அருவிகள் விழுமாறு அமைக்கப்பட்ட செங்குன்றங்களும் , நறுமணம் வீசும் மலர்ச்சோலைகளும், தேவர்கள் வந்து தங்கத் தகுந்த நீர்நிலைகளைக் கொண்ட இடங்களும் கூடங்களும், பொன்னம்பலமும் , சித்திரக் கூடங்களும் அழகுடன் விளங்கின. அவற்றையெல்லாம் கண்டு களித்தவாறு மணிமேகலையின் பயணம் தொடர்கிறது...
-தொடரும்

Leave a comment
Upload