தொடர்கள்
கதை
சர்மாஜியின் கொரோனா வைத்திய சாலை! - கி.கல்யாணராமன்

20200617193521609.png

சர்மாஜி கொரோனா பற்றி பெரிய ஆராய்ச்சி செய்தார். முடிவில் கொரோனா வைத்தியசாலை ஆரம்பிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். எதற்கும் தனது மனைவியிடம் இது பற்றி ஆலோசிக்கலாம் என்று முடிவு செய்தார்.

காலையில் மனைவி காப்பி கொடுக்கும்போது, “அபிதா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ். நான் கொரோனாவுக்கு மருந்து கண்டிபிடித்துவிட்டேன்.”

“என்னது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டீர்களா? எப்படி, என்ன மருந்து , அது எங்கே இருக்கு?”

“இரு. அவசரப்படாதே. இது மருந்து மட்டும் இல்ல . பலவிதமான சிகிச்சை முறை. நான் உடனே ஒரு கொரோனா வைத்திய சாலை ஆரம்பிக்கப் போகிறேன்.”

“இப்படி சொன்னால் எப்படி?. என்ன மருந்து?. என்ன என்ன வைத்ய முறை.? என்னிடம் சொல்லக்கூடாதா? எதையாவது செய்து உங்களுக்கு கொரோனா வந்துவிடப்போகிறது!”

“சோம பானம் சுறா பானம் இரண்டும் அமானிதா மஸ்கரியா, சைலோசைப் கியூபென்சிஸ், பெகனம் ஹர்மலா மற்றும் எபெட்ரா சினிகா.. போன்ற பல மூலிகைகளை கலந்து தயாரித்த வேத காலத்து மருந்துகள்.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”

“கூகிள் விக்கிபிடியா இதெல்லாம் படித்தேன். அது மருந்து மட்டும் இல்ல. அதை சாப்பிட்டா எந்த வியாதியும் கிட்ட வராது. அது மட்டும் இல்ல மனிதன் சாகா வரம் கிடைத்தவனாகிவிடுவான்.”

“அதெல்லாம் மருந்து இல்ல. அதெல்லாம் அந்தக் காலத்துல போட்ட சரக்கு. அதாவது அந்தகால குடி. இப்ப அதப்பத்தி எதுக்கு பிரஸ்தாபம்?”

“அதுலதான் மருந்து இருக்கு!”

“ஆனா அந்த சோம பானம் சுறா பானம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. இதுவரை அத யாரும் கண்டுபிடிக்க முடியல.”

“நான் கண்டுபிடித்துவிட்டேன்.”

“என்னத்த கண்டுபிடிச்சீங்களோ.. சரி. அதை என்ன செய்ய வேண்டும்?”

“உனக்கு ஒன்று தெரியுமா? கொரோனா ஒருவருக்கு வந்தால் சில நாட்கள் அது அவரது மூக்கிலும் தொண்டையிலும்தான் குடி இருக்கும்”

“ஆமாம். அதற்கு என்ன.. நீங்க உங்க மருந்து பத்தி சொல்லுங்க. உங்க மருந்த என்ன செய்யவேண்டும்?”

“கொரோனா இருப்பவருக்கு வாய நல்லா பெருசா தொறந்து வாயில ஒரு பொனல் வைத்து ஐந்து லிட்டர் அந்த பானத்த ஊற்ற வேண்டும். அவரது மூக்கு வழியாக அது வரும் வரை ஊற்ற வேண்டும்.”

“அய்யோ.. அப்படி ஊத்தினா என்ன ஆகும்?”

“அப்படி ஊத்தினா.. அவர் தொண்டைலயும், மூக்கிலும் இருக்கும் கொரோனா வெளியே வந்துவிடும்”.

“கொரோனா என்ன கோலிகுண்டா? அப்படி எடுக்க? ஐயோ.. அப்புறம் அவ்வளவு பானம் குடித்த அந்த ஆள் என்ன ஆவது?. அதுல அந்த ஆள் மட்டையாகிவிட மாட்டானா?”

“அவர் குடித்தத வெளியே எடுக்க ஒரு வழி இருக்கு”.

“அது என்ன வழி?”

“நாம ஒரு ஏரி, இல்ல கடல்ல விழுந்து தண்ணீ நம்ம வயத்துக்குள்ள போனா என்ன செய்வோம்? அதுபோல அந்த ஆள ஒரு வண்டி சக்கரத்துல படுக்க வச்சு, கர கரன்னு சுத்தவேண்டும். அப்படி சுத்தினால் வயத்துக்குள்ள போனது எல்லாம் வெளியே வந்துவிடும். அப்படி வரும்போது கொரோனாவும் வெளியே வந்துவிடும்.”

“ஆள் பிழைப்பானா?”

“பிழைக்காமல் என்ன. அதுக்கப்புறம் கொரோனா அவன் இருக்கும் பக்கமே வராது. அவனிடம் இருந்து ஐநூறு கிலோமீட்டர் ஓடிவிடும்.!”

“அனேகமா இந்த மாதிரி எல்லாம் நீங்க செய்தால் அது கூட சேர்ந்து நீங்களும் ஐநூறு என்ன ஆயிரம் கிலோ மீட்டர் ஓடவேண்டி இருக்கும்!”

“உனக்கு இந்த வைத்தியம் எல்லாம் புரியாது!”

“இது ரொம்ப பயங்கரமான வைத்தியமாக இருக்கு. இது வேண்டாம். வேற வைத்தியம் இருக்கா?”

“இருக்கு. இரண்டாவது வைத்தியம் மூலிகை மூக்குப்பொடி. இது பதினாறு வகையான மூலிகையில் இருந்து தயார் செய்தது. இதை கொரோனா வந்தவர் மூக்குள்ள மூக்குப்பொடி மாதிரி சர்ர்ர்...னு போட்டால் போதும். அவர் நூறு தும்மல் போடுவார்.”

“அதோட ஆள் காலியா?”

“இல்ல. உடனே மூக்குல இருக்குற கொரோனா வெளியே பறந்து வந்துவிடும்.”

‘அத்தோட அந்த ஆளும் பறந்துடுவான், இதுவும் வேண்டாம். வேற வைத்தியம் இருந்தா சொல்லுங்க.”

“அடுத்தது பிரபு தேவா டான்ஸ்”

“அது என்ன?”

“முதலில் கொரோனா இருப்பவருக்கு நிறையா பிரபுதேவா டான்ஸ் பாடல்களை டிவியில் காட்டவேண்டும். அதை பார்த்துக்கொண்டே அவர் பிரபுதேவா மாதிரி டான்ஸ் ஆடி பழக வேண்டும். பிறகு கொரோனா இருப்பவர் ஐந்து லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு பிரபு தேவா போல டான்ஸ் ஆட வேண்டும்.”

“அப்படி ஆடினால் என்ன ஆகும்?”

“அவர் வயிற்றில் ஏற்கனவே ஐந்து லிட்டர் தண்ணீர் இருக்கு. அவர் பிரபுதேவா டான்ஸ் ஆடினால் கொரோனாவால் அவர் உடம்பில் இருக்க முடியாது. அது வெளியே வந்துவிடும்.”

“என்ன முட்டாள் தனம். அவ்வளவு தண்ணீர் வயிற்றில் வைத்துக்கொண்டு யாராவது டான்ஸ் ஆடுவார்களா?.. அதுவும் பிரபுதேவா டான்ஸ்? இதெல்லாம் சரியாக வராது. மிகவும் எளிதான ஒரு வைத்தியம் இருந்தால் சொல்லுங்க.”

“சரி. கடைசியாக ஒரு வைத்தியம். மிக மிக எளிதானது.”

“அது என்ன?”

“கொரோனா வந்தா, அந்த ஆள தலைகீழாக கட்டி தொங்கவிட்டு ஒரு குலுக்கு குலுக்கினா கொரானா வெளியே வந்துரும்.”

“அப்படியும் கொரோனா வெளியே வரலைன்னா?”

“அந்த ஆள தலைகீழா தொங்கவிட்டு அடியில நெருப்பு பற்ற வைக்கலாம்.”

“ஐயய்யோ, காட்டுவாசி செய்ற மாதிரி இருக்கே..அப்படியும் கொரோனா வெளியே வரலைன்னா என்ன செய்வது?”

“அந்த நெருப்புல கொஞ்சம் மிளகாப் பொடிபோடலாம். கொரொனா கதறிகிட்டு வெளிய வந்துவிடும்.”

“கண்றாவி.. இவ்வளவுதானா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?”

“கடைசியாக ஒன்று”

“அது என்ன எழவு.. அதையும் சொல்லித் தொலைங்க...”

“கொரோனா வந்த ஆள ஒரு இருட்டான அறையில் வைத்து பூட்டிவிடவேண்டும். அந்த அறையில் மிகவும் பசியாக இருக்கும் வவ்வால், எறும்பு உண்ணி, பாம்பு, தவளை, வெட்டுக்கிளி இன்னும் என்னென்ன எல்லாம் சாப்பிட்டால் கொரோனா வருமோ அதை எல்லாம் அந்த அறைக்குள் ஓன்று ஒன்றாக விடவேண்டும்.”

“எதுக்கு? அதை எல்லாம் அந்த ஆள் சாப்பிட்டா கொரோனா போயிடுமா?”

“அங்க தான் நீ தப்பு செய்ற. அப்படி உள்ளே போன வவ்வால் எறும்புண்ணி எல்லாம் பசியாக இருப்பதால் அந்த ஆளிடம் இருக்கும் கொரோனாவை சாப்பிட்டு விடும்..!”

“அந்த ஆள் என்னோவோ கொரானாவை தட்டில் வைத்துக்கொண்டு காத்திருப்பதுபோல.. நீங்களும் உங்க வைத்தியமும். ஆனால், இப்படியெல்லாம் நீங்க வைத்தியம் செய்வதாக வெளியே எல்லோருக்கும் தெரிவது நல்லது.”

“ஆஹா. என்னுடைய பெருமை இப்பவாவது உனக்கு புரிந்ததே...”

“குழந்தை மிகவும் அழுதால் அல்லது குறும்பு செய்தால் அதை பயமுறுத்த பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று சொல்வதுண்டு. அதைப்போல யாராவது தேவை இல்லாமல் வெளியே சுற்றுவது, கை கால்களை கழுவமால் இருப்பது, முகக் கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது என்று இருந்தால்... அவர்களிடம், ‘இப்படி சொல்வதை கேட்கமால் உனக்கு கொரோனா வந்தால், சர்மாஜியிடம் வைத்தியம் பார்க்க அனுப்பிவிடுவேன்’ என்று சொன்னால் போதும். அவ்வளவுதான். பயந்து நடு நடுங்கி உடனே எல்லாவற்றையும் சொன்னபடி கேட்பார்கள். இது போல ஆராய்ச்சி எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வேற வேலை இருந்தா பாருங்க.”

சர்மாஜி தனது ஆராய்ச்சி வெளி உலகத்துக்கு தெரியாமல் போனது பற்றி மிகவும் வருந்தினார்.